மகிழ்ச்சி!

இறை மொழி: யோவான் 15:11.

  1. என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

இறை வழி:

நாம் பெறும் இன்பம் சிறிது;
நம்மிறை தருவதோ பெரிது.
ஆம், இதை அறிவது அறிவு.
அறியார் நிலையோ சரிவு.
ஊமையும் பேசுவார் அழகு;
உண்மை அன்பில் பழகு!
தீமைகள் விட்டு நீ விலகு;
தெரியுமே மகிழ் வுலகு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

திருச்சட்டம்!

சட்டம்!

இறை மொழி:  யோவான் 15: 10.

  1. நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

இறை வழி:

இறை ஆணை, இறை சட்டம்,
இவற்றின் பொருள் அறிவீரா?
பிறை பார்த்து உரை கேட்கும்,
பெரியோரே நீர் சிந்திப்பீர்.
நிறைவான வாழ்வு ஒன்றை  
நேர்மை மீறிப் பெறுவீரா?    
கறை நீக்க தேவை அன்பு
காட்டும் இறை சந்திப்பீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இறையன்பு!

இறையன்பு!
இறைமொழி: யோவான் 15:9.

9. பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

என் வழி:

தந்தை இறையிடம் அன்பைப் பெற்று,
தரணியருக்கு இறைமகன் ஈந்தார்.
எந்தையர் அன்பை அவரிடம் கற்று,
எங்களுக்கும் பகிர்ந்து தந்தார்.
முந்தி இறையிடம் பெறுகிற அன்பு,
முக்காலமும் நிலைக்கும் என்றார்.
இந்த அன்பே இறைவனின் பண்பு;
ஏற்பவரும் அமைதி கண்டார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

யாருடன் இணைந்தோம்?

யாருடன் இணைந்தோம்?

இறை மொழி : யோவான் 15:7-8.

7. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

என் வழி:

தேருடன்  பூட்டிய குதிரைகள் இணைந்து
தெரு வழி சென்றால் நன்மை.
யாருடன் செல்கிறோம் என்பதை மறந்து,
எண் திசை நோக்கின் தீமை.
வேருடன் இணைந்து வளரும் செடியால்,
விளைகிற கனிகள் நன்மை.
ஆருடம் நம்பி அன்பைப் பிடியார்,
அறுவடை செய்வதோ தீமை!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா

கிளை!

கிளை!

இறை மொழி: யோவான் 15:4-6.

என் வழி:

முறிந்த கிளையால் பயனொன்றில்லை;
மூடர் பிரிந்து செல்கின்றார்.
உரிந்த பட்டை வளர்வதும் இல்லை;
உடையை கிறித்து நல்கின்றார்.
அறிந்த அடியார், தனியாய்ச் செல்லார்;
ஆண்டவரோடு கனி தருவார்.
எரிந்த விறகு எனப்படும் பொல்லார்,
ஏமாற்றமே இனி பெறுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

கனி!

கனி!

இறைவாக்கு: யோவான் 15:1-3.

  1. நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
  2. என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
  3. நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

இறை வாழ்வு:

எங்கே ஒருவர் என்னிடம் வந்து,
யானும் கிறித்தவனே என்றால்,
அங்கே அவரது செயலில் கிறித்து,
எங்கே என்று நான் பார்ப்பேன்.
இங்கே இப்படி கிறித்துவின் அன்பு,
இவரால் உதவி செய்யுமென்றால்,
பங்கம் இல்லா பழச் சாறென்று,
பாசத்தோடுதான் சேர்ப்பேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பேச்சைக் குறைப்போம்!

பேச்சைக் குறைப்போம்!
இறை வாக்கு: யோவான் 14:29-31

  1. இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
  2. இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
  3. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

இறை வாழ்வு:

நன்முறை எதுவென அறியாருக்கு,
நாளும் நாளும் சொல்கிறேன்.
வன்முறை அல்ல, வாள் வழியல்ல,
வாழும் அன்பால் சொல்கிறேன்.
என்னுரை கேட்க விரும்பருக்கு,
என் வாய் மூடிச் செல்கிறேன்.
இன்னுரை என்பது, இயேசு மொழிவது;
ஏற்பவர் தேடிச் செல்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

தன்னிலும் பெரியவர்!

தன்னிலும் பெரியவர்!

இறைவாக்கு:யோவான் 14: 28.

  1. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

இறை வாழ்வு:

இன்னில மக்களை மீட்பதற்கென்று,
இரங்கி ஏழையாய் வந்தவரே,
தன்னிலும் பெரியவர் தந்தையென்று,
தரணி வாழ்விலே சொன்னவரே,
என்னிலையாயினும் என்னிலுமின்று,
இருந்திட ஆவியார் தந்தவரே,
முன்னிலை மறவா மகனென இன்று,
முன்னே நின்றேன் என்னவரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

வேண்டாம் வெறி!

வேண்டாம் வெறி!

எரிந்த மக்கள், கோயில், வீடு,

ஏதோ மணிப்பூர் காட்டிலாம்.

விரிந்த பரந்த எங்கள் நாடு

விரும்பார், இப்படிக் காட்டலாம்.

தெரிந்த சிலரின் இவ்வித வாக்கு,

தீயை மீண்டும் கூட்டலாம்.

புரிந்த நண்பா, ஒளியே நோக்கு;

போகும் வெறி, கூட்டிலாம்!.

வருந்தி மன்றாடும்,

கெர்சோம் செல்லையா.

அமைதி!

அமைதி தாரும் ஆண்டவரே!

இறைவாக்கு: யோவான் 14: 27.

  1. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

இறை வாழ்வு:

எழுதும் எனக்கும், அமைதி தாரும்.
இங்கே தருபவர் எவருமில்லை,
அழுதும் அரற்றும், அகமும் பாரும்.
அப்படிக் கேட்பது தவறுமில்லை.
தொழுதும் பணிந்தும், தேய்ந்து மாறும்,
தெய்வ பிள்ளைக்குக் கதியுமில்லை.
விழுவது என்றும், தீங்கெனக் கூறும்;
விண்ணை மிஞ்சும் மதியுமில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.