தொட்டுப்பார்த்துச் சொல்லுங்கள்!

தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 24:38-40.  
38. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.  


கிறித்துவில் வாழ்வு: 


தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

தூயன் உயிர்ப்பு பொய்யன்று . 

கட்டிப் பிடித்துச் சொல்லுங்கள்;  

காணும் காட்சி பொய்யன்று. 

தட்டும் நெஞ்சுள் சொல்லுங்கள். 

தந்தை மைந்தன் மெய்யென்று.  

எட்டுத் திக்கும் சொல்லுங்கள்; 

இயக்கும் ஆவியர் மெய்யென்று.  


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

அமைதி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:36-37.  

கிறித்துவில் வாழ்வு:  
மாண்டிடும் மனிதக் காட்டினிலே, 
மண்டிக் கிடக்குமே அச்சம். 
தோண்டியெடுத்துப் பார்க்கையிலே,  
தொடர்ந்தும் வருமே மிச்சம். 
வேண்டிடும் அடியார் வீட்டினிலே, 
விளைந்து நிற்குமே அமைதி.  
ஆண்டவர் அருள்வது காண்பதற்கே,   
அழைப்பு ஏற்று வா நீ!  
-ஆமென். 

ஒரு மூலையிலிருந்து!

இழிவிலிருந்து இந்நாட்டை….எகிப்தில் அடிமையாயிருந்த யூதர்கள், உழைப்பால் உயர்ந்தது, உலக வரலாறு. ஒடுக்கப்பட்டு, துரத்தப்பட்டு, மரம் ஏறிய நாடார்கள், உழைத்து முன்னேறியது தென்னிந்திய வரலாறு. பள்ளம் தள்ளப்பட்ட பள்ளர்கள், உழைத்து முன்னேறி வருவது இன்றைய வரலாறு. இப்படி முன்னேறியவர்கள், இப்போது மற்றவர்களை எப்படிப் பார்க்கிறார்கள்? யூதர்களின் பார்வையில் ஆணவம் தெரிகிறது. நாடார்களின் பார்வையில், ‘நமக்கும் கீழே’ என்ற எண்ணம் தெரிகிறது. ‘பள்ளர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள்’ என்ற கருத்தும் பரவுகிறது. இப்படி, ஒவ்வொரு சாதியினரும், மற்றவரை மதிக்க மறந்து, மற்றவரும் மனிதர் என்று நினைக்க மறந்து, தவறிக்கொண்டே இருக்கின்றனர். இத்தவற்றை, அறிவு என்று கூறினாலும், ஆளுமை என்று நினைத்தாலும், முன்னோர்கள் செய்ததாயினும், இன்னாளில் செய்வதாயினும், தவறு தவறேதான். தவற்றிலிருந்து பிறப்பதும் தவறேதான்! இத்தவற்றை நீக்கும் ஒரேவழி, மாற்றாரை மதிக்கக் கற்றலே; மதிக்கும் அறிவு பெற்றலே. இறைமுன்னும், இந்நாட்டுச் சட்டம் முன்பும், யாவரும் ஒன்றே. எந்த இனத்தையும் உயர்த்தாதீர்கள். எந்த மனிதனையும் தாழ்த்தாதீர்கள்! உயர்வுமில்லை, தாழ்வுமில்லை. யாவரும் ஒன்றே! இவ்வறிவை வழங்கும் கல்வியே இன்றையத் தேவை. இவ்வறிவு பெற்றவர்களே, ஆசான்களாவீர், ஆசிரியர்களாவீர், அரசியல் தலைவர்களாவீர்; அறம் சார்ந்த அறிவைப் பரப்புவீர். இழிவிலிருந்து இந்நாட்டை நல்வழிப்படுத்துவீர்!

-கெர்சோம் செல்லையா.

கொழுந்துவிட்டு எரியட்டும்!

கிறித்துவில் வாழ்வு:  
கொழுப்படைந்த எங்கள் நெஞ்சம்,  
கொழுந்துவிட்டு எரியட்டும்.  
அழுக்கடைந்து அதனால் மிஞ்சும், 
அவையக்கட்டு உருகட்டும். 

இழுக்கு வந்து இழுக்கும் முன்னம்,  
இறையின் வாக்கு புரியட்டும். 
ஒழுக்கமின்மை உயரா வண்ணம், 
உண்மை வாழ்வு தெரியட்டும்!  
ஆமென். 
-கெர்சோம் செல்லையா. 

திருந்துதலே விருந்து!

திருந்துதலே விருந்து!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:30-31.  

கிறித்துவில் வாழ்வு: 
விருந்தினரென்று வீட்டில் வந்து,  
விருந்தளிப்பவர் இயேசு.  
இருந்துமில்லா கண்கள் திறந்து, 
இறைவன் முன்பு பேசு.  
வருந்திச்சேர்த்தும் பயன் தராது,   
வாழ்வளியா காசு.   
திருந்துதல்தான் விருந்து இன்று; 

தேவையற்றவை வீசு!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

பின்னால் நிற்கும் இயேசுவுக்கே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:28-29.  

கிறித்துவில் வாழ்வு:  
முன்பின் தெரியார் என்றாலும், 
முகம் அறியார் வந்தாலும், 
அன்பாய் ஏற்று அமுதளிக்கும், 
அரிய பண்பைக் கொண்டோமா?
இன்னாள் இப்படி நாம் செய்யும்,      
எல்லா நன்மை உதவிகளும்,  
பின்னால் நிற்கும் இயேசுவுக்காம்; 
பிறரில் இறையைக் கண்டோமா? 
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.  

முன்பே உரைத்தார்!

முன்னர் உரைத்தது நடந்திருந்தும்….
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:25:-27. 

கிறித்துவில் வாழ்வு:  
முன்னே அறிவோர் உரைத்திருந்தும், 
மோசே தொடங்கி வரைத்திருந்தும், 
பின்னே பலரெதிர் பார்த்திருந்தும்,     
பேதமை அடியரில் அகலலையே.  
சொன்னது போன்றே நடந்திருந்தும், 
சொற்படி உயிர்த்தவர் உடனிருந்தும்,  
என்னில மக்களை மீட்டெடுக்கும்,  
இறையறிவின்னும் புகலலையே!  
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.  

நம்பவில்லை!

நம்பவில்லை!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:22-24.  

கிறித்துவில் வாழ்வு:  
பெண்கள் வாக்கும் கேட்பதில்லை; 
பெரியோர் அறிவும் ஏற்பதில்லை. 
கண்கள் இருந்தும் திறப்பதில்லை. 

காரிருள் நெஞ்சும் சிறப்பதில்லை.  

நண்பா, நம்மிலும் இந்த நிலை. 
நம்ப மறுக்கும் மந்த நிலை.  

பண்பால் சிறப்பது எந்த நிலை?  
பற்றெனப் பற்றும் அந்த நிலை!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.