மறுமுறையா?

காலந்தராது மறுமுறையாம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:59-60.
59வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
6
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அழைக்கும்போது அடிபணிவதுதான், 
ஆண்டவர் காட்டும் இறைப்பணியாம்.
உழைக்கும் வலுவும் உதவும் பொருளும்,
உவந்து அருளக் குறைவிலையாம்.
பிழைப்பிற்கென்று போக்குச் சொல்லி,
போகாதிருத்தல் பொறுப்பிலையாம்.
கழைக்கூத்தாடி கடவுளை மறப்பின்,
காலந்தராது மறுமுறையாம்!
ஆமென்.

ஆடுகளைப் பாருங்கள்!

ஆடுகளைப் பாருங்கள்!


அறுப்பவரைத்தான் ஆடும் நம்பும்;

அதனைத் தடுப்பின், நம்மேல் எம்பும்.

வெறுப்பரசியல்தான் இன்று வெல்லும்;

வீணர் என்று நமையும் சொல்லும்.

பொறுக்கும் பண்பை இறையில் பாரும்;

பொங்கி எழுந்தால் துயரே சேரும்.

கறுப்பு ஆடுகள் நல்விலை போகும்;

கண்ணைத் திறவும், அவை கறியாகும்!


-கெர்சோம் செல்லையா.

எதுவரைக்கும் இறைவா?

எதுவரைக்கும் இறைவா?


தேன் போன்ற நற்செய்தி,

தென்னாடு தந்திடினும்,

நான் கேட்கும் நல்லாட்சி,

நமக்கில்லாக் குறையென்பேன்.

வான் வென்ற வலிமையென,

வாழ்த்து அவர் பாடிடினும்,

ஏன் என்று நான் கேளேன்;

எதுவரைக்கும் இறையென்பேன்?


-கெர்சோம் செல்லையா.

வீடு!

கிறித்துவின் வீடு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:57-58.

57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கூடில்லாத குருவியும் இல்லை;
குழியில்லாத நரியும் இல்லை.
பாடில்லாத மனிதரும் இல்லை.
படைத்தவர்க்கிங்கு வீடும் இல்லை.
கோடிகள் கூட்டி ஆளவும் இல்லை.
கோபுரம் கட்டி வாழவும் இல்லை.
கேடில்லாது திருப்பணி செய்வேன்;
கிறித்துவின் வீடே எனது எல்லை!
ஆமென்.

வேண்டாம் கொலைவெறி!

அழித்தல் பழித்தல் வேண்டாமே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:54-56.

54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பழித்திடும் மாந்தர் செயல் கண்டு,
பகைத்திடும் பண்பு எனில் வந்தால், 
அழித்திடும் அவ்வகைப் பண்புகளை;
அன்பில் வளர எனக்கிரங்கும்.
கொழித்திடும் தீயோர் நிலைகண்டு,
கொடுமை செய்ய நானினைந்தால்,
மழித்திடும் பேயின் இருப்பிடத்தை;
மன்னிப்பருளி எனிலிறங்கும்!
ஆமென்.

வழி வந்தழைத்தும்….

வழி வந்தழைத்தும் வராதவர்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:51-53.
51 பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி,
52 தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53 அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

கிறித்துவில் வாழ்வு:
எளியரை உயர்த்தும் எண்ணத்தோடு,
இறைமகன் வந்தும் ஏற்கவில்லை.
வழியறியாமல் வதங்குவாரிடத்து,
வழி வந்தழைத்தும் பார்க்கவில்லை.
தெளிவில் வறுமை இருக்கும்போது,
தெய்வ அருளும் சேர்ப்பதில்லை.
விழி திறப்பவராய் ஆவியர் வருவார்;
விண் வாக்கென்றும் தோற்பதில்லை.
ஆமென்.

வரலாறு!

பழங்கதையல்ல, வரலாறு!


பாட்டியின் பாட்டி யாரெனக் கேட்டால்,

பழங்கதை என்று சொல்வோரே,

போட்டியில் நாளை பேரரின் பேரர்,

பொருந்தா உம் பெயர் சொல்லாரே!

நாட்டினை அறிய நடந்தது அறிவீர்;

நன்மை இதுவெனச் சொல்வாரே.

கேட்டினை நீக்க, ஆய்வுகள் செய்து,

கீழடிப் பெருமை சொல்வீரே.


-கெர்சோம் செல்லையா.

அணைக்கும் அன்பு!

அணைக்கும் அன்பு!                  கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:49-50.

49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு: 
என்னைச் சார்ந்த திருக்கூட்டந்தான் 
இறைவனின் மக்கள் என்றுரைத்தால்,
முன்னும் பின்னும் அறியா மூடன்,
முதலில் நான்தான், அன்பர்களே.
இன்னும் இதுபோல் இறையறிவின்றி,
இயம்பும் யாவையும் கைவிட்டு,
தன்னலந் துறந்த இயேசு போன்று,
தாழ்ந்து அணைப்போம், நண்பர்களே!
ஆமென்.

பிள்ளைபோல் வாழ்!

பிள்ளைபோல் வாழ்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:46-48.

46பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
47இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
48அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பிள்ளை ஒன்றைத் தூக்கி எடுத்து,
பெரியோர் இவரே என்றுரைத்தீர்.
இல்லை இவரில் கள்ளம் செருக்கு;
இதுபோல் வாழென நன்குரைத்தீர்.
வெள்ளை அடித்தக் கல்லறையாக,
வெளியில் மட்டும் காட்டுகின்றேன்.
உள்ளம் கழுவும் உண்மை இறையே,
உம்மிடமே எனை நீட்டுகின்றேன்!
ஆமென்.

அருஞ் செயலின் பொருள்!

அருஞ்செயலும் ஆண்டவர் திட்டமும்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:43-45.

43அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி:
44நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக் குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அருஞ்செயல் கண்டு அதிசயித்தோம்;
ஆண்டவர் திட்டம் அறிந்தோமா?
பெருமிதம் கொண்டு புகழும் நாம்,
பேசும் அவர் சொல் புரிந்தோமா?
ஒருமுறைகூட ஒப்படைப்போம்;
உயிர்வாழ் நோக்கு உணர்வோமா?  
திருப்பணி என்றும் அவர் விருப்பாம்;
தெரிந்து அவருடன் இணைவோமா?
ஆமென்.