தாழ்மை!

தாழ்மையின் அடையாளம்!

இறைவாக்கு: யோவான் 13: 2-5.

  1. சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;
  2. தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
  3. போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
  4. பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

இறைவாழ்வு:

தாழ்மை என்ற சொல்லின் பொருளை,
தலைவர் இயேசு தருகின்றார்.
வாழ்வை வழங்கும் பணியில் சிறுமை
வந்தும் அன்பில் பெறுகின்றார்.
ஏழ்மை என்பது எண்ணில் அல்ல;
எண்ணம் என்று விளக்குகிறார்.
பாழாய்ப் போன நெஞ்சு கொடுப்போம்;
பண்பட இயேசு துலக்குகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

முன்னுக்குப் பின்!

முன்னுக்குப் பின்!

நம்முன் வந்து நம்மைப் புகழ்ந்து,
நல்லவன் என்று வாழ்த்துகிறார்.
தம்மிரு கால்கள் திரும்பும் போது,
தவறாய் ஏசித் தாழ்த்துகிறார்.
இம்மாதிரியார்  இருப்பது கண்டு,
ஏன்  நெஞ்சே நீ கலங்குகிறாய்?
சும்மா என்று தூக்கியே போடு;
சுட்ட வாக்கால் துலங்கிடுவாய்!

-கெர்சோம் செல்லையா.

அன்பு!

அன்பு!

இறை வாக்கு: யோவான் 13:1. 

இறை வாழ்வு:


என்று எங்கே எப்படி முடிப்போம்,

 என்று அறியா வாழ்க்கை இது. 

அன்று இயேசு உரைத்ததும் கேட்டோம்;

அவர் போல் நம்மால் இயலாது.

இன்று இதனை உணர்ந்து நடப்போம்;


இதுதான் இறைவன் விரும்புவது.

நன்று என்று சொல்வதும் கேட்போம். 

நற்பண்பிலே, அன்பு பெரியது!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

பொய்! பொய்!

பொய்! பொய்!

சின்னவனும் சொல்கிறான் பொய்.
பெரியவரும் சொல்கிறார் பொய்.
என்னகமும் சொல்லியது பொய்.
எங்கும் பொய், எதிலும் பொய்.
சொன்னதினால் வந்ததென்ன? பொய்!
சொத்து, மதிப்பு, யாவுமே பொய்.
இன்னிலையில் எங்குளதோ மெய்?
இறையிடம் பார், மெய், மெய்!

-கெர்சோம் செல்லையா.

என்ன பேசுகிறோம்?

என்ன பேசுகிறோம்?

இறைவாக்கு: யோவான் 12:5

50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

இறைவாழ்வு: 

எதை எதையோ பேசுகிறோம்.
எண்ணாமல் பேசுகிறோம்.
கதை கதையாய் பேசுகிறோம்.
கற்பனையால் பூசுகிறோம்.
அதை பின்னர் ஆராய்ந்தால்,
அறிவின்மை வீசுகிறோம்.
இதை மாற்றும் வழியுண்டா?
இறை உள்ளில் பேசட்டுமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

முடிவு கட்டும்!

முடிவு கட்டும்!
இறைவாக்கு: யோவான் 12:48-49.

48 – என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

49 – நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.  

இறைவாழ்வு:
நாக்கைச் சுழற்றி உரையாற்றுவதும், 
நன்மை அற்ற வினையாற்றுவதும்,
போக்கிடமறியா பொய்யின் வண்ணம்;
புண்ணின் தொடக்கம் நமது எண்ணம்.
தாக்கிடும் நோயைத் தடுத்தழிப்பதும்,
தந்த மகிழ்வைத் தொடர்ந்தளப்பதும்,
ஆக்கிடும் ஏசுவின் அருமைத் திட்டம்;
அவரருள் வாக்கே  முடிவு கட்டும்! 

ஆமென். 
கெர்சோம் செல்லையா. 

மீட்பதே பணி!

மீட்பதே பணி! 

இறை வாக்கு: யோவான் 12::46-47.

இறை வாழ்வு: 

வேட்கை இன்று விண்வரை சென்று,
வெறித்தனமாக ஆடுவதால்
மீட்பை விட்டு விடுபவர் கெட்டு,
மீளாத் துயரில் வாடுகிறார்.
சேட்டை செய்து சிறுமையும் எய்து,
சேதம் கண்டவர் தேடுவதால்,
ஆட்டை நடத்தி, அன்பில் கிடத்தி,
அருளும் கோனால் பாடுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

மைந்தனைப் பாரீர்!

இறைவாக்கு: யோவான் 12:44-45.

  1. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
  2. என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.

இறைவாழ்வு:

தந்தை இறையைப் பார்க்க விரும்பி,
தம் வழி செல்லும் மானிடரீர்,
மைந்தன் இயேசைக் கண்டு, திரும்பி,
மனது கொடுக்க, ஏன் மறந்தீர்?
தொந்திரவான மனிதரில் நிறுத்தி,
தூய்மையை நாடா மானிடரீர்,
எந்திரமான உம் செயல் விருத்தி
அடையுதே தீது; அது துறப்பீர்!

ஆமென்.

கெர்சோம் செல்லையா.

நாலடி நல்வாக்கு!

நாலடி நல்வாக்கு!

தன்னை உயர்வாய் எண்ணினவனும் கெட்டான்.
உன்னை தாழ்சாதி என்பவனும் கெட்டான்.
முன்னே இதனை அறியாதவனாய்க் கெட்டான்.
பின்னே அறிய மறுப்பவனும் கெட்டான்!

-கெர்சோம் செல்லையா.

  1. கெட்டான் = கெட்டுப் போனான்
  2. கெட்டான் = கெட்டவன்

என்ன பாடுகிறோம்?

இறையறிந்தோர், பாடுகிறார்!

காசு காசென்றே, ஓடுகிறார்;
கை நிறையவே, ஆடுகிறார்.
தூசு தூசென்றே, சாடுகிறார்;
துயரில், இறை தேடுகிறார்!
மாசு நீங்கிட யார் பாடுவார்?
மதி பொங்கிட யார் பாடுவார்?
ஏசு தங்கிட யார் பாடுவார்?
இறையறிந்தால், பாடுவார்!

-கெர்சோம் செல்லையா.