ஆயரில்லா ஆடுகள்!

ஆயரில்லா ஆடுகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:33-34.
“அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.”
நற்செய்தி மலர்:
தம் தம் விருப்பை நிறைவேற்றத்
தவற்றையும் செய்து சரியென்பார்.
தும் தும் என்று துள்ளித்தான்,
துன்பத் தீயில் எரிகின்றார்.
இம்மானுவலாம் இறைமகனோ
இவரையும் இரங்கிப் பார்க்கின்றார்.
அம்மாதிரியாம் ஆடுகளை
ஆயனாய்க் கூட்டிச் சேர்க்கின்றார்!.
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

எப்போதும் பணியா?

நற்செய்தி மாலை: மாற்கு 6:30-32.
“திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ‘ நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ‘ என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
எப்போதும் பணியே என்றிருந்தால்,
எவராய் இருப்பினும் சோர்புறுவார்.
அப்போதறிந்த ஆண்டவனார்,
அடியரை ஓய்வில் அனுப்புகிறார்.
இப்போதிதனை நாம் உணர்ந்தால்,
ஏற்படும் தோல்விகள் குறைவாகும்;
தப்புத் தவறுகள் ஓய்வெடுக்கும்;
தந்தையின் திட்டமும் நிறைவாகும்!
ஆமென்.

தமிழில் நற்செய்தி's photo.

யாவரும் நடிக்கின்றார்!

யாவரும் நடிக்கின்றார்!

கனி கொடுக்கும் மரத்தினையே
கல்லெடுத்து அடிக்கின்றார்.
காய்க்காத மரங்களையோ
கதை புகழ்ந்து படிக்கின்றார்!
இனிமை தரா அரசியலில்
யாவருமே நடிக்கின்றார்.
இதனால்தான் கண்ணீரை
எழையரும் வடிக்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

ஏழையரோ துடிக்கின்றார்!

யாவருமே நடிக்கின்றார்!
 
கனி கொடுக்கும் மரத்தினையே
கல்லெடுத்து அடிக்கின்றார்.
காய்க்காத மரங்களையோ
கதை புகழ்ந்து படிக்கின்றார்!
இனிமை தரா அரசியலில்
யாவருமே நடிக்கின்றார்.
இதையறியா ஏழையரோ
எந்நாளும் துடிக்கின்றார்!
 
-கெர்சோம் செல்லையா.

குடிப்பார், வெறிப்பார்…

நற்செய்திமாலை: மாற்கு 6:25-29.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ‘ திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும் ‘ என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.”
நற்செய்தி மலர்:
குடிப்பார், வெறிப்பார், கூப்பிடுவார்;
கொடுக்கும் வாக்கால் குழம்பிடுவார்.
நொடிப்பார்,வெடிப்பார், நொந்திடுவார்;
நிம்மதி தேடி அழுதிடுவார்.
துடிப்பார் தெளிவார், தேடிடுவார்;
தெய்வத்தின் வாக்கில் களிப்புறுவார்.
பிடிப்பார் இறைவன் பேரருளால்,
பேதமை நீக்கி வாழ்வளிப்பார்!
ஆமென்.

கோர்த்தாடும் மானிடரே …

கோர்த்தாடும் மானிடரே!
நற்செய்தி மாலை: மாற்கு 6:21-24
“ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ‘ உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் ‘ என்றான். ‘ நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன் ‘ என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ‘ நான் என்ன கேட்கலாம் ? ‘ என்று தன்தாயை வினவினாள். அவள், ‘ திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள் ‘ என்றாள்.”
நற்செய்தி மலர்:
பார்த்தாடும் பரத்தையர்கள்
பறித்திடுவார் வீடு.
ஆர்த்தாட வழிவகுக்க,
அழிந்திடுமே நாடு.
கோர்த்தாடும் மானிடனே,
கொணர்கின்றாய் கேடு!
வேர்த்தோடி விட்டுவிட்டு,
விண்ணரசை நாடு!
ஆமென்.