Month: May 2017
உவப்பில் வியப்போர்!
உவப்பில் வியப்போர்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:44-45.
“ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ‘ அவன் இதற்குள் இறந்து விட்டானா? ‘ என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.”
நற்செய்தி மலர்:
இறப்பின் செய்தி கேட்டு வருந்தி,
இரக்கம் கொள்வோர் வாழுகிறார்.
உறக்கம்கொண்டு மயங்குதல்போன்று,
உவப்பில் வியப்போர் தாழுகிறார்.
பிறக்கும் விளைவு எப்படியென்று,
புரியாதிவரும் ஆளுகிறார்.
திறக்கும் வாசல் தீமையை வீழ்த்த,
திடீரென்று மாளுகிறார்!
ஆமென்.
அரிமத்தியாரின் துணிவு!
அரிமத்தியாரின் துணிவு!
நற்செய்தி மாலை: மாற்கு 15:42-43.
“இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.”
நற்செய்தி மலர்:
அஞ்சி நடுங்கிய அடியார் ஒளிய,
அரிமத்தியாரோ துணிந்து சென்றார்.
கெஞ்சிக் கேட்பவராக அல்ல,
கிறித்துவின் உடலை உரிமை என்றார்.
மிஞ்சிப்போன பிலாத்துவும்கூட,
மேல் பேசாது வியந்து நின்றார்.
வஞ்சம் எதிர்க்கத் துணிவு வேண்டும்;
வாய்மையில் வாங்கினோர் வென்றார்!
ஆமென்.
ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்!
|
ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்!
இழிஞன் வினையால் இறந்தீரே!
இழிஞன் வினையால் இறந்தீரே!
நற்செய்தி மாலை: மாற்கு 15:37-39.
” இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ‘ இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பொன்னிலும் மேலாம் நன்னருள் மீட்பை,
புவியோர் பெறவே பிறந்தீரே.
என்னுயிர் மீட்க, இன்னுயிர் கொடுத்தீர்;
இழிஞன் வினையால் இறந்தீரே.
சென்னிறக் குருதி என்னையும் கழுவ,
சிலுவையில் யாவையும் மறந்தீரே.
இன்னிலத்தோர்கள் அன்பினில் வாழ,
இறைவழி திறந்துச் சிறந்தீரே!
ஆமென்.
இயேசு என்னும் மனிதன்!
இயேசு என்னும் மனிதன்!
நற்செய்தி மாலை: மாற்கு:15:33-36.
“நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘ என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘ என்பது அதற்குப் பொருள். சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, ‘ இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான் ‘ என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, ‘ பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
என் இறைவா, என் இறைவா,
ஏன் என்னைக் கைவிட்டீர்?
சொன்னவர் யார், இறைமகனா?
சொல்லுவரோ, இறைவனெனில்?
முன் நிலையில் இறைமகன்தான்;
முற்றிலுமாய்த் துறந்தவர்தான்.
இன்னிலையும் நமக்கெனத்தான்;
இயேசு அன்று மனிதன்தான்!
ஆமென்.
வற்றா ஆறு மன்னிப்பு!
வற்றா ஆறு மன்னிப்பு!
வற்றா ஆறு மன்னிப்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 15:29-32.
“அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ‘ ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள் ‘ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ‘ பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவர்கள், ‘ இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம் ‘ என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
கற்றோர் மற்றோர் யாவருடன்,
கள்வரும் இயேசுவை நிந்தித்தார்;
அற்றோர் மீட்பு அடைவதற்கே,
அன்பாய் அவற்றைச் சந்தித்தார்.
பெற்றோர் நம்மைப் பொறுப்பதுபோல்,
பேரன்பர் யாவும் மன்னித்தார்;
வற்றா ஊற்றாம் மன்னிப்பை,
வழங்கவே நமையும் முன்வைத்தார்!
ஆமென்.
தொங்கும் கள்வர் நடுவில் பார்த்தேன்!
தொங்கும் கள்வர் நடுவில் பார்த்தேன்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:25-28.
“அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க ‘ யூதரின் அரசன் ‘ என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக, இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
எங்கிருப்பார் நம் இறைவன் என்று,
எல்லா இடமும் தேடுகிறேன்.
இங்கே காணும் கோயில், குளத்தில்,
இருப்பாரோ என்றும் நாடுகிறேன்.
அங்கும் இல்லை, இங்கும் இல்லை,
ஆண்டவரின்றி வாடுகிறேன்.
தொங்கும் கள்வர் நடுவில் பார்த்தேன்;
தெய்வம் கண்டு, பாடுகிறேன்!
ஆமென்.
இப்படிக் கற்று மருத்துவராவோர்…..
இப்படிக் கற்று மருத்துவராவோர்,
எப்படி நம்மை நடத்திடுவார்?
அப்புறம் உடுக்க ஒன்றுந்தராமல்,
குப்புறம் படுக்கக் கிடத்திடுவார்!
-கெர்சோம் செல்லையா.