சுழலும் சாட்டை!

சுழலும் சாட்டை!


நற்செய்தி: யோவான் 2:13-16.  

நல்வழி: 

விற்பனை செய்யும் நற்பொருளென்று,

விடுதலை வாங்க வருவாருண்டு. 

கற்பனை சொன்னால் ஏற்பாரென்று,  

கடவுளை விற்கும் வணிகருமுண்டு.

நற்பணி என்றும் விற்பனையன்று.


நம்பியுழைத்தால் நன்மையுண்டு.

சொற்படி நடவார் செயலாலின்று,


சுழலும் சாட்டை வருகிறதுண்டு!  

ஆமென்.

செல்லையா.

காணும் அதிசயம்! காணப் பற்று!

அதிசயமா?  பற்றா? 
நற்செய்தி யோவான்: 2:11-12.  

நல்வழி

கண்ட அதிசயம், பற்றினைத் தரலாம்.   

காணாப் பற்றும், அதிசயம் தரலாம். 
அண்டுவோரிடம், ஆண்டவர் வரலாம். 
அண்டாதிருப்பினும், அவரே வரலாம். 
கொண்ட வேளையில், நன்மை உறலாம். 
கொடுக்கும்போதும், நன்மை உறலாம்.  
வண்டுபோல் தேடி எதனைப் பெறலாம்?  

வந்துதருகிற அருள் பெறலாம்! 
ஆமென். 
-செல்லையா. 

இனிப்பு!

இனிப்பு வழங்கும் வாழ்வு! 


நற்செய்தி: யோவான் 2:9-10.  

நல்வழி:  

தொடங்கும் நாளில் வழங்கும் இனிப்பு,   

தொடர் பணியென்று வர வேண்டும்.  


கிடங்கும் நிறைத்து, கேட்பவர்க்களித்து,   

கேளாரடையவும் தர வேண்டும்.  


முடங்கும் நெஞ்சில் முளைக்கும் கசப்பு, 


முற்றும் முடிய அற வேண்டும்.


அடங்கும் தீது, அதற்கிறை தூது,  


ஆவியரருளில் பெற வேண்டும்!  

ஆமென்.  


-செல்லையா. 

நீரும் சாறாகும்!

நீரும் சாறானது!

நற்செய்தி: யோவான்  2:6-8.  

நல்வழி: 


நீராய் இருந்த எளியன் வாழ்க்கை,
நெருப்பாய்க் கொதித்த வேளைகளில்,
சாறாய் மாற்றிப் பகிரக் கொடுத்தீர்.  
சான்றுரைத்தேன், வல்லிறையே.  

வேராய் இருக்கும் எனது பற்றை,  
வேண்டிய ஆழம் நீட்டுகையில், 
பேறாய் மகிழ்ச்சிச் சாறருள்வீர்;  
பேதையறிந்தேன், நல்லிறையே!

ஆமென்.

-செல்லையா.

என் தந்தையார்!

என் தந்தையார்! 

குடித்து வந்த மகனைக் கண்டு, 

குடியா தந்தை என் செய்வார்? 

அடித்து வைய விருப்பம் அற்று,

 அனுப்பி விட்டார், தந்தையார்.  

பிடித்து வந்த விவிலியம் கண்டு,   

பின்னாட்களில் என் செய்தார்?  

படித்து, அப்படி வாழு என்று,

பணித்து விட்டார், தந்தையார்! 

-செல்லையா.

அவர் வாக்கு கேளுங்கள்!

அவர் வாக்கு கேளுங்கள்!

நற்செய்தி :  யோவான்  2:5  

நல்வழி:  
மரியாள் கூறும் அறிவுரை கேளும்.
மதித்து நடக்க, நன்மையே நாளும்.  
சரியாய் இயேசு சொற்படி வாழும். 
சாத்தான் அகல, உண்மையே ஆளும்.  
திரியாய் எரியும் அன்னையைப் பாரும்.
தெரியும் நேர்வழி அடையவே வாரும்.  
பரிசாய் மீட்பும் கிடைக்கச் சேரும்.  
பாவியருக்கும், அன்பையே கூறும்! 
ஆமென். 
-செல்லையா. 

வேளை வரும்!

காலம், நேரம் கடவுள் கையில்!  

நற்செய்தி: யோவான் 2:3-4.  

நல்வழி:  

காலம் நேரம், கனியும் என்று,
கடவுளை நம்பிக் காத்திருப்போம். 
ஞாலம் மீளும் அவரால் இன்று;
நடக்கும் காட்சி பார்த்திருப்போம்.  
பாலம் ஒன்று இணைத்தல் போன்று,    
பலரை இறையுள் சேர்த்திடுவோம்.
கோலம் யாவும் அழியும் அன்று; 
கிறித்து வரவில் ஆர்த்திடுவோம்! 
ஆமென்.
-செல்லையா.

இல்லை, நண்பா, இல்லை.

இல்லை, நண்பா, இல்லை! 


‘சர்மா’ என்று பெயரும் இல்லை; 

சாதி காட்டும் உயர்வும் இல்லை. 

‘வர்மா’ என்று தொழவும்  இல்லை.  

வறுமை மட்டும் விழவும் இல்லை. 

‘கர்மா’ என்று அழைக்கவுமில்லை. 

கதைகள் கட்டிப் பிழைக்கவுமில்லை. 

‘தர்மா’ இங்கு குறையின்றி இல்லை.

தந்துவூட்டும் இறையன்றி இல்லை!


-செல்லையா. 

திருமணம்!

திருமணம்! 

நற்செய்தி: யோவான் 2:1-2.   

நல்வழி:  

இருமனம் இணையும் இல்லற வாழ்வு
இனிதாய் இருக்க விரும்புவதால்,   
திருமணம் என்கிற நறுமணச் சடங்கு,  
தேவை என்று உறவழைத்தோம்.  
ஒருமனம் ஒற்றுமை இல்லா வாழ்வு, 
உடையும் வீடாய் விழுவதினால்,   
அருமணம் என்கிற பொறுமை அன்பு, 
இருவரில் பெருக, இறையழைப்போம்!    

ஆமென். 
-செல்லையா.

காட்டுவீர் பெரிது!

காட்டுவீர் பெரிது!

நற்செய்தி: யோவான் 1:49-51.  

நல்வழி: 
கண்டவை சிறிது; 
காட்டுவீர் பெரிது. 
உண்டதும் குறைவு;  
ஊட்டுவீர் நிறைவு. 
மண்டையின் செருக்கு, 
மடமையின் பெருக்கு;
கொண்டயென் திருப்பு, 
கூறும் உம் விருப்பு! 
-ஆமென்.  
-செல்லையா.