உணவிற்காக!

உணவிற்காக மட்டும்!


நற்செய்தி: யோவான்: 6:30-31.   

நல்வழி:


உணவு கிடைக்கும் என்பதற்காக, 

ஒருவர் இறையை நாடுவது, 

நினைவு தெரிந்த நாளிலிருந்து,

நிகழும் அவலம், உழைப்போமா?

கனவு கண்டு கையையும் கட்டி,

கடவுள் மேல் பழி போடுவது, 

தினவு அரிக்கும் திட உடலாகும்,

திருந்தி, இறையை அழைப்போமா?  


ஆமென்.


-கெர்சோம்  செல்லையா.

எதைச் செய்தல் இறைவிருப்பு?

எதைச் செய்தல் இறைவிருப்பு?


நற்செய்தி: யோவான் 6:28-29.  

நல்வழி:


எதைச் செய்தல், இறைவன் விருப்பு,

என்று எண்ணும் மனிதராவோம். 

அதைச் செய்யும், வல்லமை பெற்று,

ஆண்டவரருளில் நிறைந்திடுவோம்.

கதைப் புனையும் கருத்தினை விட்டு,

கடவுளை மட்டும் நம்பிடுவோம்.

இதைச் செய்தால் இறைவன் ஏற்பார். 

ஏழைக்கென்றும் திறந்திடுவோம்!


ஆமென்.

பெரு வாழ்வு!

பெருவாழ்வு!
நற்செய்தி: யோவான் 6:27.

நல்வழி: 


உண்ணும் உணவில் உண்மை உண்டோ?

உழைப்பை இறைவன் மதிக்கிறார்.

பண்ணும் செயலில் நேர்மை உண்டோ?

பணியார் உணரவும் பதிக்கிறார்.

எண்ணம் செயலில் தூய்மைதானே,

இறைமகன் இருப்பின் முத்திரை. 

கண்ணால் காணும் காலம் வரையில்,

கனியாய் இருப்போம் இத்தரை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

உணவிற்கு ஏக்கம்!

உணவைத் தேடி!


நற்செய்தி: யோவான் 6:23-26.   

நல்வழி:


இல்லா உணவு கிடைக்காதா? 

ஏங்கித் திரியும் மானிடரே,

நல்லாயன்தான் தருகின்றார்.

நம்பி நடந்து பணிவீரே.

எல்லோருக்கும் உணவளித்தல்,

இறையின் திருப்பணி அறிவீரே.

பொல்லா ஐயம் இனி வேண்டாம், 

புரிந்தால் மீட்பு பெறுவீரே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

மாற்றம் தேவை!

மாற்றம் தேவை, ஊழியரில் மாற்றம் தேவை!


ஆறுதல் அளிக்கிற ஆவியர்தான்,

அறிவிக்கிறார், தெரிவிக்கிறார்.

மாறுதல் விரும்பும் அவரேதான்;

மாற்றுகிறார், மன மாற்றுகிறார்.

கூறுதல் நம் பணி என்பதில்தான்,

குழம்பி, பலபேர் தவறுகிறார்.

ஏறுதல் எங்கே? குரிசில் தான்;

இவ்வறிவுள்ளோர், மாற்றுகிறார்!


-கெர்சோம் செல்லையா.

கடல் மேல் நடந்தவரே!

கடல் மேல் நடந்தவரே!
நற்செய்தி: யோவான் 6:19-22.  19.

அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
20. அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
22. மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள்.


நல்வழி:


கடலைப் பிளந்தும், வழி அமைத்தீர்;

கடல்மேல் நடந்தும், கரை அடைந்தீர்.

உடலுக்குயிரைக் கொடுப்பவர் நீர்.

உம்மை விழுங்குமோ கடலின் நீர்? 

விடலைப் பருவத்தில் அஞ்சுகிறார்.

விளங்காதவரும் மிஞ்சுகிறார்.

திடமாய் விடாது பிடிப்பவர் யார்?

தெய்வம் பிடித்தவரே அடியார்! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

தாய் தந்தை நினைவிடம்!

தாய் தந்தை நினைவிடம்!


கட்டிட வடிவில் கல்லறை கட்டி,


காண்போர் புகழுரை கூட்டாமல்,

எட்டடி கீழே இருப்பவை உடல்கள்,

என்பதும் எழுதி மாட்டாமல்,

மட்டிலா அன்பு மகிழ்வாய் ஈந்த


மனங்களுக்காகக் கட்டியுள்ளோம்.

தொட்டிட இயலாத் தொலையிருந்தாலும்,

தூயோர் கூட்டைக் காட்டுகிறோம்.


-செல்லையாவின் பிள்ளைகள்.

இயேசு இல்லா படகு!

இயேசு இல்லா படகு!

நற்செய்தி: யோவான் 6:16-18.

16. சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், 17. படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். 18. பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.

நல்வழி:

தன்னினம் காக்கும் தலைவன் இல்லை;

தாயகம் வருந்தி வாடும்.

என்னரும் இறையும் என்னுடன் இல்லை.

என்போர் நிலையும் ஆடும்.

இன்னின்ன வழியே போக வேண்டும்,

என்கிற இயேசுவைக் கூடும்!

அன்பினில் விளையும் அமைதி வேண்டும்;

அருள்கிற அவரைப் பாடும்!

ஆமென்.

8Thompsonjoseph Jebathilak, Vinutha JeganNathan and 6 others3 Comments1 ShareLikeCommentShare

பொங்கல் வாழ்த்து!

இனிய பொங்கல் வாழ்த்து!


எங்கும் இனிமை மூடும் அழகை,

இந்நாட் பொங்கல் சொல்லட்டும்.

பொங்கும் உணவை நாடும் ஏழை

புசிக்க, அறமே வெல்லட்டும்!

தொங்கும் தொற்று ஓடும் என்ற,

துரித வாக்கும்  எட்டட்டும்.

அங்கும் இங்கும் ஆடும் நம்மில்,

அமைதி அருளும் கொட்டட்டும்!


இனிய பொங்கல் வாழ்த்து!, 

-செல்லையா,இறையன்பு இல்லம்,24, செயலகக் குடியிருப்பு,சென்னை-600099.

மூன்றாம் அலை!

அன்பர்களே,
வணக்கம்.
கொரோனா மூன்றாம் அலை கொடிதாய் வீசும் இந்நாளில், கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேச இதை  எழுதுகிறேன். முதலிரண்டு அலைகளால், இழந்து நிற்பாரையும், மூன்றாம் அலையால் சோர்ந்து நிற்பாரையும், முக்காலம் அறிந்த இறைவன் ஆற்றித் தேற்ற, முதற்கண் வேண்டி,  எழுதத் தொடங்குகிறேன்.
இந்த முறை நமது பகுதியிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருப்பினும், யாவரையும் காக்கும் பணியில், இந்திய-தமிழக அரசுகளும், மருத்துவத்துறையினரும், மாநகர் மன்றக் களப்பணியாளர்களும், காவல்துறை நண்பர்களும், மிகுந்த விழிப்புணர்வோடு இரவு பகலாக, உழைப்பதும், ஒத்துழைப்பதும் நமக்கு நம்பிக்கை தருகிறது. இவர்களை வாழ்த்துவோம்; இவர்களின் நற்பணிக்கு, நன்றி கூறுவோம்.
இந்நாட்களில் பாதிப்பிற்குள்ளானோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் இல்லம் செல்வதும், அவர்களைச் சந்தித்துப் பேசுவதும்  தவிர்க்கப்பட வேண்டியவைகளே. ஆயினும் அவர்கள் நலமடைய எண்ணலாம், இறையிடம் வேண்டலாம்; இயன்றவரை உதவலாம். இதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டோர் பாவம் செய்தோர் என்று அவரைத் தூற்றவும் வேண்டாம்; பாதிக்கப்படாத நாம் நன்மை செய்வோர் என்று நம்மைப் போற்றவும் வேண்டாம்.
தொற்றுக்கு, சாதி இல்லை, சமயம் இல்லை; மொழி இல்லை, இனம் இல்லை. வீடும் இல்லை, நாடும் இல்லை. இந்நோய் யாருக்கு வரும் என்று, தெரியவும் இல்லை. எப்படிப் பரவும் என்று புரியவும் இல்லை. எனவே, வீண் பேச்சு பேசி   வருத்தப்படுத்த வேண்டாம் என்று வேண்டுகிறேன்.
இந்த இக்கட்டு நாட்களில் யாரேனும் வழிகாட்டு அறிவுரை வேண்டின், இயன்ற அளவு உதவ நாங்கள் இருக்கிறோம் என்று கூறி,  உதவுவோம். இப்படி உதவிகள் புரிவோரையும் ஊக்குவிப்போம்.
இந்தத் தொற்றும் கடந்து போகும். வந்த அனைவருக்கும் நலம் ஆகும்.
நன்றி, நல்வாழ்த்துகள். 
-கெர்சோம் செல்லையா,செக்ரெட்டேரியட் காலனி,சென்னை-600099.