அறிவோம், அறிவார்!

அறிவார் அவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:25-27.

25வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
அன்பரைக் கண்டோம் என்பதல்ல;
அவருரை கேட்டோம் என்றுமல்ல;
இன்பமாம் விருந்தில் பங்குமல்ல;
இயேசுவுள் வருதலே கிறித்தவமாம்.
வன்முறை என்றும் நல்லதல்ல;
வஞ்சக நெஞ்சும் நன்மையல்ல.
நன்முறை கிறித்துவின் அன்பேயாம்;
நடந்தால் அவரும் அறிவாராம்!
ஆமென்.

இடுக்கமான வாசல்!

இடுக்கமான வாசல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா13:22-24.

22அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள் தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் பண்ணிக்கொண்டு போனார்.
23அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
ஒடுக்கும் மனிதர் கெடுக்கும் நாளில்,
உண்மை எங்கே ஒளித்திருக்கும்?
இடுக்கம் என்ற வாசலைப் பாரும்;
இதனுள் மீட்பாய் விழித்திருக்கும்.
நடுக்கம் தந்தோர் வழியும் பாரும்;
நால்வழிச் சாலைபோல் விரிந்திருக்கும்.
தடுக்கும் காவல் அடுத்தே இருக்கும்;
தண்டனைத் தீர்ப்பில் தெரிந்திருக்கும்!
ஆமென்.






புளித்த மா!

புளித்த மாவு போல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா13:20-21.

20மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
21அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கொஞ்சம் புளித்த மாவைச் சேர்த்தால்,
குடுவை முழுதும் புளிக்கிறது.
வஞ்சம் இல்லார் நம்மில் சேர்ந்தால்,
வாழ்வும் மகிழ்வால் களிக்கிறது.
அஞ்சும் தீமை அரசுள் நுழைந்தால்,
அதுவே அனைத்தினை அழிக்கிறது.
கெஞ்சும் நமக்கு அமைதி எங்கே?
கிறித்து அரசே அளிக்கிறது!
ஆமென்.

அந்நாள் – இந்நாள்!

அந்நாள் – இந்நாள்!


இல்லை இறைவன் என்றேன் அந்நாள்.

இறைதான் எல்லாம்  என்பது இந்நாள்.

நல்லோர் வாக்கு கேளேன் அந்நாள்;

நற்செய்தியாயெனக் கேட்பது இந்நாள்.

தலைமுடி நீட்டி வளர்த்தேன் அந்நாள்;

தாடையில் முடிகள் வளர்ப்பது இந்நாள்!

எல்லை தாண்டிச் சென்றேன் அந்நாள்;


இயேசு வழியில் செல்வது இந்நாள்.


-கெர்சோம் செல்லையா.

சிறிய விதை!

சிறிய விதை! பெரிய மரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:18-19.

18அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?19அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சிறிய விதையாய் விதைத்தது கண்டு,
சிரித்து இகழ்ந்தவர் அன்றுண்டு.
பெரிய மரமாய் வளர்வது கண்டு,
பேசி இகழ்வரும் இன்றுண்டு.
அரிய இயக்கம் இறையரசாகும்;
அதின் தொடக்கம் அற்பமாம்.
தெரிய வருந்நாள் திடீரென்றாகும்;
தெய்வ அடிமுன் நிற்போமாம்!
ஆமென்.

பொங்கல் வாழ்த்து!

பொங்கல் வாழ்த்து!


எங்கும் எவர்க்கும் உண்ணும் உணவை,

என்றும் தருமிறையே போற்றி.

பொங்கும் இனிய உணவில் அன்பை,

புகட்டும் நல்ல மனையே போற்றி.

மங்கும் நிலையில் மயங்கும் உழவை,

மகிழ்ந்து செய்யும் நட்பே போற்றி;

உங்கள் உழைப்பே நாட்டின் வலிமை;

உணரு தமிழ் இனமே போற்றி!


கெர்சோம் செல்லையா.

நன்மைக்கேது விடுமுறை?

நன்மைக்கேது விடுமுறையாமே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:14-17.

14இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
15கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
16இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
17அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எல்லா நாளும் இறையின் நாளே;
எம்மணித் துளியும் அவரினருளே.
செல்லா மடமை ஒழிக்கத்தானே,
செய்தார் இயேசு ஓய்விலுந்தானே.
இல்லா நன்மை கேட்போர் நாமே;
எடுக்கும்போது மணி பாரோமே.
நல்லாயிருப்பார் செய்வோராமே;
நன்மைக்கேது விடுமுறையாமே!
ஆமென்.


கூனல் நிமிரட்டும்!

பன்னெடுங்காலம் நிமிராதிருக்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:10-13.

10ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.11அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.12இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

கிறித்துவில் வாழ்வு:
பன்னெடுங் காலமாய்க் கூனிப்போனோர்,
பலபேர் இருக்கிறார், நம்நாட்டிலே.
இன்னிலம் மட்டுமே இவர் நோக்குகிறார்;
ஏறிட்டுப் பாரார், விண்வீட்டிலே.
என்செய்தால் இக்கூனல் அகலும்,
என்று ஆய்வோம், நல்லேட்டிலே.
அன்பின் இயேசு தொட்டிட நிமிர்வார்;
அதற்கு வேண்டுவோம் திருக்கூட்டிலே!
ஆமென்.

பயன்தரும் வாழ்வு!

நிலை நாட்டுகிறீர்!

கிறித்துவின் வாக்கு:

லூக்கா 13:6-9.

6அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
7அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
8அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,
9கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கனியற்ற பாழ்மரமாக இருந்தும்,
கனிவுடன் ஆண்டுகள் நீட்டுகிறீர்.
இனிமேலாவது பயன் தருவேனென,
எனது நாளையும் கூட்டுகிறீர்.
தனியனாய் என்னால் இயலாதென்றும்,
தலையினுள் அறிவு ஊட்டுகிறீர்.
பனிமழை, மண்வளம், உமது அருளே;
பணிவோரை நிலை நாட்டுகிறீர்!
ஆமென்.

அவர்களைப் பார்த்து!

அவர்கள் அநீதர், அதனால் இறந்தார்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:4-5.

4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அவர்கள் அநீதர், அதனால் இறந்தார்;
அப்படிச் சொல்லி மழுப்பாதீர்.
எவர்கள் எப்படிப் போனாலென்ன,
என்று நினைப்பினும் அழுக்காவீர்.
தவற்றை உணரார், தம்மைத் திருத்தார்.
திருந்தாவிட்டால், இழுக்காவீர்
இவற்றினின்று யார்தான் மீள்வார்?
இயேசுவைப் பார்ப்பீர், வெளுப்பாவீர்!
ஆமென்.