ஒரு மூலையிலிருந்து உலகைப் பார்க்கிறேன்!எண்:1.
எத்தனை காலமாய் இம்மனித இனம் வாழ்கிறது, என்றும் எனக்குத் தெரியாது.
அத்தனை கால வரலாறு கற்றாலும் எனக்குப் புரியாது. இத்தனை ஆண்டுகள், என் பெற்றோர், என் ஆசிரியர், நான் கற்ற நூல்கள், இவைகளுக்கு மேலாக என்னை நடத்தும் இறையாவியர் எனக்குச் சொல்லித்தந்த உண்மையை, மொத்தமாய் எழுத இயலாவிட்டாலும், ஒரு மூலையிலிருந்து உலகை, ஒரு கோணத்தில் நான் பார்ப்பதையே, எழுதுகிறேன்.
கிறித்து பிறப்பிற்கு முற்பட்ட காலத்திலும், கிறித்து பிறந்தபின் வந்த இருபது நூற்றாண்டுகளிலும், உணர்ந்தோ, உணராமலோ, ஓருண்மையை உலகோர் சொல்வார்கள்.
“இறைவனின் முன்பு யாவரும் ஒன்றே”
இறைவனின் பார்வையில், இந்நாட்டான், அந்நாட்டான் என்றும் இல்லை; இவ்வினத்தான், அவ்வினத்தான் என்றும் இல்லை; ஏழை என்றும் செல்வன் என்றும் இல்லை; ஆண் வேறு, பெண் வேறு என்றும் இல்லை. யாவரும் ஒன்றே. யாவரும் ஓருதிரத்திலிருந்து வந்தவரே, (அப் 17: 26)
இறைவனும் மனிதரைப் பிரிக்கவில்லை; இறைவனின் படைப்புகளும் பிரிக்கவில்லை. கதிரவன் கண்ணிலும் யாவரும் ஒன்றே. காற்று, மழை, நெருப்பிலும் யாவரும் ஒன்றே.
இத்தனை ஆண்டுகளாய் எத்தனையோ பேர் இதை எடுத்துச் சொல்லியும், எண்ணற்றச் சட்டங்கள் வலியுறுத்தியும், எல்லா நாட்டு நடுவர் மன்றங்கள் தீர்ப்பு எழுதியும், மனிதர்கள் ஒருவரை உயர்த்தியும், மற்றொருவரைத் தாழ்த்தியுமே பார்க்கிறார்கள். வென்றவர், தோற்றவரைத் துரத்தி விட்டதும் உண்டு; தோற்றவர், வென்றவரால் அடிமைப்பட்டதும் உண்டு. வெளிநாட்டார் வந்து அடிமையாக்கியதும் உண்டு. உள்நாட்டிலே தம் நாட்டாரை அடிமையாக்குவதும் உண்டு. நாட்டுப் பற்று என்ற பெயரால், பிற நாட்டை எதிரியாய்ப் பார்ப்பவரும், தம் நாட்டு மக்களையே இணையாய் எண்ணாமல், தாழ்த்துவதும் உண்டு. அடிமையாய் நடத்துவதும் உண்டு. இறைவனின் பெயரைச் சொல்பவரும் இக்கூட்டத்தில் இருப்பது வருத்தமான ஓன்று.
எண்ணற்றோர் சொல்லி வந்த உண்மையை யாரும் கேளாததினால், இன்று கொரோனா சொல்லித் தருகிறது. அதன் கண்ணில் ஏழை, செல்வன் என்று வேறுபாடும் இல்லை; இந்தியா சீனா என்று வேறு நாடும் இல்லை. எல்லோரும் ஒன்றே. ஆணில்லை, பெண்ணில்லை; அனைவரும் ஒன்றே.
அழிக்கும் தொற்று நோயே அனைவரையும் ஒன்றாய்ப் பார்க்கும்போது, ஆக்கும் திறமைகொண்ட மானிடா நீ ஏன் பிறரைப் பிரித்துப் பார்க்கிறாய்? உன்னை உயர்ந்தவன் என்றும், முன் நிற்பாரைத் தாழ்ந்தவன் என்றும் உன் இறுமாப்பில் ஏன் உரைக்கிறாய்?
ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும்;
வண்டியும் ஒருநாள் ஓடம் ஏறும்.
மூடம் ஒழிய, இறையைப் பாரும்;
முன்னிற்பாரை மதிக்கப் பாரும்!
-கெர்சோம் செல்லையா.