கிறித்து பிறப்பின் வாழ்த்து!

கிறித்து பிறப்பின் வாழ்த்து!


எத்தனை எத்தனை பண்டிகை வந்தும்,

ஏன் மறந்தோம்  இறை நயம்?

அத்தனை முறையும் உண்டுடுத்தோம்;


அதனால் மறைந்ததா உளக் கயம்?

இத்தனை ஆண்டுகள் இழந்தது போதும்.

இனி கேட்போமா கிறித்தியம்?

வித்தென ஈந்து  விளைச்சலறுப்போம்;

விண் மகன் தருவார்  நம் வயம்!

-கெர்சோம் செல்லையா.

இரங்கும் வாக்கு!

இரங்கும் வாக்கு!
நற்செய்தி: யோவான் 6:7.
7. பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
நல்வழி:
உண்டு, தூங்கி, ஊரில் சுற்றி,
உழைத்தோம் என்று கூறும் நாம்,
கண்டு, வாங்கிச் சேர்த்தது பற்றி,
கதை கட்டுரைகள் சொன்னோமே.
பண்டு நாமும் பசியால் வற்றி,
படுத்து ஏங்கிக் கிடந்தது போல்,
ஒண்டு மனிதர் இருப்பது மாற்றி,
உதவி புரியச் சொன்னோமா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

பசி!

பண்டிகை நாளிலும் பசியே!


நற்செய்தி: யோவான் 6:3-6.

நல்வழி: 


பண்டிகை நாளிலும் பலபேர்,

பசியில் துடிக்கிறார், பாரீர்.

உண்டிட ஒன்றும் இல்லார்,

உறங்கி முடிக்கிறார், பாரீர்.

கண்டிடும் இயேசு நெஞ்சோ,

கனிந்து கொடுப்பதும், பாரீர்.

கொண்டதாய்க் கூறும் நாமோ,

கொடுக்காதெடுப்பதும், பாரீர்!

ஆமென்.

-செல்லையா.

மருத்துவர்!

மருத்துவர்!

நற்செய்தி: யோவான் 6:1-2.  

நல்வழி:


அணியாய் மருத்துவர் பெருகக் கண்டு,

அகம் மகிழார் யார் உண்டு?

பிணியால் வாடும் மக்கள் முன்பு,

பேசும் இவர்தான் இறையன்பு.

பணியாய்ச் செய்யும் மருத்துவ நெஞ்சு,

பரிவில் வளர நிதம் கெஞ்சு.

கனிவாய்த் தொட்டு, காயம் கட்டு.

கடவுள் அருளை நீ கூட்டு!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

சட்டமா? அருளா?

மோசேயின் திருச் சட்டம்!

நற்செய்தி: யோவான் 5:45-47.

நல்வழி:


சட்டம் உயர்ந்தது என்பாரும்,

சரிதான் என்று சொல்வாரும்,

கட்டம் கட்டிய தம் வாழ்வில்,

கறை இல்லாது வாழ்ந்தாரா?

திட்டம் போட்டு வாழ்ந்தாலும்,

திரும்பத் தவறு செய்யும் நாம்,

விட்டம் அளக்க இயலாத,

விண் அருளோடு வாழ்வோமா?


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

யார் புகழ வாழ்கிறேன்?

யார் புகழ வாழ்கின்றோம்?

நற்செய்தி : யோவான் 5:41-44.

நல்வழி:


யார் புகழ வாழ்கின்றேன்,

என்றுணர்த்தும் இறையே.

ஊர் புகழ நான் பாடின்,

உள் நெஞ்சும் குறையே.

நீர், நெருப்பு, வளி கண்டேன்,


நிறைவேற்றும் முறையே.

தேர்வென்று எடுத்திடுவேன்,

தெய்வப் புகழ் நிறையே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

ஆய்வோம்!

ஆய்வோம் இறைநூல்!


நற்செய்தி: யோவான் 5:39-40.

நல்வழி:

மேயும் ஆடுகள் மேற்புல் உண்ணும்.

மேய்ந்த பின்னர் அதை அசைபோடும்.

வாயும் வயிறும் வாழ்வாய் எண்ணும்,

வழிமுறையாரே, இதை இசை பாடும்.

தேயும் நாட்கள் தெரிந்திட விழையும்.


தெரியார் நிலைதான் மேல் கீழ் ஆடும்.

ஆயும் பண்பில் இறை நூல் நுழையும்;

அது தரும் வாழ்வில் அன்பு கூடும்! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

மனிதச் சான்று!

மனிதச் சான்று:


நற்செய்தி: யோவான் 5:36-38.  

நல்வழி:


புனிதத் தொண்டைப் போற்றார் கண்டு, 


பொய் மழைக்காக அழ வேண்டாம்.

இனியச் சான்று இங்கே உண்டு,

என்றிப் பாறையில் உழ வேண்டாம்.

மனிதப் புகழ்ச்சி மாயை ஆகும்;

மயங்கி அதனுள் விழ வேண்டாம்.

குனியும் நாட்கள் குறைந்தே போகும்;

கிறித்து இன்றி எழ வேண்டாம்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

விளக்கு!

விளக்கு!
நற்செய்தி: யோவான் 5:33-35.

நல்வழி:


ஒழுக்கமும் உண்மையும் உயரிய அருளாம்.

உணரார் வாழ்வு முழுவதும் இருளாம்.

இழுக்குண்டாக்குதல் இருளின் பணியாம்.

இதனை மறக்கும் நெஞ்சும் பிணியாம்.

அழுக்கினை அகற்றுதல் இறையின் விருப்பாம்.

அதன் அடையாளம் ஒளி தரும் நெருப்பாம்.

விழுப்பம் வேண்டும் எவர்க்கும் மருந்தாம்;

விளக்காய் வந்த யோவான் விருந்தாம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

நற்சான்று!

நற்சான்று!
நற்செய்தி : யோவான் 5:31-32.

நல்வழி:


தவற்றின் மீது தவற்றைச் செய்து,

தங்கள் திறமை எனவுரைத்தல்,

சுவற்றின் மீது வீசும் சேறாம்;

சொல்ல விரும்பா துர்ச்சான்றாம்.

எவற்றைக் கொண்டு வாழ்தல் நன்று,


என்றறிந்து வீடமைத்தல்,

கவற்றல் இல்லா அருட் பேறாம்; 


கடவுள் தருகிற நற்சான்றாம்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.