நாடோறும் தொழுவோம்!

கிறித்துவில் வாழ்வு: 
நாடோறும் கோயில் சென்று, 
நன்கு தொழுதார் அந்நாளில். 
கூடேறும் பறவை நினைத்து,
கோயில் நோக்கார் இந்நாளில். 
ஈடேறும் எண்ணம் கொண்டோர்,  
என்றும் தொழுவார் தம்முள்ளில். 
காடோடும், காரிருள் ஓடும்; 
கடவுள் ஆள்வார் நம்முள்ளில்! 
ஆமென். 
-கெர்சோம் செல்லையா. 

விண் சென்றார் விண்ணரசர்!

விண் சென்றார் விண்ணரசர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24: 50-51.  

கிறித்துவில் வாழ்வு: 
எங்கிருந்து வந்தாரோ, 
அங்கு சென்றார் மீட்பர்.
இங்கு எவர் எண்வாரோ, 
இறை வாக்கு கேட்பர். 
தங்குமிடம் இது இல்லை. 
தாழ்பணிந்தால் அறிவர்.  
பொங்குமருள் பெருகிவர,  
பேரின்பம் பெறுவர்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

வாழ்த்து!

வெற்றி பெற்ற முதல்வரை வாழ்த்துவோம்!

குற்ற முரைத்தார்  குழிகளில் வீழ, 

கோட்டை பிடித்த முதல்வரே, 


உற்றவர் இனிமேல், உமக்கு யார் யார்? 


உண்மையில் ஏழை மனிதரே! 


தொற்றுகள் போன்று, ஒட்டியே வருவார்,


தூய்மை வெறுக்கும் தரகரே. 


பற்றினை என்றும், எளியரில் வைத்து, 


பாரை ஆள்வீர் தலைவரே! 


-கெர்சோம் செல்லையா

இறையன்பு இல்லம், 
24, செக்ரெட்டெரியட் காலனி, 
சென்னை-600099.

உழைப்பாளர் நாள் வாழ்த்து!

உழைப்பாளர் நாள் வாழ்த்து!  


எதனை உழைப்பெனச் சொல்கின்றார்? 

ஏய்ப்பவர் கொள்ளை அடிப்பதையா? 

இதனை இன்றையோர் சேர்த்ததினால்,

ஏழையர் கண்ணீர் வடிக்கலையா? 

புதனை சனியெனச் சொல்கின்றார்  

புரியும் தீமைக்கு முடிவிலையா?

அதனை மாற்றுவீர், அறிஞர்காள்,  

அடிபடும் நெஞ்சு துடிக்கலையா? 


-கெர்சோம் செல்லையா. 

காத்திருப்போம்!

காத்திருப்போம்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா: 24:49.  

கிறித்துவில் வாழ்வு:  
பணியொன்றைத் தொடங்கும் நாம், 

பல்வகை அறிவு நாடுதல் போல்,  

அணி சூட்டும் இறைப்பணியில்

ஆவியின் அருளைப் பார்த்திருப்போம். 

பிணி நீக்கும் திருப்பணியில், 

பிழைகள் வராமல் இருப்பதற்கு,  

துணிவை நாம் கேட்டிடுவோம்;  

தூயன் காலடி காத்திருப்போம்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

எல்லோருக்கும் சொல்லுவோம்!

எருசலேம் தொடங்கி…….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:47-48.  

கிறித்துவில் வாழ்வு: 
எருசலேம் தொடங்கி எல்லா நாடும் 
இறை அரசிற்குள் வரவேண்டும்.  
குருசு வழியில் அன்பைப் பாடும்   

கிறித்துவின் மீட்பு உறவேண்டும். 

ஒரு சிலர் மட்டும் ஓங்கப் போடும் 
ஒவ்வாத் திட்டமும் அறவேண்டும். 
அருளும் நலமும் நிரம்பிக் கூடும்;

அனைவரும் ஆசி பெற வேண்டும்!   

ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

எருசலேம் தொடங்கி…….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:47-48.  

கிறித்துவில் வாழ்வு: 
எருசலேம் தொடங்கி எல்லா நாடும் 
இறை அரசினில் வரவேண்டும்.  
குருசு வழியில் அன்பைப் பாடும்   கிறித்துவின் மீட்பு உறவேண்டும். 

ஒரு சிலர் மட்டும் ஓங்கப் போடும் 
ஒவ்வாத் திட்டமும் அறவேண்டும். 
அருளும் நலமும் நிரம்பிக் கூடும்
ஆண்டவர் ஆசி பெற வேண்டும்!   

ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

குருதியின்றி மீட்பு இல்லை!

குருதி கொடாது மீட்பு வராது!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:45-46.

கிறித்துவில் வாழ்வு:  
குருதி கொடாது மீட்பு வராது; 
குறித்துச் சொன்னது திருச்சட்டம். 
இறுதியில் இறையும் மகவாய்ப் பிறந்து, 
இறந்து மீட்பதே இறைத்திட்டம்! 
பெருகிடும் சூது ஒழிக்க முயன்று, 

பேசி வடித்தது திருச்சட்டம்.  
உறுதி மொழியும், உயிரும் ஈந்து,  
உயிர்த்து வருவதே இறைத்திட்டம். 
ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

முன்னுரைத்தது!

அன்றே உரைத்தார்!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:41-44. 

44. அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். 

வியந்து மகிழ்ந்து பார்ப்பதுவை,  
விண்ணருட் பற்று என்னாதீர். 
நயந்து ஊனுடை வழங்குவதை, 
நம்புதலென்றும் எண்ணாதீர். 
அயர்ந்து சோர்ந்து போகாதீர்; 
அன்றே உரைத்தார், ஆய்ந்திடுவீர்.   
இயம்பு நூலின் நிறை கண்டு, 
இயேசு மார்பில் சாய்ந்திடுவீர்!
ஆமென்.  

தொட்டுப்பார்த்துச் சொல்லுங்கள்!

தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 24:38-40.  
38. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.  


கிறித்துவில் வாழ்வு: 


தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

தூயன் உயிர்ப்பு பொய்யன்று . 

கட்டிப் பிடித்துச் சொல்லுங்கள்;  

காணும் காட்சி பொய்யன்று. 

தட்டும் நெஞ்சுள் சொல்லுங்கள். 

தந்தை மைந்தன் மெய்யென்று.  

எட்டுத் திக்கும் சொல்லுங்கள்; 

இயக்கும் ஆவியர் மெய்யென்று.  


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.