இறைப்பற்று என்றால் என்ன?

இறைப்பற்று என்றால் என்ன?


உண்மை என்பது  இறை பண்பாகும்.

 உள்ளில்  உண்மை பிறக்கட்டும்.

நன்மை செய்தல்  வெளிப்பாடாகும்.

நமது வாழ்க்கை உரைக்கட்டும். 

வன்மக் கொடுமை யார் பண்பாகும்?

வருத்தும் அலகை இறக்கட்டும்.

இன்னல் நீக்கி எளியருக்கிரங்கும்.

இறைப் பற்று  சிறக்கட்டும்!

-கெர்சோம் செல்லையா. 

பெருமையா? சிறுமையா?

சிறுமையில் மாட்சி!

இறை வாக்கு: யோவான் 12:27-28.

27. இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.28. பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.

இறை வாழ்வு:

சிறுமையில் பெருமை வருமோ என்பார்,

சிலுவையின் மாட்சி காணாதார்.

பொறுமையில் இயேசு பெற்றுத் தந்தார்;

புரிந்து வாழ்வார் நாணாதார்.

அருமை வாக்குகள் ஆயிரம் கேட்டும்,

அடி பணியாதார் பேணாதார்.

பெருமைகள் நமக்கு இறையே தருவார்;

பிழையில் பெற்றவர் வீணாவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அடியார்!

கிறித்துவின் அடியரே!

நற்செய்தி: யோவான் 12:26.

26. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

நல்வழி:

கிறித்துவின் பண்பைப் பார்த்துக்கொண்டு,

கிறித்தவராய் நாம் நடந்தோமா?

நெறிமுறை அன்பை வழியெனக்கண்டு,

நித்தம் அன்பில் நடப்போமா?

பிறிதொரு வழிமுறை சேர்க்காதென்று,

பிழைகள் விட்டுக் கடந்தோமா?

அறிவுரை சொல்லல் பிறருக்கன்று;

அதனைப் பிடித்துக் கடப்போமா?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இறை மாட்சி!

இறை தரும் மாட்சி!

இறை வாக்கு: யோவான் 12: 23-25.

23. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.

24. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.

25. தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.

இறைவாழ்வு:

மாட்சி கேட்டு மாயும் மனிதா,
மன்னர் வாக்கு கேள்.
காட்சி என்று களனி பார்த்து,
கற்று அறிந்து கொள்.
வீட்சி இல்லை, விதைப்பு ஐயா,
விளையுமென்று தாழ்.
ஆட்சி செய்ய தாழ்ச்சி தேவை;
அன்பு கொண்டு வாழ்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பெயர் பார்த்து வருவோர்!

பெயர் பார்த்து வருகிறார்கள்!

இறைவாக்கு: யோவான் 12:20-22.

20. பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.

21. அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.

22. பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.  

இறைவாழ்வு; 
பிலிப்பு அந்தி ரேயரின்,  
பெயர்கள் கிரேக்கமானதால், 
விழிப்பு நாடும் கிரேக்கர்கள்,
விண்ணரசு கேட்டார்கள்.
வலிப்பு கண்ட எளியரின்,
வாழ்வு இன்று அழுகையில்,
ஒலிப்பு ஓசை கிறித்தர்கள்,  
உதவினால் மீட்பார்கள்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

சாதியும் நிறமும்!

அழுவோர், அழுதுகொண்டே இருக்கலாம்!

சாதி பார்க்கும் நாடுகளில், சாதியைப் பார்த்து, உயர்வு தாழ்வு என்று மக்களைப் பிரிக்கிறார்களேயன்றி, சமயம் பார்த்து ஒருவரை ஏற்பதுமில்லை, புறக்கணிப்பதுமில்லை. சமயம் மாறுமுன் இருந்த, தேவர்கள், தேவேந்திரர்கள், நாடர்கள், நாயுடுகள், பிள்ளைகள், பிராமணர்கள், சமயம் மாறிய பின்னரும், சாதியை விடாமல் பார்க்கிறார்கள், சாதியாலேயே பார்க்கப்படுகிறார்கள்! அரசு ஆவணங்களிலும் அவர்கள் சாதியுடன்தான் சேர்க்கப்படுகிறார்கள்! சமயம் மாற உரிமையுள்ள நாட்டில், சாதி மாற உரிமையில்லையே!நிறம் பார்த்து மக்களைப் பிரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். சமயம் மாறினாலும், சற்று விலகி வேறு நாடு சென்று குடியேறினாலும், நிறம் மாறாதே! இறைவன் முன்னிலையில் யாவரும் ஒன்றுதான். ஏறத்தாழ எல்லா நாடுகளின் சட்டமும் இதுபோலத்தான். இருப்பினும், மனிதர் மனிதரைப் பிரித்துத்தான் பார்க்கிறார். இந்த பிரிவினை எங்கும் உளது; இந்தியாவிலும் உளது!இதை எப்படி மாற்ற இயலும்? ‘யாவரும் ஒரே உதிரத்திலிருந்து பிறந்தவர்கள்’, ‘எல்லா மனிதரும் இறை சாயலில் தோன்றியவர்கள்’, ‘எல்லோரும் இணையானவர்கள்’, ‘அனைவரும் ஒன்றே’ எனச் சொல்லும் இறைவாக்குகளின் நல்லெண்ணம் எப்போது நம்மனைவர் உள்ளில் குடிவருமோ, அப்போதுதான் எல்லா சாதிப் பேய்களும் தொலையும்; பிரித்தாளும் பிசாசுகளின் கூடாரங்களும் கலையும்!அதுவரை எழுதுவோர் எழுதலாம்; அழுது வடிப்போர்… அழுதுகொண்டே இருக்கலாம்!-கெர்சோம் செல்லையா.

இருவேறு கருத்துக்கள்!

  1. யோவான்: 12: 17-19.

இறைவாழ்வு:


எப்படி இயேசுவைப் பார்த்தார் என்னும்,

இரு வேறு கருத்து பார்க்கிறோம். 

அப்படி இன்றும் பார்ப்பார் செய்யும், 

அவலங்களையும் சேர்க்கிறோம். 

தப்பிதமாகச் சொல்பவர் எனினும், 

தனி உரிமையை மதிக்கிறோம். 

இப்படி இழிவாய் யார் செய்தாலும், 

இயேசு மாறார், துதிக்கிறோம்!


ஆமென். 


கெர்சோம் செல்லையா. 

குதிரையா? கழுதையா?

குதிரையா? கழுதையா?

இறைவாக்கு: யோவான் 12:14-16.14.

அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக,15. இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.16. இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

இறைவாழ்வு:

கழுதையும் குதிரையும் வந்து நின்றால்,

கழுதையை எவர்தான் விரும்புவார்?

கொழுமையும் எளிமையும் தேர்வு சென்றால்,

கொழுமையின் பக்கமே திரும்புவார்.

அழுகுரல் அழிக்கும் அமைதிக்கென்றால்,

அறிஞர் எதைத்தான் விரும்புவார்?

எளிமையின் வடிவம் எடுத்த இறைபோல்,

இனிய கழுதை பின் திரும்புவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஓசன்னா!

இறைவாக்கு: யோவான் 12:12-13.

இறை வாழ்வு:


இன்றே மீட்க வேண்டும் என்று 

ஏங்கும் எங்கள் குரல் கேளும்.

அன்றேழையர் விளித்தது போன்று,

அழைப்பவர் பட்டியல் நீளும்.

ஒன்றோடொன்று மோதிக் கொண்டு,

ஊரை அழிக்கிறார் நாளும்.

என்றோ ஒரு நாள் என்று அல்ல;


இன்றே மீட்டு எமை ஆளும்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.