இறைவாக்கு

சூது நிறைந்த உலகினிலே,
சொரியும் கண்ணீர் வாழ்வினிலே,
தூது கேட்போம், துயர் நீங்கும்.
தூயவர் வாக்கே நமை மீட்கும்!
நல்வாழ்த்து:
படையோ பணமோ செல்லாது.
படைத்தவர் முன்னே நில்லாது.
கடவுளை மட்டும் நாடிடுவாய்;
காப்பார், அவரைப் பாடிடுவாய்!
நல்வாக்கு: மத்தேயு 25:24-25.
“ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ‘ ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ‘ என்றார்.”

நல்வாழ்வு:

பண்பாய் வாழ்ந்து பணி செய்ய
படைத்தவர் ஈவு அளிக்கின்றார்.
நண்பன் போன்று கை பிடித்து
நன்மை மட்டும் அளக்கின்றார்.
எண்ண மறந்த தன்னலத்தார்
ஈவைப் புதைத்து, பழிக்கின்றார்.
வெண்ணை போதும் நெய் எடுக்க;
விண்ணின் விருப்பில் மகிழப்பார்!
ஆமென்.

தூது

தூய்மையாக வாழ விரும்பின்,
தூது கேட்பீர் நண்பர்களே.
வாய்மையான தெய்வ வாக்கால்,
வாழ்வில் மாற்றம் காணுங்களே!
நல்வாழ்த்து:
உள்ளிருக்கும் இறையே போற்றி;
ஊக்குவிக்கும் மைந்தா போற்றி.
கள்ளமில்லா ஆவியர் போற்றி;
கழுவ வேண்டிக் கேட்டேன், போற்றி!

நல்வாக்கு:

மத்தேயு 25:22-23.
“இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ‘ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘ நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ‘ என்றார்”
நல்வாழ்வு:
இரண்டோ மூன்றோ எதுவோ,
இறைவன்  தருவது என்போம்.
முரண்டு பிடிக்கும் உலகம்
மீள்வதர்க்கென்று அறிவோம்.
வறண்ட வாழ்வை மாற்றும்
வருவாய்க்காகச் செய்யோம்.
உறங்கி விழுந்தத் தமிழர்
உணர்ந் தெழும்பச் செய்வோம்!
ஆமென்.

வாக்கும் வழியும்

வாழ இயலா ஏழைக்கும்
வழியாய் இருக்கும் இறைமகனை,
தாழப் பணிந்து வேண்டுதற்கு,
தமிழில் இதனை எழுதுகிறேன்!
ஆழம் நிறைந்த அவரன்பை,
அன்றாடம் நாம் ருசிப்பதற்கு,
கோழை எனக்கும் இரங்கிட்டார்;
கிறித்து புகழைப் பாடுகிறேன்!
நல்வாழ்த்து:
இறைவன் படைத்தது எல்லாம்
இன்பமும் நன்மையுமே.
குறை கூறுதலை நிறுத்தி,
கிறித்துவை நோக்கிடுமே!
நல்வாக்கு;
மத்தேயு 25:19-21.
“நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ‘ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘ நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ‘ என்றார்.
நல்வாழ்வு:
சிறியதில் உண்மை,
சிகரத்தில் உயர்த்தும்.
வறியவர் உணர்ந்தால்
வாழ்வும் சிறக்கும்.
பெரியதாய் வளர
பேரருள் கேட்பீர்.
சொரியும் இறைவன்
சொற்படி நடப்பீர்!
ஆமென்.

நற்செய்தி

இன்றைய நற்செய்தி!
மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மறைநூல் வாக்கை வழங்குகிறேன்.
பகிர்தலால் இன்பம் பரவிடவே,
படைத்தவரிடத்தில் வேண்டுகிறேன்.
நல்வாழ்த்து:
உம்மைப் புகழ்வதே என் வாழ்வு.
உணர்ந்து நடப்பதே நல் வாழ்வு.
செம்மை வழியைக் கடை பிடித்துச்
செயலில் புகழ்வதே நல் வாழ்த்து!
நல்வாக்கு:
மத்தேயு 25:16-18
”ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.”

நல்வாழ்வு:

ஒன்று தானே என்று எண்ணி
ஒளித்துப் புதைத்தான் ஒருவன்.
இன்று இப்படிச் செய்யாதிருக்க
எடுத்துரைக்கிறார் இறைவன்.
சென்றுபோன நாட்களில் செய்த,
தவறை இனிமேல் தொடராதீர்;
என்று கூறும் அடியனும் பணிய
எனக்கும் வேண்டல் ஏறெடுப்பீர்!
ஆமென்.

வானின் செய்தி

வந்தேன் மீண்டும் உம்மிடமே;
வானின் செய்தி கொடுத்திடவே.
தந்தேன் நெஞ்சை இறையிடமே;
தமிழர் மீட்பு அடைந்திடவே!
நல்வாழ்த்து:
விடுதலை அளிக்கும் இறையைப் புகழ்வீர்;
வேண்டும் நன்மை வருவது காண்பீர்.
கெடுதலை வெறுக்கும் நெஞ்சம் ஈவீர்;
கிறித்து அரசில் இடம் பிடிப்பீர்!

நல்வாக்கு:

மத்தேயு 25:14-15.
தாலந்து உவமை

”விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.”

நல்வாழ்வு:
ஐந்தோ இரண்டோ ஒன்றோ,
அளித்தவர் ஆண்டவரன்றோ?
தந்தவர் விருப்பை எதிர்த்துத்
தவறாய் உழைத்தல் நன்றோ?
எந்த வரம் என்றில்லை.
இங்கு தேவை வாழ்க்கை.
அந்த அறிவு வந்தால்
ஆகாதது ஒன்றில்லை!
ஆமென்.