யோவான் 16: 23-24.

இறை வழி:

என்ன கேட்பேன்? எப்படிக் கேட்பேன்?
என்றறியாதே கேட்கிறேன்.
சொன்ன உம் திரு வாக்கும் பிடித்தேன்.
சொற்படி மகிழ்வே கேட்கிறேன்.
சின்ன பிள்ளை அழுவது போல் நான்,
சிணுங்கியவாறே கேட்கிறேன்.
இன்ன விருப்பம் வேறு நான் கேளேன்; 
இறையின் மகிழ்வே கேட்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

நிலை வாழ்வுற்ற தம்பியே, வாழ்க!

நிலை வாழ்வுற்ற தம்பியே, வாழ்க!

இலையுதிர் காலம் இதுவன்றோ?

இப்படிச் சொன்னது நீயன்றோ?

சிலைபோல் சாய்ந்தாய் ஏனின்றோ?

செய்தியால் விழுவது நான் அன்றோ?

நிலை வாழ்வளிப்பது இறையன்றோ?

நேர்மை தரும் உன் உறவன்றோ?

அலைகிற எனக்கும் வரும் என்றோ?

அதுவரை அழுவது தான் நன்றோ?

-கெர்சோம் செல்லையா.

வலியும் வாழ்வும்!

வலியும் வாழ்வும்!

இறை மொழி: யோவான் 16:21-22. 

21. ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.

22. அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

இறை வழி:

பேற்றின் நாளில் பெறுபவள் துடிப்பாள்;
பெற்ற பின்போ மகிழ்வை பிடிப்பாள்.
கூற்றின் பொருளை உணரப் படிப்பாய்.
கொடுமை எனினும் விழுங்கக் கடிப்பாய் .
தூற்றும் பழிச்சொல் கசக்கும் என்பார்.
தூயரோ அதனை விரும்பித் தின்பார்.
மாற்றும் இறையின் விருந்து உண்பார்,
மருந்தும் உண்டார், நீ முன் பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

துயரம் மகிழ்ச்சியாக்கும்!

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்!

இறை மொழி: யோவான் 16:19-20.

19. அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?

20. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

இறை வழி:

துயரத்தை மகிழ்ச்சியாக்கும்
தூயரே துணையிருக்க,
அயர்விலும் அஞ்சிடேன் நான்;
அவரே எனக்கு எல்லாம்.
இயற்கையைப் படைத்து ஆளும்,
இறைவனே எனையணைக்க,
புயல்களும் அடங்கி நிற்கும்;
போதுமே அவர் சொல்லாம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

காணாதிருக்கும் காலம்!

காணாதிருக்கும் காலம்!

இறைமொழி: யோவான் 16: 16-18.

  1. நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
  2. அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி:
  3. கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.

இறை வழி:

காணாதிருக்கும் காலம் என்றால்
கண்ணீர் வடிக்கும் நேரம்.
வீணாய் அழுது, விதி என்னாமல்,
வேண்டிப் பெறுவோம் வீரம்.
பேணாதிருக்க இறை மறப்பாரோ?
பிழைகள் ஆய்வோம் வாரும்.
கோணாதிருக்கும் வழி நடந்தால்,
குறையும் பொழுது, பாரும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஆவியார்!

ஆண்டவரும் ஆவியாரும்!

இறை மொழி: யோவான் 16:14-15.  14.
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.  

இறை வழி:

கடந்து உள்ளில் இருக்கும் இறையை,
காட்டித் தருபவர் இறை ஆவியார்.
நடந்து நன்மை வழங்கிய மகனை,
நாளும் உரைப்பவர் இறை ஆவியார்.
கிடந்து அழுகிற மனிதரைத் தூக்கி,
கிறித்துவில் இணைப்பவர் ஆவியார்.
தொடர்ந்து அவரைப் பற்றிடுவார்க்கு,   
துணையாய் இருப்பவர் ஆவியார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உண்மை பேசுவோம்!

உண்மையின் ஆவியர்!

இறைவாக்கு: யோவான் 16:12-13.

12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

இறை வாழ்வு:

ஆவியர் பொழியும் அருள் மெய்யில்,
அகம்புறம் நனையும் கிறித்தவர்கள்,
பாவியராய் அன்று இருந்தது போல்,
பச்சைப் பொய்யின்று பேசுவதேன்?
மூவராய்த் தோன்றும் மும்மையரின்,
முதற்கனி அன்பும் பறித்தவர்கள்,
தாவியே அன்று உயிர் ஈந்த,
தலைவனை வெளியே வீசுவதேன்?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

யோவான் 16:9-11.

இறை வாழ்வு:

என்னறிவில் நான் பார்க்கிற நேர்மை
எப்படி முழுமை வைத்திருக்கும்?
முன்னறிவில்லாச் செயலின் தீமை,
முடிவு வரையில் தைத்திருக்கும்.
நன்மைக் கெதிரே நிற்பின் தண்டனை,
நாட்கணக்காகக் காத்திருக்கும்.
இன்னிலை மாற்றுபவரைக் கண்டேன்;
இயேசுவால் மீட்பு பூத்திருக்கும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

ஆவியார்!

உணர்த்தும் துணையாளர்!
இறை மொழி: யோவான் 16:7-8.

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

இறை வழி:

செய்யும் செயலில் நேர்மை உண்டோ?

செயலின் முடிவே தீர்ப்பாகும்.

உய்யும் எண்ணம் உள்ளில் உண்டோ?

உண்மை வந்தால் சேர்ப்பாகும். 

பொய்யா அருள் மழை ஆவியர் உண்டோ?

புகலிடம் இழுக்கும் ஈர்ப்பாகும். 

அய்யா என நாம்  செல்வது உண்டோ?

அன்பே இறையின் வார்ப்பாகும்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

சாதி!

சாதி!

சாதியைப் படைத்தவன் இறைவனல்ல,
சதி செய்திட்ட மனிதனே.
நீதியைப் பார்ப்பவன் அறிவிலியல்ல;
நெஞ்சைத் தொட்ட புனிதனே.
வீதியைப் பிரித்து வைப்பது நல்ல
வழிமுறை அல்ல, மனிதனே.
மீதி வாழ்விலே இணைந்து நல்ல
மனிதனால், புனிதனே!

-செல்லையா.