2021

2021-ஆம் ஆண்டு வாழ்த்துகள்! 

இருபது இருபது  உலர்கிறதே.  
இருபத்தொன்றாய் மலர்கிறதே.  
அறுபது எழுபது தளர்கிறதே.  
ஆனால் அருளும் வளர்கிறதே.  
வருவது எதுவெனத் தெரியலையே;
வாழ்க்கைப் புதிரும் புரியலையே.  
தருவது இறைதான், குறையிலையே;  
தாங்குமிவரன்றி, நிறைவிலையே!  

-கெர்சோம் செல்லையா.

அன்று நடந்தத் தேர்தல்!

அன்று நடந்தத் தேர்தலிலே!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:23.  
23  அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.   
கிறித்துவில் வாழ்வு:  
அன்று நடந்தத் தேர்தலிலே,  
அவர்கள் ஏசுவை ஏற்கவில்லை.  
நன்றி மறக்கும் மனிதர்களும்,
நன்மை நாடிப் பார்க்கவில்லை.  
தொன்று தொட்டு தெரிகிறதே;    
தூய்மையாளர் வெல்வதில்லை.  
இன்று இதனால் அரசியலுள்,  
இன்பண்பாளர் செல்வதில்லை!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

கூட்டம் கூட்டி!

கூச்சல் !

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:20-22.
20 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.21 அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.22 அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.


கிறித்துவில் வாழ்வு:
கூட்டங்கூட்டி கூச்சலெழுப்பி,

குருசிலறையக் கேட்போரே,

சாட்டுங்குற்றம் பொய்யோயென்று,

சற்றேனும் நீர் நினைத்தீரா?

ஆட்டம்போடும் அநீதி யாவும்,

அப்படியுமக்கே எதிராயின்,

வாட்டந்தீர்க்க யார் வருவார்?

வருந்தும் நாளை நினைப்பீரா?

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!  

புவியினில் தோன்றிய மனிதர்களில்,  
புனிதர் இவர்போல் ஒருவரில்லை.  
அவர்களில் அறிஞரை எண்ணுகையில்,
அருள்தர ஏசுபோல் யாருமில்லை.  
இவரது பிறப்பின் அதிசயம்போல்,  
யாரும்  மண்ணில் பிறக்கவில்லை.  
தவறிடும் மனிதர் உணருகையில்,   
தருகிற வாழ்வும் இறப்பதில்லை!  


-கெர்சோம் செல்லையா.  
“இறையன்பு இல்லம்”,
எண். 24, செக்ரெட்டேரியட் காலனி,  
இலட்சுமிபுரம், இரட்டை ஏரி,
குளத்தூர், சென்னை- 600099.  

யாரை விடுவிப்பீர்?  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 17-19.  

17  பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.

18  ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.

19  அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலை பாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  

யாரை விடுவிப்பார் என்று,  

இன்று கேட்பின் இந்நாட்டில்,  

ஊரை ஏய்ப்பார் விடுதலையாவார்.  

உண்மைதானே, நண்பர்களே?   

நீரை இன்று பாலே என்று,  

நீட்டுவோரின் கூட்டமைப்பில்,  

கூரை இல்லா எளியவருக்கு,   

கொடாரே நீதி, எண்ணுங்களே!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

குற்றமில்லை, ஆயினும் தண்டனை!

குற்றமற்றோருக்குத் தண்டனையா?  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:13-16.  

13  பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,

14  அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.

15  உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.

16  ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.  

கிறித்துவில் வாழ்வு:  

குற்றம் இல்லை என்றறிந்தும்,  

கொடுத்தார் தண்டனை இயேசுவிற்கு;  

கற்றும் கேட்டும் தெரிந்திருந்தும், 

கடமை தவறுதல் ஏன், எதற்கு?  

பற்றும் பாவம்  பரிசு தரும்;  

பாங்காய்க் கடமை செய்யார்க்கு.  

அற்றுப் போகும் நாளும் வரும்;  

அந்தோ போகிறார், அழிவதற்கு! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

நட்பா?

நட்பாய் மாறும் நயவஞ்சகர்!   

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:10-12.  
10  பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.11  அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.12  முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.  
கிறித்துவில் வாழ்வு:  
எதிரியின் எதிரி நட்பாகும்,  

ஏய்ப்பார் மிகுந்த அந்நாட்டில்,  

அதுவரைப் பகையாய் இருந்தவர்கள்,  

அறையும் முடிவில் ஒன்றிணைந்தார்.  

சதுரங்கமாடியே கழுத்தறுக்கும்,  

சதிப்பார் மிகுந்த இந்நாட்டில்,  

விதியால் வந்தது என்னாமல், 

விண்முடிவில் யார் ஒன்றிணைவார்?  


ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

பேசாமல் பேசுகிறார்!

பேசாமல் பேசும் இயேசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:8-9.  

8   ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,

9   அநேக காரியங்களைக் குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.  

கிறித்துவில் வாழ்வு:  

காண விரும்பும் ஏரொது.

காட்டும் ஆவல் புரியுது.  

நாண மறுக்கும் அவனது,   

நஞ்சு நெஞ்சும் பெரியது.

வாண வெடியைப் போலிது 

வராத தூது, அரியது.  

பேண மறுக்கா மகனது, 

பேசா வாக்கில் தெரியுது! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

தட்டிக் கழிக்கும் பொறுப்பு!

தட்டிக் கழிக்கும் பொறுப்பு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:6-7.  

6   கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,

7   அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.  

கிறித்துவில் வாழ்வு:  

தட்டிக் கழிக்கும் பொறுப்பும்,

வெட்டிக் கழிக்கும் பொழுதும்,  

ஒட்டிக் கொள்ள நாமும்,  

கட்டில் மேலே பிணமாம். 

குட்டிப் போடும் கடனும்,  

வட்டிக் கட்டா முதலும்,   

விட்டுப் பெருக வீடும், 

கெட்டுப் போன மணமாம்!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

கலகக்காரனா இயேசு?

கலகக்காரனா?

கிறித்துவின் வாக்கு:  லூக்கா  23:5.  5   அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.     

கிறித்துவில் வாழ்வு:  
நற்செய்தி கூறும் இடங்களிலே,  
நம்மை எப்படிப் பார்க்கின்றார்?  
கற்பனையிலும் நாம் நினையாத,  
கலக்காரருள் சேர்க்கின்றார்.  
முற்காலத்திலும் இப்படித்தான்;  
மூடர் இறையை வெறுக்கின்றார்.  
சொற்போர் புரியா இறைமகனும்,  
சிலுவை ஏறிப் பொறுக்கின்றார்!  

ஆமென்.