மனந்திரும்புங்கள்!

மனந்திரும்புங்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:31-32;
31தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
32யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அறிவின் முதிர்ச்சி எங்கே தெரியும்?
அனைவரை மீட்கும் நேர்மையிலே.
குறுகிய அறிவு எங்கே சரியும்?
கொடுமையைப் புகழும் பார்வையிலே.
வெறியும் வெறுப்பும் எங்கே முடியும்?
விரும்பா அழிவில் தோற்பதிலே.
நெறியும் வாழ்வும் எங்கே தொடங்கும்?
நேர்மை இயேசுவை ஏற்பதிலே!
ஆமென்.

மன்னிக்கும் அன்பு!

மன்னிக்கும் அன்பு!


அன்பின் தன்மை பலவகை உண்டு.

அம்மா அப்பா உறவில் உண்டு.

துன்பில் உதவும் நட்பிலுமுண்டு.

தூய்மைக் காதல் தருவதுமுண்டு. 


இன்னும் மேன்மை வேறொன்றுண்டு;

இறையின் பண்பாய்க் காண்பதுண்டு.

மன்னிப்பென்று கொடுப்பதில் உண்டு.

மாபெரும் அன்பு இயேசுவிலுண்டு!


-செல்லையா.

யோனா!

யோனாவின் முன்னடையாளம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:29-30.

29ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
30யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார்.

கிறித்துவில் வாழ்வு:
மூன்று நாட்கள் மீனின் வயிற்றில்,
முன்பு யோனா இருந்ததுபோல்,
சான்று கேட்கும் சந்ததியார்க்குச்
சாவை வென்றவர் இருந்தாரே.
தோன்றுகின்ற அறியாமையினால்,
துணிகரக் கேள்வி கேளாமல்,
ஊன்றுகோலென வாக்கைப் பிடித்தோர்,
ஒரு நாள்கூட வருந்தாரே!
ஆமென்.

பெரும் பேறு!

பெரும்பேறு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:27-28.

27அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
28அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்ற அன்னை மரியைவிடவும்,
பேறு பெற்றார் இல்லையென்று,
உற்று நோக்கிய ஒரு தாய் சொல்ல,
உண்டு மேலாம் பேறு என்றார்.
பற்று கொண்டு பணி செய்வார்தான்,
பாரில் மிகப்பெரும் பேறடைவார்.
கற்று நிற்கும் நீங்களும் நானும்,
காத்து நடந்தால், ஏறு என்பார்!
ஆமென்.

விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்துகள்!


எழுபதும் இரண்டும் கடந்த பின்னும்,

இந்தியர் ஒன்றெனக் காட்டவில்லை.

பழுதினைக் கொணரும் தீதென அறிந்தும்,

பாழாம் சாதியை ஓட்டவில்லை.

அழுதிடும் மக்கள் அலறிக் கேட்டும்,


அவரையும் உறவெனக் கூட்டவில்லை.

தொழுகையை நாடும் தலைமைக்கின்னும்,

தூய்மை என்றால் நாட்டமில்லை!


-கெர்சோம் செல்லையா.

வெற்றிடம்!

வெற்றிடம் வேண்டாம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:24-26.

24அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,
25அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,
26திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
வெற்றிடமாக வீட்டை வைத்தால்,
விரும்பாப் பேய்கள் படியேறும்.
சுற்றிலுமுள்ளத் தீயோர் குழுவும், 
சொந்தம் பேசிக் குடியேறும்.
பற்றினைப்பெற்று, பரமனைப் பிடித்தால்,
பாழ்பட்ட வாழ்வும் சீராகும்.
கொற்றவரேசு குடித்தனம் வந்தால்,
கோணல் யாவும் நேராகும்! 
ஆமென்.

காக்கும் கடவுள்!

காக்கும்கடவுள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:21-23.

21 ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்.
22 அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
23 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

கிறித்துவில் வாழ்வு:
தீங்கு செய்யும் நோக்கங் கொண்டு 
திருடன் அலகை அலைகின்றான்,
ஆங்கு அவனது வலிமை முன்பு,
அடிமையோ நிலை குலைகின்றான்.
ஏங்கி நிற்கும் ஏழையர் கண்டு,
இரங்க மறுப்பான் தொலைகின்றான்.
தூங்கி வழிவான் இறைவன் ஆகான்;
தாங்கி மீட்பதே தலையென்பான்!
ஆமென்.

சுண்டு விரலால்!

சுண்டு விரலாலே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:18-20.

18சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
19நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
20

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

கிறித்துவில் வாழ்வு:
தொண்டு செய்வோர் அழுவது பாரும்;
தீமையை அகற்றித் தேற்றிவிடும்.
சுண்டு விரலே உமக்குப் போதும்;
சுடரொளி பரவிட ஏற்றிவிடும்.
கண்டு புகழும் கண்ணைத் தாரும்;
கடவுளின் அரசால் ஆற்றிவிடும்.
கொண்டு ஒழுகுவேன் அன்பாகட்டும்;
கிறித்துவே உமைப்போல் மாற்றிவிடும்!
ஆமென்.

ஒற்றுமை!

வேண்டாம் பிரிவினை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:16-17.

16வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
17அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம்.

கிறித்துவில் வாழ்வு:
ஒற்றுமையில்லா நாட்டினர் என்றும் 
ஓங்கிச் செழிக்க இயலாது.
குற்றங்கள்கூறி குதறி எடுக்கும்,
குடும்பமும் ஊரில் உயராது.
மற்றவருணர்வை மதிக்க மறுக்கும்,
மனிதமும் மாண்பு அடையாது.
உற்றுப் பார்த்து, உள்ளங் கழுவின்,
ஒருமனதிற்குத் தடை ஏது?
ஆமென்.

சோர்ந்து போகாதீர்!

நன்மை செய்யும் இடங்களிலே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:14-15.

14பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
15அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நன்மை செய்யும் இடங்களிலெல்லாம்,
நம்பா மனிதர் தூற்றிடலாம்.
பன்மை மடங்கு பட்டவரெல்லாம்,
பாரில் உண்டு, தேற்றிடலாம்.
இன்னிலமிறங்கி, இடரேற்றவராம்
இயேசுவின் அருளால், ஆற்றிடலாம்.
என்னே துன்பம், யார் கொடுத்தாலும்,
இறைவன் உண்டு, போற்றிடலாம்!
ஆமென்.