இன்றும் கேட்போம் நற்செய்தி!

நல்வாழ்த்து:
அன்பில் வாழ்ந்து இறை புகழ்வோம்;
அறிவை வளர்த்து இறை புகழ்வோம்.
துன்பம் தந்திட வருபவர்க்கும்
நன்மை செய்து நாம் புகழ்வோம்!
நல்வாக்கு: மத்தேயு 25:29-30.
ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ‘ என்று அவர் கூறினார்.”
நல்வாழ்வு:
இல்லாதிருப்பது வளர்ந்திடுமோ?
என்றும் இல்லை, இவ்வுலகில்.
எல்லாம் வளர வேண்டுமெனில்
இருக்க வேண்டும் அவை முதலில்.
சொல்லால் இயேசு உரைத்தபடி
சொந்தமாக்குவோம் பற்றுறுதி.
நல்லாயனே நிரப்பிடுவார்,
நமது கிண்ணம் வழியும்படி!
ஆமென்.

இன்றைய நற்செய்தி

நல்வாழ்த்து:
இறைவனின் பிள்ளையே வாழ்த்துகிறேன்;
இயேசுவின் பெயரில் வாழ்த்துகிறேன்;
கறைகள் போக்கும் திருவாக்கால்
கழுவப்படவே வாழ்த்துகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 25: 26-28.
“அதற்கு அவருடைய தலைவர், ‘ சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ‘ என்று கூறினார். ‘ எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.”

நல்வாழ்வு:
கொடுக்கும் இறையே கூடக் கொடுப்பார்;
கொடியவர் கெடுக்க விடாது தடுப்பார்.
எடுக்கும் நாமும் ஏய்ப்பதை விடுவோம்;
இயேசு தருவதில் இன்பம் அடைவோம்!
ஆமென்.