நாலடி நற்செய்தி!

எது மீட்கும்?

 
உங்கள் பற்று உங்களைக் காக்கும்;

உண்மை நம்பி, உளம் புதிதாக்கும்.  

எங்கள் மீட்பு  இதனைச்  சொல்லும்;


இறைவழி தானே என்றும் வெல்லும்!

-செல்லையா.

என்னுடன் இருப்பவர்!

என்னுடன் இருக்கும் நன்னிறை!
நற்செய்தி: யோவான் 8:29.

நல்வழி:

என்னைப் படைத்து, யாவையும் கொடுத்து,

எங்கும் நடத்தும், என் இறையே,

தன்னம் தனியே தள்ளவும் தடுத்து, 

தாங்கிச் சுமப்பதும் உம் நிறைவே. 

இன்னிலத்தோரும் இவ்வறிவடைவார்;

இறைவழி காட்டிடும் திருமறையே. 

சென்னிறக் குருதி தந்திடும் உறுதி,

சீராக்கட்டும் இவர் குறைவே! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

தாழ்வு தருகிற உயர்வு!

தாழ்வு தருகிற உயர்வு!

நற்செய்தி: யோவான் 8:28.

நல்வாழ்வு:


தாழ்வில் உயர்வு, பெற்றுச் சொல்ல,

தவறாதிறை முன் வருவீரே. 

வாழ்வின் மேன்மை குருசில் கண்டு,

வளமாம் தாழ்மை பெறுவீரே.

ஏழ்மை என்றும் பொருளில் அல்ல;

இறையறிவாகும், தெரிவீரே. 

ஆளும் இறையின் தாழ்மை கொண்டு,

அன்பால் நன்மை புரிவீரே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

இயேசு யார்?

இயேசு யார்?


நற்செய்தி: யோவான் 8:25-27

நல்வழி:


என்னில் எழுந்த ஐயம் தீர்த்து,

என்னை ஆளும் ஏசுவே,

முன்னில் வந்து, கேளாதிருந்து, 

முனகுவாரிலும் பேசுமே. 

தன்னைக் காணும் தன்மை ஈந்து,

தவற்றினின்று மீளுமே. 

பின்னிக் கொண்ட, பேதைமை ஓட,

பேரறிவாலே ஆளுமே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

விண் பார்ப்போம்!

விண் பார்ப்போம்!

நற்செய்தி: யோவான் 8:23-24

நல்வழி:


கண்ணைக் கட்டி, காட்டில் விட்ட,

கதை போல் வாழும் மானிடா,

எண்ணத் தூய்மை எப்படிப்பட்ட,

இனிமையான தேனடா!

மண்ணைத் தேடின், மண்ணேயாகும்,

மனதின் எண்ணம் தானடா. 

விண்ணைப் பார்த்து, வேண்டு தூய்மை. 

விடியும் வாழ்வு வானடா!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

தற்கொலை!

நற்செய்தி: யோவான் 8: 22.

நல்வழி:


உன் பிறப்பு, உன் விருப்பா?

உண்மை அது இல்லை. 

என் இறப்பு, என் முடிவா?

எனக்குரிமை இல்லை. 

தன் பிறப்பின் நோக்கறிவின்,

தவறுமிடம் இல்லை.

நன் வாழ்வு, நம் இறையில்;

நம்பின், குறைவில்லை!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

தீமை!

தீங்கின் முடிவு!  


நற்செய்தி: யோவான் 8:20-21.


20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.  


நல்வழி: 


தீங்கை விற்கும் தீமையாளர்,

தெய்வ மீட்பை வாங்காரே.

ஏங்கி நின்றும், ஏற்கா மனிதர்,

இறுதித் தீர்ப்பைத் தாங்காரே.

வாங்கி விற்கா மீட்பையருள்வார்;

வல்லமை இறையும் தூங்காரே. 

தாங்கி ஏற்று நம் பழி சுமந்தார்;

தனையன் அன்பில் நீங்காரே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

நாலடி நற்செய்தி…6.

நாலடி நற்செய்தி …6. 

அன்பு!


தன்னலம் இல்லா நிலைதான் அன்பு;

தருகிற  இறையிடம் கற்பாயா?

உன்னினம் கடந்து உதவும் பண்பு,

உண்மை அறமென நிற்பாயா?

-செல்லையா.

மகனைக் கண்டு!

மகனைப் பார்த்து தந்தையை அறிதல்!

நற்செய்தி: யோவான் 8:19.  

19. அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.   


நல்வழி:

பிள்ளையின் வடிவில் பெற்றோர் காணும்,

பேதமை இல்லாக் கருத்தவராய்,

கள்ளமும் தவறும் செய்வார் கண்டு,

காணாத் தந்தையை, பழிக்கிறோம்.

உள்ளமும் நாவும் உரைத்திட நாணும்,

ஓவாச் செயலே செய்பவராய், 

வெள்ளை இயேசு மகனைக் கொண்டு,

விண் பாராது, முழிக்கிறோம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.

இறைவழி!

நாலடி நற்செய்தி…5


இறைவழி!


திருவடி அடையும் பெருவழி கேட்டேன். 

தெரியா வழிகள் சொன்னார்கள். 

ஒரு வழி கண்டு,  உட்புகுந்திட்டேன். 

இறைவழி அன்பு என்பார்கள்!


-செல்லையா.