நெஞ்சே கலங்காதே!

கலங்காதிரு நெஞ்சே!
இறை வாக்கு: யோவான் 14:1.

 1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

இறை வாழ்வு:

அச்சமும் ஐயமும் அகத்தின் நோய்கள்,
ஆண்டவர் இருக்க ஏன் கொண்டாய்?
எச்சமாய் இவைகள் இருப்பதினாலே,
எண்ணிலடங்காத் தீங்குண்டாய்.
பச்சிலை மரத்தில் கனிகள் பிறக்க,
பாயும் கீழடி வேர் பெறுவாய்.
உச்சியின் மேலே வாழ்வு சிறக்க,
உண்மைப்பற்று உள்ளுறுவாய்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உதவுவோம்!

உதவாதிருந்தேனே!

இன்னும் அன்பாய் நன்மைகளீந்து
எளியருக்குதவாதுதறினேனே;
என்னும் எண்ணம் பன்முறை வந்து,
என்னை அழுத்தப் பதறினேனே.
பின்னால் தொடரும் தீதால் அழியும்,
பிறவியைத் திருத்தக் கதறினேனே.
முன்னால் நின்று, அருளைப் பொழியும்,
மும்மையாரால் இனி உதவுவேனே!

-கெர்சோம் செல்லையா.

நோக்கறிவோம்!

உணர்ச்சிப் பேச்சு!

இறை வாக்கு: யோவான் 13:36-38.

 1. சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
 2. பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
 3. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இறை வாழ்வு;

உணர்ச்சி பொங்கப் பேசும் வாக்கு
உயிர் தரும் ஆவியர் வாக்காமோ?
கணத்தில் தன்னை மறந்த நாக்கு,
கடவுள் மகிழ்கிற நாக்காமோ?
மனத்தை அடக்கி வாழாப் போக்கு,
மன்னர் விரும்பும் போக்காமோ?
நினைத்து வாழ்வோர் நிலையும் நோக்கு,
நிலைவாழ்வு நல் நோக்காமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

எது ஆன்மீகம்?

எது ஆன்மிகம்?

ஏழைக்கிரங்குதல் ஆன்மீகம்.
எவரையும் ஏற்கும் ஆன்மீகம்.
வாளைத் துறப்பதும் ஆன்மீகம்.
வாழ வைப்பதும் ஆன்மீகம்.
தாழ்மையின் உருவம் ஆன்மீகம்;
தன்னலம் இழப்பதும் ஆன்மீகம்.
கோழைத்தனமா ஆன்மீகம்?
கொடாது தீமை, ஆன்மீகம்!

-கெர்சோம் செல்லையா.

அன்பு ஒன்றே வழியாகும்!

அன்பு ஒன்றே வழி!

முன்னொரு காலத்து மூடம் இல்லை;
முடிவு கட்ட நீ கேளு.
இனொரு பிறவி என்பதும் இல்லை;
இதையுமறிந்து, வாழு.
பன்வகை வழிகள் சேர்ப்பதும் இல்லை;
பரன் வழி அன்பை நாடு.
சொன்னவர் இயேசு, பிழையே இல்லை;
சொந்தமாக்கு, இறை வீடு!

-கெர்சோம் செல்லையா.

இறை வாக்கும், இறையன்பும்!

இறை வாக்கும் இறையன்பும்!

இறை வாக்கு: யோவான் 13:34-35.

 1. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
 2. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

இறையன்பு:

இறையடியானெனச் சொல்கிற என்னில்

இறை அன்புண்டோ, அளக்கிறேன்.

குறை நிறைவாக அளக்கும் முன்னில்,

கொடுமை செய்து பிளக்கிறேன்.

உறையிலொளிக்கும் கத்தியை உருக்கும்;

உள்ளன்பில்லை, வெறுக்கிறேன்.

அறைய வேண்டாம், அன்பைப் பெருக்கும்;

அழிக்கும் வெறுப்பை நொறுக்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இப்போது வரயியலாது!

இப்போது வரயியலாது!

இறைவாக்கு: யோவான் 13: 33.

 1. பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.

இறையறிவு:

இப்போது வர இயலாவிடினும்,
இன்னொரு நாள் வருவனே.
அப்போது உம்மிடம் வந்ததும்
ஆவியை பாவி தருவனே.
எப்போது ஆயினும் ஆயத்தம்
என்று கூறுதல் அருமையே.
தற்போது உம் திரு வாக்கருளும்;
தரணிக்கதுதான் பெருமையே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஆன்மீகம் என்பது என்ன?

இறை மாட்சியுறுதலே ஆன்மிகம்!

இறைவாக்கு: யோவான் 13: 31-32.

 1. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
 2. தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.

இறையறிவு:

ஆன்மயியல் அறிவறிய,
அலைகின்ற மானிடனே,
மேன்மையுற கிறித்துரைத்த,
மெய்வழி காட்டுகிறேன்.
ஏன் பிறந்தேன் என்பதற்கு,
ஏற்ற பதில் கேட்போனே,
நான் அவர்போல் இறைமாட்சி,
நல்கவே கூட்டுகிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இராக்காலம்!

இராக்காலம்!

இறைவாக்கு: யோவான் 3:30.

 1. அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.

இறையறிவு:

இரவின் கருமை இழுக்கும் வேளை,
இயேசுவை விட்டுப் போனானே.
உறவை முறித்துச் சென்றதனாலே,
உயிர் மீட்பிழந்தவன் ஆனானே.
தரகுக்கென்று தலை தாழ்ந்தாலே,
தவறு இறுக்க, மாள்வாரே.
பரனை நோக்கி, பணவெறி நீக்கி,
பரிந்து உதவின், ஆள்வாரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏழைக்கிரங்கு !

மூட நெஞ்சே கேள்!
இறைவாக்கு: யோவான் 13:29.

 1. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

இறையறிவு:

இறைப்பணி என்பது பேசுதல் தானா?

இல்லா ஏழை எளியருக்கிரங்கு.

முறைப்படி நானும் செய்கின்றேனா?

மூடநெஞ்சே, பணிந்து கறங்கு.

அறையக் கொடுத்தவன் கையில் அன்று

ஆண்டவர் காசு இருந்ததை எண்ணு.

குறையறத் திருப்பணி செய்வேன் என்று,

கொடுத்து ஏழைக்குதவி பண்ணு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.