பொறுத்தல்!

பொறுத்தல்!
நற்செய்தி: யோவான் 8:11.

நல்வழி:


பொறுத்துக் கொள்ளல் இறையின் அன்பு; 

பொல்லார் நமையும் பொறுக்கிறார்.

வெறுத்துத் தள்ளல் குறையின் பண்பு. 

வெளிச்சம் இல்லார் வெறுக்கிறார்.

அறுத்துச் செல்லும் அழிவு தடுப்பார்,


அன்புப் பொறுத்தல் பெருக்கிறார். 

மறுத்துத் திரிவின், மாண்பு கெடுப்பார்;


மத வெறியாலே சிறுக்கிறார்.   


ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

குற்றம் சாட்டுதல்!

யோவான் 8:10.

நல்வழி:


உளச்சான்று வேலை செய்தால்,

ஒருவரையும் கல்லெறியோம். 

கிளைச்சான்றும் நாம் தேடோம்;

கேடு கெட்ட  சொல்லெறியோம்.

பழச்சாற்றின்  இனிமையெனும்,

பண்புகளால் நாம் நிறைவோம்.

இழக்காமல் இவை வளர்ப்போம்;

இன்னொருவர் குறைகூறோம்!

ஆமென்.  


-கெர்சோம் செல்லையா. 

தவறே செய்யாதொருவர்!

தவறே செய்யாதொருவர்!
நற்செய்தி: யோவான் 8:9.


9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.


நல்வழி:


தவறே செய்யாதொருவர் வந்து,

தன் கையாலே கல்லெறிவீர்.

அவரே பிறரைத் தண்டிப்பதற்கு,

அருகதையுள்ளார்; சொல்லறிவீர்.

எவரே உரைப்பார் இவ்வருந்தீர்ப்பு?

இயேசுவின் திருமொழி என்றறிவீர்.

இவரே நடுவர், இனிமேல் நமக்கு;

இவர் வழி தூய்மை நன்கறிவீர்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

இயேசு எழுதியது!

இயேசுவின் எழுத்து!

நற்செய்தி: யோவான் 8:7-8. 7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

நல்வழி:

தரையில் எழுதிய இயேசு தீர்ப்பு,

தவற்றைச் சுட்டிக் காட்டலையா?

உரைநூல் வடிவில் வராத சேர்ப்பு,

ஊரை உணர்த்தி ஓட்டலையா?

திரையில் தோன்றா ஊழியர் உண்டு;

தெய்வ வாக்கைப் பரப்பலையா?

விரைவில் வருகிற நடுவர் கண்டு,

விரும்பும் தூய்மை நிரப்பலையா?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

நற்பதில்!

மௌனந்தானே நற்பதில்!

நற்செய்தி: யோவான் 8:6.

நல்வழி:


நம்மைக் குற்றப்படுத்தும் நோக்கில்,

நயவஞ்சகத்தைச் சொல்பவர்கள்,

தம்மைத் திருத்திக் கொள்வதற்கு,

தருவது எது நற்பதில்?

பொம்மை போன்று பேசாதிருத்தல்,


போதும் போதும் என்பவர்கள்,

மும்மை தெய்வச் செயலைக் காண்பர்;

மௌனந்தானே நல் மதில்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

குடும்பம் – அன்று, இன்று!

ஒரு முதியவரின் ஆவல்!

பாட்டன் பாட்டி பேர்புகழ் உண்டு.

பூட்டன் பூட்டி நேர்மையும் உண்டு.

ஏட்டில் எழுதும் நாட்டமும் உண்டு.

கேட்டுப் பாடும் கூட்டமும் உண்டு.

கோட்டை போன்ற குடும்பம் அன்று;

வேட்டை ஆடுதே இடும்பில் இன்று.

வீட்டில் உரைத்தேன் கேட்பாரென்று.

ஓட்டைக் காது; அடைப்பது நன்று.

-கெர்சோம் செல்லையா.

இவள் இங்கே! அவன் எங்கே?

இவள் இங்கே! அவன் எங்கே?


நற்செய்தி: யோவான் 8:1-5. 

நல்வழி:  

இருவர் செய்த குற்றம்,

என்று சொல்லும் சுற்றம்,

ஒருவரையே அடிப்பின்,

ஒழிக அதன் கொற்றம் .

பெருகும் அருள் திட்டம்,

பேசும் அன்பு வட்டம்,

தருபவரைப் பிடிப்பின்,

தவறுகள் தரை மட்டம்! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

இகழ்வாய்ப் பார்த்தல்!

இகழ்வாய்ப் பாராதீர்!


நற்செய்தி: யோவான் 7:52-53.  

நல்வழி:

கல்வி, கேள்வி, பொருளியல் வாழ்வில்,

கரை சேராத கலிலியரை,

நல்லறிவாளர் வரிசையில் வையார்,

நன்கு கற்ற அந்நாட்டார்.

எல்லோருக்கும் அறிவைப் புகட்டும்,

இறையோ அன்று தம் மகனை,

இல்லா ஊரில் வளரச் செய்தார்;

இதைக் கற்பாரா இந்நாட்டார்?


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

மறுபக்கமும் பாருங்கள்!

  1. யோவான் 7;50-51.

நல்வழி:

குற்றம் சாட்டப்பட்டோர் சொல்லும்,

கூற்றின் உண்மை பாராமல்,

ஒற்றைச் சட்டம் கேட்டுக் கொல்லும்,

ஒழுங்கீனத்தைச் செய்யாதீர்.

கற்றக் கல்வி, திறமையுரைக்கும்,


காத்தல் யாத்தல் செய்யாமல், 

சுற்றுச் சூழல் அழிந்திறக்கும், 

சேதப் பணியும் செய்யாதீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

பழிச்சொல் தவிர்ப்போம்!

பழிச் சொல் தவிர்ப்போம்!

நற்செய்தி: யோவான் 7:47-49.

47. அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
48. அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
49. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.

நல்வழி:

செழித்து வாழும் எண்ணம் இருந்தால்,

சிந்திப்போம் நாம்  இறை வாக்கை. 

அழித்து ஆட்டம் போட்டவர் எங்கே?

அழிவில் முடிந்தது அவர் வாழ்க்கை. 

பழித்து ஏசும் தவறும் வேண்டாம்; 

பகையின் தொடக்கம் சிறிதாகும். 

விழித்து எழுந்து நன்மை செய்வோம்;

விரும்பாத் தீங்கை அரிதாக்கும்!


ஆமென். 


-கெர்சோம்  செல்லையா.