என்ன வரியில்லை இந்தத் திரு நாட்டில்?
எங்கே போயிற்று, அவை காட்டில்?
சொன்னதெல்லாம் மறைந்தனவே இவர் ஏட்டில்!
சொறிவதற்கும் வலுவில்லை, உடற் கூட்டில்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
என்ன வரியில்லை இந்தத் திரு நாட்டில்?
எங்கே போயிற்று, அவை காட்டில்?
சொன்னதெல்லாம் மறைந்தனவே இவர் ஏட்டில்!
சொறிவதற்கும் வலுவில்லை, உடற் கூட்டில்!
-கெர்சோம் செல்லையா.
உண்மையுரைப்பவரே வெல்வார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:56-59.
“பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, ‘ மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம் ‘ என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.”
நற்செய்தி மலர்:
வழக்கில் வெற்றி காண்பதற்கு,
வாய்நிறையப் பொய் சொல்வார்.
இழக்கும் மானம் எண்ணாது,
இழிவினிறுதிக்கும் இவர் செல்வார்.
கிழக்கு தொடங்கி மேற்குவரை,
கிறித்தவப்பெயரிலும் பலர் கொல்வார்.
உழக்கு படியாய் மாறாது;
உண்மையுரைப்பவரே வெல்வார்!
ஆமென்.
முடிவை முதற்கண் எடுத்துவிட்டு….
நற்செய்தி மாலை:மாற்கு 14:53-55.
“அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.”
நற்செய்தி மலர்:
முடிவை முதற்கண் எடுத்துவிட்டு,
முறையற்று வழக்கைத் தொடங்குகிறார்.
படித்தவர் போர்வையை உடுத்துக்கொண்டு,
பண்பற்றுத் தீமையுள் முடங்குகிறார்.
அடிமைபோல் நிற்கும் எழையரோ,
அதைப் புரியாமலே மடங்குகிறார்.
விடியும் ஒரு நாள் இறையரசு;
வீணாய்ப் போனோர் அடங்கிடுவார்!
ஆமென்.
உணர்ச்சிப் பெருக்கில்….
நற்செய்தி மாலை: மாற்கு
“அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.51 இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.52 ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.”
நற்செய்தி மலர்:
உணர்ச்சிப் பெருக்கில் ஆடுவார்கள்;
உதவி கேட்டால் ஓடுவார்கள்.
மணலால் கட்டிய வீடு இவர்கள்;
மறுபடி மீண்டும் கூடுவார்கள்!
தணலாய் எரிக்கும் ஆவி அவர்கள்
தன்மை மாற்றத் தேடுவார்கள்.
சணலால் நெய்த ஆடையிழந்து,
சாகா மீட்புடை உடுப்பார்கள்!
ஆமென்.
உரைப்படி இயேசு முடிக்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14;47-49.
” அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, ‘ கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
அழைத்தால் வந்திடும் ஆண்டவரை,
ஆயுதம் கொண்டு பிடிக்கின்றார்.
தழைத்தார் அரசின் படையினரும்,
தவறாய் நேர்மையை அடிக்கின்றார்.
பிழைத்தார் இவர்மேல் சினமுற்று,
பேதுரு அடியார் துடிக்கின்றார்.
உழைப்பார் அறிந்து அமைதிபெற,
உரைத்தார் இயேசு, முடிக்கின்றார்!
ஆமென்.
நமது நேர்மையைப் பார்ப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு: 14 : 43 -46 .
“இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ‘ ரபி ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.”
நற்செய்தி மலர்:
எத்தனையோ வழிகளிலே,
ஏமாற்ற முயல்கின்றோம்;
அத்தனையும் பொய்க்கையிலே
ஆண்டவனின் செயலென்றோம்!
இத்தரையில் இவை யாவும்,
ஏற்புடைத்த இயல்பென்றோம்.
முத்தமிட்ட யூதனை நாம்,
முதலில் ஏன் கயவனென்றோம்?
ஆமென்.
ஒடுக்கப்பட்டோர் உணர்வு!
இழப்பின் வலி வருத்தும்போது,
இழக்க வேண்டாம் பொறுமை.
குழப்பம் செய்தார் என்றுகூறி,
கொடுப்பார் நமக்கும் சிறுமை.
உழைக்கும் மக்கள் உயரும்போது,
ஊரார் புகழ்வது அருமை;
பிழைக்குற்றங்கள் புரிவது வெறுப்பீர்;
பேரன்பேதான் பெருமை!
-கெர்சோம் செல்லையா
கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை!
நற்செய்தி மாலை: மாற்கு 14:39-42.
“அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
காட்டிக் கொடுப்பவன் வருவதை அறிந்து,
கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை.
கூட்டில் விழுந்த பறவையாய் நொந்து,
கூட்டம் கூட்டவும் விளிக்கவில்லை.
ஆட்டம் போட்டு அலறும் நாம்தான்,
அடுத்தவர் துயரிலும் ஒளிக்கின்றோம்.
பாட்டில் சொல்லும் பொருளையறிந்தால்,
படைத்தவர் விருப்பில் களித்திடுவோம்!
ஆமென்.