தமிழ் நாடு நாள்!
இன்று தமிழ் நாடு நாள்.
01-11-1956 -ஆம் நாளில் குமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணையுமுன், அம்மக்கள்மீது அன்றைய திரு-கொச்சி அரசு ஏவிய கொடுமைகளை நினைவுகூரும் நாள்.
ஆங்கிலேயர் நாளில்கூட அடக்குமுறைகள் அவர்கள்மீது அவ்வளவாயில்லை. ஆனால், பட்டம் தாணுபிள்ளையின் அரசோ மீண்டும் அவர்களை அடிமைப் படுத்தியது; அடக்கியே வைத்திருந்தது.
தமிழர், தமிழ் பயில இயலாது; தமிழருக்கு, அரசுப் பணியிலும் இடம் கிடையாது. கல்வியில் சிறந்திருந்தும், கயமைச் சாதியின் பெயரால் புறக்கணிப்பு. காசு ஒதுக்கீடுகளிலும், வளர்ச்சித் திட்டங்களிலும், கன்னியாகுமரி முற்றிலும் ஒதுக்கி வைப்பு.
கேட்டவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். போராடியவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
“கண்டால் அறியாம்” என்ற கூற்றின்படி, கண்டபடிச் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.
ஆனால், நொண்டியாக்கப் பட்டும் அவர்கள் விழுந்துவிடாமல், மீண்டும் ‘குஞ்சன்நாடர்களாய்’ எழும்பினார்கள்.
கையில் விலங்கிடப்பட்டும், கால் முதல் தலை வரை அடிக்கப்பட்டும், குழித்துறை ஆற்றில் குதித்துத் தப்பி, ‘மணிகளாய்த்’ திரும்பி வந்து, வீர முழக்கமிட்டார்கள்.
உயிரிழந்தவர் பலர், உடமையிழந்தவர் பலர், ஓடி ஒளித்தவர் பலர், ஒப்பனையிட்டு மறைந்திருந்தவரும் உண்டு சிலர்.
இப்படியெல்லாம் இவர்கள் இழந்தபின்னரே, இறுதியாக, இன்பத் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டார்கள்.
அந்த நாள்தான் 01-11-1956.
இங்கு வந்தபின் இவர்கள் மேன்மேலும் வளர்ந்தார்களா?
வளர்ந்தார்கள்; ஆனால் வளர்த்தியது அரசு இல்லை! கல்வியும், கடின உழைப்பும், எல்லாவற்றிற்கு மேலாக, கடவுளின் அருளுமே அவர்களை உயர்த்தியதேயன்றி, அரசுகள் துரும்பையுந் தூக்கவில்லை!
செய்யமாட்டேன் என்றுகூறித் தமிழ் நாட்டில் சேர்த்த காமராசர், முன்பு கல்லடிப் பட்டிருந்தும், அவர்களுக்குச் சிலவற்றைச் செய்தார். அவர்களும், அவரை நன்றியோடு பார்த்தார்கள்.
ஆனால், அவருக்குப்பின் வந்தவர்களுக்கு, நெல்லை எல்லையாயிற்று; குமரியோ தொல்லையாயிற்று!
ஆட்சிக்கு வந்துவிட்டால் அனைவரும் அசுரரோ?
தெரியாமல் கேட்கும்,
-கெர்சோம் செல்லையா.