பற்றுறுதி சற்றுமற்ற …
Month: October 2015
உம் உடை தொடுவேன்!
உம் உடை தொடுவேன்…
உம் கையாலே தொட்டால் போதும்!
உம்கையாலே தொட்டால் போதும்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:21-24
“இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.”
நற்செய்தி மலர்:
எம் கையாலே எது செய்தாலும்,
எமக்கு வருதல் நோவு ஆகும்.
உம் கையாலே தொட்டால் போதும்,
ஒவ்வொருநோயும், ஓடிப் போகும்.
இம்மாப் பெரிய நோய் என்றாலும்
இலாது போகும், மருந்தைக் கூறும்.
நம்பாமலே நடப்போர்களுக்கும்,
நற்செய்தியாம் விருந்தைத் தாரும்!
ஆமென்.

கடைநிலையோரும் பயன்பெறவே…..
கடைநிலையோரும் பயன்பெறவே….
நற்செய்தி மாலை: மாற்கு 5:18-20.
“அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.”
நற்செய்தி மலர்:
கற்ற அறிவும் பெற்ற மீட்பும்
கடைநிலையோர்க்கும் பயன்தரவே,
உற்று நோக்கும், ஊரும் உறவும்,
உயர்ந்து ஏற, இரங்கிடுமே.
குற்ற மில்லா வாழ்வு வாழும்
கிறித்து அன்பில் அவர் வரவே,
பற்று கொண்டு தொண்டு ஆற்றும்;
பரிசு மீட்பு இறங்கிடுமே!
ஆமென்.
வேண்டும் செல்வம் அன்பன்றோ!
வேண்டும் செல்வம் அன்பன்றோ!
நற்செய்தி மாலை 5:14-17.
“பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
மாடு பன்றி ஆட்டைவிட,
மனிதனின் மீட்பு பெரிதன்றோ?
பாடுபடுபவன் பாவியென்று,
பகைத்துத் தள்ளுதல் சரியின்றோ?
கோடுபோடும் இறை முன்னே,
குறைந்திருப்பவர் நாமன்றோ?
வீடுபேறு அடைவதற்கு,
வேண்டும் செல்வம் அன்பன்றோ!
ஆமென்.

ஆயிரம் பன்றி மாட்டைவிட…
ஆயிரம் பன்றி மாட்டைவிட…
நற்செய்தி மாலை: மாற்கு 5:11-13.
“அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.”
நற்செய்தி மலர்:
நாயினைக் கொஞ்சும் நல்லவரே,
நடப்புச் செய்தியும் கேட்பவரே,
பாயிரம் என்று உதறாமல்,
படைத்தவர் விருப்பெது அறிவீரே!
ஆயிரம் பன்றி மாட்டை விட
அழியும் ஒருவன் உயர்வாமே.
வாயினை மூடி உறங்காமல்,
வாழ, மனிதனைக் காப்போமே!
ஆமென்.

எண்ணப் பேய் விரட்டல்!
எண்ணப் பேய் விரட்டல்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:9-10.
“அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் “இலேகியோன் “, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.”
நற்செய்தி மலர்:
ஒன்றல்ல, நம்மைப் பிடித்த
எண்ணப் பேய்கள், ஒன்றல்ல.
என்றல்ல, என்றே உரைத்து
இழந்தோர் புகழ்தல், என்றல்ல.
நன்றல்ல, பேய்கள் பின்னால்
நாமும் செல்லல், நன்றல்ல.
இன்றல்ல, இப்படி நாளும்
எதிர்ப்போம் தீமை, இன்றல்ல!
ஆமென்.

பசாசும் பேசுகிறது!
பசாசும் பேசுகிறது!
நற்செய்தி மாலை: மாற்கு 5:6-8.
“அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார்.”
நற்செய்தி மலர்:
யார் இவர் என்று இயேசுவைப் பார்த்து,
ஏளனமாகக் கேட்பவரே,
பார் இவர், இறையின் மைந்தன் என்று,
பசாசு உரைப்பதும் கேட்பீரே.
மார் நிறை பற்று கொள்ளும்போது
மாற்றான் கூற்று தேவையில்லை.
நீர் இதையறிந்து, நேர்வழி வந்தால்,
நிம்மதிக்கென்றும் குறையுமில்லை!
ஆமென்.
