பொருளியல் கற்போம்!

பொருளியல் கற்போம்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:1-4.  

1   அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.

2   ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:

3   இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4   அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். 

கிறித்துவில் வாழ்வு:  

இரண்டு காசுச் சொத்தையெடுத்து, 

ஏழை படைத்தது நிறைவாகும்.  

திரண்டு வழியும் கோடியிலிருந்து, 

தெரியும் இலட்சமும் குறைவாகும். 

உருண்டு ஓடும் காசைச் சேர்த்து,  

உதவாதிருப்பது சிறையாகும்.  

புரண்டு விழுமுன், பொருளியல் அறிவு,  

புகட்டித் தருவது இறையாகும்!  

ஆமென்.

முதலிடம்!

எங்கிருக்க வேண்டும் என்றறிவோம்!

கிறித்துவின்  வாக்கு: லூக்கா 20:45-47  

45  பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

46  நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,

47  விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.   

கிறித்துவில் வாழ்வு:

முதலிடம் பிடிக்க ஓடுகிறோம்;  

முதல்வராய் இருக்க நாடுகிறோம்.  

வித விதமான விளம்பரத்தால்,  

வெற்றி வருமெனத் தேடுகிறோம்.  

அதனதன் இடத்தில் இருப்பதுதான்,

ஆண்டவர் கூறும் அறிவுரையாம்;  

இதனை நம் உடல் உறுப்பினின்று, 

இன்றே கற்பது நெறிமுறையாம்!  

ஆமென்.

தாவிது பாடிய இறைவன்!  

கிறித்துவின் வாக்கு: 20: 41-44.  

41  அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?

42  நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,

43  கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.

44  தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

முப்புறப் பண்பின் முழுமையே இறைவன்;  

மூன்றல்ல ஒன்றே, மும்மை இறைவன்.  

எப்புறம் தேடினும் தெரிவார் இறைவன்;  

இயேசுவில் காண்போம் உண்மை இறைவன். 

தப்பையும் தவற்றையும் அழிப்பவர் இறைவன்;  

தாவிது பாடிய மேசியா இறைவன்.  

இப்புவி மீளக் கேட்போம் இறைவன்;  

இரங்குமினிய அன்பே இறைவன்.  

ஆமென்.

இருக்கின்றார்!

இருக்கின்றார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20: 37-40.  

37  அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.

38  அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.

39  அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.

40  அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.  

கிறித்துவில் வாழ்வு:  

இருப்பவர் இறப்பவராகிடினும்,  

எங்கோ மறைவில் இருக்கின்றார். 

நெருப்புடன் முடித்தவராகிடினும்,   

நெஞ்சின் திரையில் இருக்கின்றார். 

விருப்புடன் இயேசுவைப் பணிந்தவரோ,  

விண்ணில் இறையுள் இருக்கின்றார்.  

மறுத்து,வெறுத்து, மடிந்தவரோ, 

மறுபடி இறக்கவே இருக்கின்றார்!  

ஆமென்.

எழுபது!

எழுபது!  

எழுகிற  எழுபதை எனக்கும் கொடுக்கும்,  
என்னுயிர் இறையே போற்றுகிறேன்.  
விழுகிற உடலை விழாதும் தடுக்கும்,    
விண்மகன் ஏசுவே போற்றுகிறேன்.  
தொழுகிற நெஞ்சில் உண்மையும் ஊற்றும், 

தூய்மையின் ஆவியே போற்றுகிறேன்.  
அழுகிற  நாட்டின் அவலமும் மாற்றும்,  
அதுதான் வேண்டல், போற்றுகிறேன்!  

-கெர்சோம் செல்லையா.

உயிர்த்தெழுதல்!

வேறு சொந்தமில்லை! 

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:34-36.

34  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.

35  மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.

36  அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

எப்படி உயிர்ப்பில் இருப்போமென்று,

எண்ணிப் பார்த்தால் மகிழ்வீரே. 

அப்படி நாமும் அவருடன் இணைவது,

ஆண்டவர் அருளெனப் புகழ்வீரே.

இப்படி எழும்பும் புதுவாழ்வுள்ளே, 

எடுத்தலும் கொடுத்தலும் பண்ணாரே.  

சொற்படி நாமவர் மக்களாவதால்,

சொந்தம் வேறு எண்ணாரே!  

ஆமென்.

உயிர்த்தெழுதல்!

உயிர்த்தெழுதல்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:27-33. 

27  உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:

28  போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.

29  சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

30  பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

31  மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.

32  எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

33  இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

இனிவரும் மணித்துளி எப்படியிருக்கும்,  

என்றறியாத அறிவிலி நான்,  

மனிதரின் அறிவில் எட்டாதிருக்கும்,  

மறுமையை எங்கே கற்றிடுவேன்?

பனிமலை ஒன்று மறைந்திருந்தாலும்,

பரிதி கரைப்பது காணும் நான்,   

புனிதரேசு வழங்கும் உயிர்ப்பை,

பொய்யா மொழியில் பெற்றிடுவேன்!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.

கொடுப்போமே!

கொடுப்போமே! 

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:21-26.  

21  அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.

22  இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

23  அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

24  ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.

25  அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

26  அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு: 

உரியவருக்கு உரியவை எவையோ, 

ஒருகுறை வராமற் கொடுப்போமே. 

வரியென வாங்கும் அரசின் தீர்வை  

வன்மை எனினும் கொடுப்போமே. 

சரியெது தவறெது காட்டும் இறைக்கு,  

சரிவர அனைத்தும் கொடுப்போமே.

நெறியிதை அறிந்து நேர்மையில் வாழ,

நெஞ்சை இன்றே கொடுப்போமே!  

ஆமென்.

வஞ்சமாய் வந்து!

நல்லவர்போன்று நம்மிடம் வருகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:19-20.

19  பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.

20  அவர்கள் சமயம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:   

நல்லவர்போன்று நம்மிடம் வந்து, 

நமது வாயைக் கிளறுகிறார்.  

இல்லையுண்மை, இவரில் இல்லை;  

இதை அறியாதார் உளறுகிறார்.  

எல்லாமறிந்த இறையோ இன்று,  

எச்சரிப்படையச் சொல்லுகிறார்.  

சொல்லுமுன்னர் எண்ணுதல் நன்று;  

செவிடர் தமையே கொல்லுகிறார்! 

ஆமென்.

பாறையாகிய இயேசு!

கிறித்து என்னும் பாறை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:17-18.

அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு

கிறுத்து என்னும் பாறைமீது,

கிறுக்கர் விழுந்து நொறுங்குகிறார்.

அறுத்து விடுகிறதாக இழுத்து,

அவரது அடியில் நசுங்குகிறார்.

பொறுத்து போகும் அவரிடத்து,

புரிந்து வந்தோர் வாழுகிறார்.

வெறுத்து நின்று வீழ்ந்ததுபோதும்;

விண்ணரசரே ஆளுகிறார்!

ஆமென்.