அன்பே சட்டமாகட்டும்!

அன்பே சட்டமாகட்டும்!
உயிருக்கென்று உயிரை எடுக்கும்,
ஓட்டைச் சட்டம் ஒழியட்டும்.
கயிறை இன்று கழற்றி விடுக்கும்,
கனிந்த அன்பே வழியட்டும்.
பயிராய் நெஞ்சில் பண்பை வளர்க்கும்
பயின்றோர் வாக்கு ஆளட்டும்.
அயராதுழைப்போம், அன்பே வாழும்;
அதுவே, சட்டம் ஆகட்டும்!
-கெர்சோம் செல்லையா.

அலறிட வேண்டாம்!

அலறிட வேண்டாம்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:35-38.
“அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ‘ அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ‘ என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ‘ போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ‘ என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
இயற்கை விதியும்,
இறையைக் கேட்கும்.
செயற்கைச் சதியும்,
சொல்லால் அடங்கும்.
அயர்ந்தார் என்று,
அலறுதல் வேண்டாம்.
பயனைப் பெறுவோம்,
பற்றைக் கொண்டாம்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

அப்துல் கலாம்

அப்துல் கலாம்!
இப்படியும் ஒருவர்
இந்தியனாய் வாழ்ந்தார்.
அப்படியே தமிழர்,
அறிவாலே வாழ்வார்!
எப்படித்தான் இயலும்
என்றின்று கேட்போரே,
அப்துலைப் பாருங்கள்;
ஆண்டவர் அருள்வார்!
-கெர்சோம் செல்லையா.

வரமருளும்!

வரமருளும்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:33-34.
“அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
தன்னிலை அறியா மனிதருக்குத் 
தவற்றை உணர்த்தும் வாக்கருளும்.
அன்னியர் என்று அகலாது,
அன்புடன் அணைக்கும் நாக்கருளும்.
என்னிலை யுற்றோர் என்றறிந்து,
எடுத்துச் சொல்லும் திறனருளும்.
முன்னிலே காணும் எளியருக்கு,
முதலில் உதவிட வரமருளும்!
ஆமென்.

நன்மை விதைப்போம், வாரும்!


​நன்மை விதைக்க வாரும்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:30-32.

“மேலும் அவர், ‘ இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
ஒன்றுமில்லை என்று,
ஒளிந்திருந்தேன் நானும்;
இன்று காணும் யாவும்,
இறையின் ஈவு ஆகும்.
தொன்று தொட்டு தெய்வம்,
தொகுக்கும் செயலைப் பாரும்.
நன்று என்று கொண்டு,
நன்மை விதைக்க வாரும்!
ஆமென்.

வித்திட்டவன் ஆனாலும்…..

​விளையும் வகை நானறியேன்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:26-29.

“தொடர்ந்து இயேசு, ‘ இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
வித்திட்டவன் ஆனாலும்,
விளையும் வகை நானறியேன்.
முத்து முத்தாய் மணிக்கதிர்கள், 
முதிருவதைக் காண்கின்றேன்.
இத்தரையில் இறையரசும் 
இப்படித்தான் வளர்கிறதே.
கொத்து கொத்தாய் அறுப்போமே;
கிறித்துசொல் உ ரைப்போமே!
ஆமென்.

அளக்கிற அளவு!

அளக்கிற அளவு!

நற்செய்தி மாலை: மாற்கு 4: 24-25.
“மேலும் அவர், ‘ நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
எந்த அளவில் அளக்கின்றேன்,
என்பதை அறிந்த இறைமகனே,
இந்த நாளில் என் குறையை,
அறிக்கை செய்து அளப்பேனே!
உந்தன் அளவின் பெருந்தன்மை 
உள்ளில் ஊறி வெளிவரவே,
பைந்தமிழில் பாடுகின்றேன்;
பழியை நீக்கி, அளந்திடுமே!
ஆமென்.


ஊரின் விளக்காய் மாற்றும்!

​நற்செய்தி மாலை: மாற்கு: 4:21-23

“இயேசு அவர்களிடம், ‘ விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
விளக்கைக் கொளுத்தி மறைத்து வைக்கும்,
வெறுப்பின் வேலையை எனில் பாரும்.
அளக்கும் மரக்கால் உள்ளே ஒளிக்கும்,
அடியனை வெளியில் நீர் சேரும்.
தழைக்காதவனாய்த் தாழக் கிடக்கும்,
தவறிய என்னை நீர் தேற்றும்.
உழைக்காதவனாய் இருந்தது போதும்;
ஊரின் விளக்காய் எனை மாற்றும்.
ஆமென்.

அருளும் நலமும் சொரியட்டும்!


​அருளும் நலமும் சொரியட்டும்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:20

“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர் ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
முப்பது அறுபதாய் மாறட்டும்;
அறுபது நூறாய்த் தேறட்டும்.
இப்புவி வாழ்வில் நன்மைகளை,
யாவரும் பெற்று கூறட்டும்.
எப்படி நன்மை செய்வதென,
இயேசுவைப் பார்த்துத் தெரியட்டும்.
அப்படிச் செய்வோர் வாழ்வுதனில்,
அருளும் நலமும் சொரியட்டும்!
ஆமென்.