சுமை!

அடுத்தவன் தலைமேல்…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:45-46.45
அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.46அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அடுத்து ஒருவன் தலைமேல் வைத்து,
அவன் சரியில்லை என்னும் நாம்,
எடுத்து, சுமையினை ஏந்தி, பிடித்து,
என்சுமை என்று சுமந்ததுண்டா?
படுத்து, உருண்டு, பாடி, நடித்து,
பழங்கதை பேசும் கிறித்தவர் நாம்,
கெடுத்து விட்ட ஊழியம் சிறக்க,
கிறித்து சிலுவை சுமந்ததுண்டா?
ஆமென்.

அறுபத்தெட்டு!

அறுபத்தெட்டு ஆண்டுகள்!

உருவாய் வாழும் ஆண்டை எண்ணி,
ஊரார் அளப்பின், அறுபத்தெட்டாம்.
கருவாய் இருந்த காலமும் எண்ணி,
கணக்குப் பார்ப்பின் அருள் திரட்டாம்.
எருவாய் என்றோ போகவிடாமல்,
என்னைக் காப்பதோ இறைக் கூட்டாம்.
திருவாய் மொழியும் தெய்வ அன்பால்,
தொடர வைப்பதும் அவர் பொருட்டாம்!
-கெர்சோம் செல்லையா.

உயிரே! உயிரே!

உயிரே! உயிரே!


ஒருவர் இருவர் இறப்பது கண்டு,

ஏதோ விபத்தெனச் செல்கின்றார்.

பெருந்திரள் மக்கள் மடிவது கேட்டு,

பிறவிப் பயனெனச் சொல்கின்றார்.

குருதியெடுத்தல் சரியேயென்று,

கொள்பவர் இன்று வெல்கின்றார்.

அருமை உயிரோ ஆண்டவர் ஈவு;

அதை ஏன் மக்கள் கொல்கின்றார்?


-கெர்சோம் செல்லையா.

நம்மைப் பிடித்த பிணவாடை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:43-44.
43பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.44மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

தம்மை உயர்வென எண்ணுதல்போல்,

தவற்றில் உயர்ந்தது வேறில்லை.

இம்மை மறுமை இவ்விரண்டில்,

இவர்க்கு உய்யும் பேறில்லை.

நம்மைப் பிடித்த பிணவாடை,

நன்றாய் அகல வேண்டிடுவோம்.

எம்மை ஆளும் இறைமகனின்,

இயல்பாம் தாழ்மை பூண்டிடுவோம்!

ஆமென்.

யாவரும் ஒன்றே!

யாவரும் ஒன்றே!


பார்ப்பனர் செய்த பழம்பெருந் தவற்றால்,

பாழாம் சாதிகள் பிரித்தாலும்,

சேர்ப்பனராக யார் இன்றுள்ளார்?

சிதறிய குழுக்களாய்த் தானுள்ளார்.

ஆர்ப்பரிப்பவராய்ப் பிரித்தது போதும்.

அனைவர்க்கும் தந்தை இறையாமே.

ஏற்பவராகி ஒன்றாய் இணைந்தால்,

இந்தியர் வாழ்வு நிறைவாமே!


-கெர்சோம் செல்லையா. 

அன்பிலாத காணிக்கை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:42.

42பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

கிறித்துவில் வாழ்வு:
காணிக்கைகள் கொடுத்தால் போதும்;
கடவுள் அருளே கிடைக்குமென
ஆணித்தரமாய் நம்புகின்றாரே!
அறியாமையன்றி வேறில்லை.
நாணிக் கோணி நம் முன் இரக்க,
நல்லிறை ஒன்றும் மனிதனில்லை.
பேணிக் காக்கும் அவரது அன்பைப்
புரிந்தாலன்றிப் பேறில்லை!
ஆமென்.

அழுக்கு எங்கே?

ஒரு வண்டி அழுக்கை உள்ளே வைத்து!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 11:37-41.37அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனே கூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார்.38அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.39கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.40மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?41உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.


கிறித்துவில் வாழ்வு:

இரு கை கால்களைக் கழுவிக் கொண்டு,

யான் மட்டும் தூய்மை என்றோரே,

பெரு வண்டி அழுக்கை மூடிக்கொண்டு,

பெருமையில் தொலைந்து போனீரே.

ஒரு முறைகூட உமக்குச் சொல்வேன்;

உள்ளழுக்கேதான் கேடு தரும்.

அருளால் கழுவும்; ஏழைக்கிரங்கும்;

அப்புறம் பாரும், தூய்மை வரும்!

ஆமென்.

கண்ணெனும் விளக்கு!

விழித்திடும் கண்ணே விளக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:34-36.

34கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.
35ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
36உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
விழித்திடும் கண்ணே விளக்காகும்;
வீணாய் வைத்தால் இருளாகும்.
செழித்திடும் வாழ்விற்கு வழியாகும்;
செயல்படுத்துவதோ அருளாகும்.
பழித்திடும் கூட்டமும் பலவாகும்;
பாராதீர் அவை மருளாகும்.
கழித்திடும் இரவும் பகலாகும்;
காண்பீர் வாழ்வின் பொருளாகும்!
ஆமென்.

விளக்கு!

விளக்காய் மாறுவோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:33.33 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
கிறித்துவில் வாழ்வு:

எங்கும் வெளிச்சம் பரவுக என்னும்,

இறைவனை நினைவு கூருங்கள்.

இங்கும் இருளைக் கிழித்துச் செல்லும்,

எரிகிற விளக்கென மாறுங்கள்.

மங்கும் திரியைத் தூண்டிக் கொடுக்கும்,

மரத் தண்டின்மேல் சேருங்கள்.

பொங்கும் பகைவர் புரியாதிருந்தும்,

போற்றும் புதுமையும் பாருங்கள்!

ஆமென்.