உயிர்த்தெழுதல்!

உயிர்த்தெழுதல்!

நற்செய்தி: யோவான் 5:29.

29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

நல்வழி:

நன்மை செய்வோர் உயிர்த்தெழுந்து,

நல்லிறையோடு ஆண்டிடுவார்.

வன்முறையாளரும் எழும்பி வந்து,

வாடா நெருப்பில் மாண்டிடுவார்.

அன்பின் வடிவாம் மகன் அன்று,

அவரவர் பயனை அளந்திடுவார்.

இன்று எதிர்த்து இகழ்பவரோ,

இனிய மீட்பை இழந்திடுவார்!

ஆமென்.

கல்லறையும் கேட்கும்!

கல்லறையும் கேட்கும்!

நற்செய்தி: யோவான் 5:28.

28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;

நல்வழி:

கல்லறைக்கும் காது உண்டு;

கடவுட்சொல் அது கேட்கும்.

நல்லவர்க்கும் வாழ்வுண்டு.

நம்பிக்கையே நமை மீட்கும்.

சில்லறைக்கும் துரு உண்டு.

சீர்வாக்குச் சான்று தரும்.

இல்லையென்றால் எது உண்டு?

இரண்டுமுறை சாவு வரும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இறுதித் தீர்ப்பு!

இறுதித் தீர்ப்பு!


நற்செய்தி: யோவான் 5:26-27.

நல்வழி: 


களையெடுக்கும் கடைசி நேரம், 

கண் முன்னில் தெரிகிறது.

விளைவெடுக்கும் முன்பதுவும்,

வெளியிடத்தில் எரிகிறது.

முளை தளிர்க்கும் மறைவாக்கும்,


முழு வடிவில் விரிகிறது.

தளை முறிக்கும் இறையருளும்,

தண்டனையில் புரிகிறது!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

இறை ஒலி!

இறையொலி!

நற்செய்தி : யோவான்: 5:25.   

நல்வழி: 


பிறந்தோர் உள்ளில் இறையின் பாட்டு,

பிரியா அன்பால் ஒலிக்கட்டுமே.

இறந்தோர் நெஞ்சும் இதனைக் கேட்டு, 

இயேசு அருளால் விழிக்கட்டுமே.

மறந்தோர் என்னும் நாமும் இன்று,

மறு பிறப்பாகிச் சொலிக்கட்டுமே.

சிறந்தோர் சூழ, வரும் மகன் அன்று,

சிறுமை யாவும் ஒழிக்கட்டுமே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

வாழ்வின் வழி!


நற்செய்தி: யோவான்  5:23-24.  


எவ்வழி நல்வழி என்றறியாது,


எழுந்து நடவா மனிதருக்கு,

செவ்வழி உன்வழி என்றறிவித்து,

செயலில் நடத்தும் இறை மகனே,

இவ்வழி தவிர வேறிலையென்று,

இனிதே செல்லும் புனிதருக்கு,

அவ்வழி சொல்லும் வாழ்வடைய,

அன்பு ஊற்றி, நிறை மகனே!


-ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

விண்ணின் தீர்ப்பு!

விண்ணின் தீர்ப்பு!


நற்செய்தி: யோவான் 5:22

நல்வழி:


தினை விதைத்து தினை அறுப்பார்,

தேய்ந்துபோகும் இந்நாட்டில்,

வினை புதைத்து தனை மறுப்பார்,

விளைச்சலாலே மகிழ்வாரோ?

பனை மரம் போல் பயன் தருவார்,


பரிசுவாங்கும் அந்நாளில்,

எனை இணைத்த  இறை மகனார் 


எழுது தீர்ப்பில் மகிழ்வாரே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.