ஆடு மேய்த்த தாவிதை அழைத்து, அரசு தந்ததும் இறையருளே. நாடு காத்திட சந்ததி தெரிந்து, நடத்தி வந்ததும் இறையருளே. வீடு பேறு வழங்கும் வழிக்கு, விண் தேர்வதும் இறையருளே. தேடு நண்பா, இறையைத் தேடு; தெய்வ அறிவும் இறையருளே! (2 சாமுவேல் 7).
தன்னிலை விளக்கும் பாடல்கள் தந்தும் தாவிது இறையைப் புகழ்கிறார். முன்னறிவோடு இறை வாக்குரைக்கும், முழுமைப் பற்றிலும் திகழ்கிறார். இந்நிலம் மீட்க வருபவர் ஒருவர், இவர் வழித்தோன்றல் என்கிறார். சொன்னவை பாடி, சுவைப்பவர் கோடி; சொந்தமாம் பேறும் உண்கிறார்! (தாவிதின் திருப்பாடல்கள்)
ஆயனாயிருந்து அரசனாய்ச் சிறந்தும், அவரிலும் தவறு இலாமலில்லை. நேயனாய்த் திருப்பாடல்கள் வரைந்தும், நேர்மைக் குறை தொலையவில்லை. சேயனாய்த் தாழ்ந்து, திருந்தும் வரைக்கும், செய்தவை விளையாதிருப்பதில்லை. தூயனாய் மாற்றும் தெய்வ உரைக்கும், திருந்தார் வாழார், மறுப்பதில்லை! (2 சாமுவேல் 11-12:25)
தடைக் கற்களை உடைத்துப் போடும் தாவிது, ஈசயின் புதல்வன். கடைக்குட்டியாகப் பிறந்திருந்தாலும், கடவுள் கணக்கில் முதல்வன். இடைப்பட்ட நாளில், துன்புகள் கண்டும், இறைப் புகழ் பாடிய புலவன். கிடைத்த அருளை வளர்த்தி,வழங்கும், கேட்போர் போற்றும் தலைவன்! (1 & 2 சாமுவேல்)
நாட்டை நினைத்து நன்மை செய்யும் நல்ல தலைவர் நாடுகிறோம். கோட்டை விட்டச் சிலரைக் கண்டும், குறுகி நெஞ்சம் வாடுகிறோம். ஏட்டை எடுத்து இறை சொல் கேட்டு, எவரும் உண்டோ, தேடிடுவோம். ஆட்டை மேய்த்த தாவிது கண்டு, அவரது புகழ் பாடிடுவோம்! (2 சாமுவேல் 2-5:-5).