தெய்வம் நம்முள் பாடாதோ?

​தெய்வம் நம்முள் பாடாதோ?

நற்செய்தி மாலை: மாற்கு 4:13-19.

“மேலும் அவர் அவர்களை நோக்கி, ‘ இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்.  இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.”
 
நற்செய்தி மலர்:
மண்ணில் விழுந்த விதைகள் எல்லாம் 
மரம், செடி, கொடியாய் மாறாதோ?
விண்ணும் மண்ணும் படைத்த இறையின்
விருப்பம் அறிந்து தேறாதோ?
எண்ணம் போன்றே வாழ்க்கை என்று,
எடுத்துரைத்தல்  கூடாதோ?
திண்ணம் அறிந்து நன்மை செய்தால், 
தெய்வம் நம்முள் பாடாதோ?
ஆமென்.

மண்ணைத் தேடுகிறார்….

​மண்ணைத் தேடுகிறார்….

நற்செய்தி மாலை: மாற்கு 4:10-12

“அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், ‘ இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டு கொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கண்ணிருந்தும் காணார்;
காதிருந்தும் கேளார்.
மண்ணைத் தேடுகிறார்;
மண்ணாகி, வாழார்.
எண்ணம் பெருத்திட்ட 
இவர்களுமே மீள்வார்;
விண்ணின் வேலையிது;
விடுதலையில் ஆள்வார்!
ஆமென்.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! நான் இந்துக்களின் பள்ளியில் பயின்றவன்; நான் சென்ற கல்லூரிகள் கிறித்தவர்களால் நிறுவப்பட்டவை. நான் பணியாற்றிய நாட்டின் பெரும்பான்மை மக்களோ இசுலாமியர். பல மொழி, நாடு, இன, சமய மக்களுடன் வாழ்ந்து பழகும் பேறும் எனக்குக் கிடைத்தது. இன்னாள் வரையிலும் எந்த மனிதருடன் வேறுபாடுகொண்டு பேசியதோ, வெறியுடன் செயல்பட்டதோ கிடையாது. எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்பதே என் எண்ணம். இப்படியிருக்க, இன்று ஒருவரைப் பார்க்க வேண்டிய நிலை வந்தது. அவர் இந்திய சமயங்களில் ஒன்றைச் சார்ந்த இளைஞர். என் வயதில் பாதியே அவருக்கு இருக்கும். “குரு” என்று அறிமுகம் செய்தார்கள். வணங்கினேன். வணங்கினார். வலக்கை நீட்டி வாழ்த்த விரும்பினேன். கை தரவில்லை. கை பிடித்து வாழ்த்தும் பழக்கமில்லை என்றார். ” உங்கள் வல்லமை எனக்கு வந்து விடும்,என்ற அச்சமா?” என்று வினவியும் பார்த்தேன்; பதிலில்லை. சாதி வெறி கொள்ள அவர் அய்யனுமில்லை; சமயத்தைச் சொல்லிப் பிழைக்க நான் பொய்யனுமில்லை. அப்படியென்றால் ஏன் கை நீட்டிப் பிடித்து பழக மறுக்கிறார்கள்? இசுலாமியர்/யூதர் இறுக இணைத்து, மும்முறை முத்தமிட்டு வரவேற்பார்கள். அப்படியெல்லாம் கட்டித் தழுவச் சொல்லவில்லை. குறைந்தது கைநீட்டி வரவேற்கலாமே! ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! நன்றி, நல் வாழ்த்துகள்!

பேரின்ப நீர்ச்சுனை ஊறட்டுமே!

பேரின்ப நீர்ச்சுனை ஊறட்டுமே!
நற்செய்தி மாலை: 4:10
 “அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.”
நற்செய்தி மலர்:
பாதையும் பாறையும் முட்காடும்,
பயிர்விளை நிலமாய் மாறட்டுமே.
பேதையும் மூடரும் அறிவுபெறும்,
பேரின்ப நீர்ச்சுனை ஊறட்டுமே.
வாதையும் தீமையும் ஒழிந்துவிடும்,
வாய்மையின் ஆவி பொழியட்டுமே.
ஏதெனத் தெரியா ஏழையரும்,
இயேசுவைப் பார்த்து வாழட்டுமே!
ஆமென்.

காதிருந்தும்……

​நற்செய்தி மாலை: மாற்கு 4:9

‘கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.’
நற்செய்தி மலர்:
இரண்டு காதுகள் இருந்தபோதும்,
இறையின் வாக்கு கேட்கவில்லை.
முரண்டு பிடித்து முண்டியடித்தோம்;
முன்னேற்றத்தைக் காணவில்லை.
திரண்ட  செல்வம், பதவி புகழென 
தேடித் திரிந்தோம், அடையவில்லை.
மிரண்டு நிற்கையில் அவர் சொல் கேட்டோம்;
மீட்பரைத் தவிர விடையுமில்லை!
ஆமென்.

நல்ல நிலமாய் நானும் திகழ……

​நல்ல நிலமாய் நானும் திகழ…

நற்செய்தி மாலை: மாற்கு 4:8

“ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.”
நற்செய்தி மலர்:
நல்ல நிலமாய் நானும் திகழ,
நன்றாய் என்னை உருமாற்றும்.
வல்ல ஆவி மழையை அனுப்பி,
வறண்ட என்னில் அருளூற்றும்.
இல்லை உரங்கள் எனாதவகையில்,
இயற்கை வளத்தை நீர் புதையும்.
சொல்ல இயலா அளவில் விளைய,
சொல்லாம் விதையை எனில் விதையும்!
ஆமென்.