வரலாறு கதையாகி, திரைப்படமானால் ……
வேணாட்டின் அரசனாக வரவேண்டியவன் சிறுவன் மார்த்தாண்டன். இவனைக் கொல்ல முயன்றவர்கள் இவனது உறவினராகிய எட்டு வீட்டுப் பிள்ளைகள். இவர்களிடமிருந்து தப்பி ஓடியவனைக் காப்பாற்றியவர்கள் மூன்று இனத்து மக்கள். படைக்குறுப்பு எனப்பட்ட நாயர்கள் ஒரு பலா மரத்தின் உள்ளே ஒளித்து வைத்துக் காத்தனர். வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சாம்பவர் இனப் பெண்கள், தங்களில் ஒருவராய் நிறுத்தியும் காத்தனர். நாடாள்வார் இனத்துப் பாட்டி ஒருவரோ, தனியொருத்தியாய் நின்று, தன் வீட்டு முற்றத்தில் கூட்டி வைத்திருந்த இலைச் சருகினுள்ளே கூடை வைத்து மறைத்து, உயிர் காத்தார். சிறுவன் மார்த்தாண்டன் அரசனாகி, அப்பகுதி மக்களின் ஆதரவையும் பெற்றான். வளர்ந்து, வர்மன் எனப் பட்டம் வாங்கிய நாளில், வரலாறு எழுதத் தொடங்கினார்கள். நடந்ததை எழுதினால் வரலாறு இனிக்காது என்று நினைத்த அறிவாளி ஒருவர், ஓர் அந்தண குலத்து இளைஞன் மார்த்தாண்டனைக் காத்து உயிர் துறந்ததாய், கதை எழுத, அதைத்தான் பின்னர் திரைப்படமாக்கினர் பேரறிவாளர்கள்!
இந்த வேணாட்டுக் கதைபோல், சோழர் வரலாறும் திரிந்தால், திரைப்படம் வந்தால், யாருக்கு என்ன பயன்? உண்மை கண்டறியப்பட வேண்டும்; உண்மை மட்டுமே வரலாறாய் எழுதப்பட வேண்டும். இதற்கு, உண்மையைத் தேடும் மனிதர்கள் பெருக வேண்டும்!
-கெர்சோம் செல்லையா.