காட்டிலும் வாழ்ந்தார்!

காட்டிலும் வாழ்ந்தார்!

நற்செய்தி: யோவான் 11:54.

54. ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார். 

நல்வாழ்வு: 

காட்டிலும் வாழ்ந்து ஊழியம் செய்தார்,
கடவுளின் மைந்தன் ஏசு. 
நாட்டிலே இன்று நடப்பது என்ன?
நற்பணிப் பெயரில் தூசு. 

கோட்டையும் மேட்டையும் கேட்டவர் யாரோ?

கொணர்ந்தவை யாவும் மாசு.
கேட்டினுள் நுழையும் முன்பே திருந்து;
கிறித்துவாய் எளிமை பேசு!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

கொடியரின் திட்டம்!

கொடியரின் திட்டம்!

நற்செய்தி: யோவான் 11:51-53.

51. இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,

52. அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

53. அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.

நல்வழி: 

குருதி எடுக்கும் கொடுமைக்கென்று,
கோடி மக்கள் சேர்ந்தாலும்,
அருகு வந்து ஆண்டவர் நின்று,
அடியர் நம்மைக் காத்திடுவார்.
உறுதி கெடுக்கும் ஐயம் சென்று,
உள்ளுடம்பே சோர்ந்தாலும், 
திரிபு இல்லா தெய்வம் இன்று,
தீமை வராது பார்த்திடுவார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

ஊருக்காக ஒருவர் இறத்தல்!

ஊருக்காக ஒருவரைக் கொல்லல்!
நற்செய்தி: யோவான் 11:49-50. 

49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;

50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.   

நல்வழி:

ஒருவரைக் கொன்று ஊரைக் காத்தல்,
உயர்ந்த அறிவு ஆகாது. 
தெருமுனை ஏழையும் வாழ வேண்டும்;
தெய்வ விருப்பு நோகாது. 
எருவெனச் செல்லும் இப்புவி வாழ்வில்,
எவரையும் இழக்கல் ஆகாது. 
அருவருப்பான கருத்துப் பருப்பும்,
அறத்தின் நீரில் வேகாது!
ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

தலைவர்கள்!

தலைவர்கள்!
நற்செய்தி: யோவான் 11: 46-48. 

46. அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.

47. அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.

48. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.

நல்வாழ்வு:

தங்கள் வளத்தை நாடிச் செல்வர்,
தலைவர் என்று வந்துவிடின்,
உங்கள் வளர்ச்சி எண்ண மாட்டார். 
ஊரறிந்த உண்மை.
திங்கள் ஞாயிறு பாடிச் சொல்வர்,
தெரியும் மெய்யே தந்துவிடின்,
எங்கும் மக்கள் வாழ்வடைவார்;
எண்ணுவோமா நன்மை?

ஆமென். 

கெர்சோம் செல்லையா.   

நான்கு நாளான உடல்!

நான்கு நாளான உடல்!

நற்செய்தி: யோவான் 11: 44-45.

44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

45. அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

நல்வாழ்வு:

நான்கு நாளாய் அழுகிய உடலும்,
நன்றாய் உயிர் பெறுகிறது.
ஏங்குகின்ற உறவின் முன்பும்,
எழுந்து வந்து நிற்கிறது.
தாங்குகிறவர் இறையென அறியும்,
தகுந்த பற்றே தருகிறது.
தூங்கும் உடல்கள் எழும்பும் காலம்,
துரிதமாகவே வருகிறது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

வாக்கின் வலிமை!

வாக்கின் வல்லமை!நற்செய்தி: யோவான் 11: 43-44.43. இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். நல்வாழ்வு: வாக்கின் வலிமை காண விரும்பின்,வருவோம் இயேசு கிறித்திடம்.நோக்கும் யாவும் அருஞ்செயலாகும்;நோக்க மறுப்பதே நம் விடம்.ஆக்கம் செய்தல் இறை விருப்பாகும்;அதுவே நமக்கு வரை படம்.போக்கும் ஐயம், புது வாழ்வுறும்;புறப்படுவோமா இவ் வழித்தடம்?ஆமென். -கெர்சோம் செல்லையா.

நன்றி!

  1. யோவான் 11:41-42

நல்வாழ்வு:

நன்றி என்ற நல்ல பண்பு, 

நல்கிடுமே உயர்வு. 

இன்று இது இல்லை உள்ளில்;

இதனால்தான் அயர்வு.

சென்று போன நாட்களிலே,

செயல்படா இச் சிறப்பு,

குன்று போல உயருகையில்,

கோடி நன்மை திறப்பு!

ஆமென். 

கெர்சோம் செல்லையா. 

நம்புவோம்!

நம்புவோம்! நல் வாழ்வடைவோம்!

நற்செய்தி: யோவான் 11: 38-40.

38. அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.40. இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

நல்வாழ்வு:

இன்பம் மட்டும் நாடிச் சென்றோர்,

இறை மறந்து வீழ்கையில்,

அன்பர் இயேசு தேடி வந்து,

அருட் பற்று ஊற்றுவார்.

துன்பம் மட்டும் ஆடக் கண்டோர்,

தெய்வப் பற்று கொள்கையில்,

நண்பர் என்று உடனிருந்து,

நன்மையாக மாற்றுவார்.

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

வீண் பேச்சு தவிர்!

நற்செய்தி: யோவான் 11:36-37. 

அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!37. அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.

நல்வாழ்வு:

வாயும் நெஞ்சும் நாறும் போது,

வாய்மை எங்ஙனம் மலரும்?

பாயும் வஞ்சம் ஊறும் சூது;

பண்பழிய, உளறும்.

தீயும் பஞ்சும் சேரும் போது,

தெரியும் யாவும் எரியும்.

ஆயும் பிஞ்சும் கூறும் தூது;

அழுக்கழிய, பிரியும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.