யார் முதலில் வணங்கவேண்டும்?

​வணக்கம், வாழ்த்துகள்!

சிறியோர்தான் பெரியோரை முதலில் வணங்க வேண்டும் என்ற ‘சிந்தை’ கொண்ட நாடு, நம்நாடு. ஆனால், வருபவர்தான் முதலில் வணங்க வேண்டுமென்று, அரேபியப் பண்பு எனக்குக் கற்றுத் தந்தது. கிறித்தவத் திருமறையோ, “கனம் பண்ணுவதில், முந்திக் கொள்ளுங்கள்” என்றுகூறி, சிறியவர்-பெரியவர் வேறுபாடு எண்ணாது,முதலில் வணங்கச் சொல்கிறது. கிறித்துவும் தமது அடியாரை முந்திக்கொண்டு வாழ்த்தியதை யோவான் நற்செய்தியில் (20-ஆம் அதிகாரத்தில்) பார்க்கிறோம். இப்படி வாழ்த்தி வணங்குபவர்கள் இன்றும் உண்டு. இருப்பினும், இந்தப் பண்பு, இயேசுவின் அடியாரிடம் இன்னாளில் குறைந்தே வருகிறது!
நன்றி, நல்வாழ்த்துகள்.

நம்மை விடவும் வலியோன்!


​நம்மை விடவும் வலியோன்!

நற்செய்தி மாலை: மாற்கு 3:27

“முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.”
நற்செய்தி மலர்:
நம்மை விடவும் வலியோன் ஒருவன் 
நம்மில் உள்ளான், அறிவீரா?
நன்மை செய்ய தன்னை இழப்பான்; 
நாடும் இறையைத் தெரிவீரா?
பொம்மை போன்றுத் தலையை ஆட்டி,
போக்கு சொல்லல் விடுவீரா?
பொய்மை விட்டு, உண்மை காண, 
புனிதன் இயேசுவைத் தொடுவீரா?
ஆமென்.

வேண்டாம் பிளவு!

வேண்டாம் பிளவு!
நற்செய்தி மாலை: மாற்கு 3:26
“சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.”
நற்செய்தி மலர்:
பிரித்து ஆளும் பிசாசுகூட 
பிளவைத் தன்னில் விரும்பானே.
எரித்துபோடும் நெருப்பும்கூட
இணைப்பால் வந்த பயன்தானே.
சிரித்து மயக்கி பிரிக்க வந்தால்,
செயலைக் கொஞ்சம் நினைப்பீரே.
விரித்து வைக்கும் வாக்கினாலே,
வேண்டும் இணைப்பை அணைப்பீரே!
ஆமென்.