yovaan 9:39-41.

காணாக் கண்கள்!

நற்செய்தி: யோவான் 9:39-41.

நல்வழி:


காணாக் கண்கள் கொண்டவனாய்,

கனவில் பறந்தேன், போதுமய்யா. 

வீணாம் நினைவின் விளைவுகளால்,


விண்ணை மறந்தேன், தீது அய்யா.

கோணார் நேர்மையில்  இனி நடப்பேன்;


கிறித்து பிறப்பால் மாற்றுமையா.

வாணாள் முழுவதும் ஆவியரின்,

வரங்கள் சிறக்க ஊற்றுமையா! 


ஆமென். 


கெர்சோம் செல்லையா.   

யோவான் 9:35-38.

நல்வழி:


மரியின் மகனாய் வந்தவரை,

மனிதன் என்பதும் சரியே.

அறிவின் வாக்குகள் தந்தவரை,

ஆசான் என்பதும் சரியே. 

தெரியா வழியில் அழைப்பவரை,

தெய்வ மகன் எனில், சரியா? 

எரிகடல் மீட்டெனை ஆள்வதனால்,

இப்படிக் கூறல், மிகச்சரியே! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.       

யோவான் 9:34.

புறந்தள்ளுகிறார்!

நல்வழி:


நல்லது சொன்னால் நம்ப மறுப்பார்,

நல்வாக்கினரை விரட்டுகிறார். 

சொல்வது யாரென ஆளைப் பார்ப்பார்,

சொல்கிற ஏழையை மிரட்டுகிறார்.

வெல்வது இதனால் மடமை என்பார்,

விரும்பார் விட்டு அகலுகிறார்.

உள்ளதை உள்ள படியாய்க் காண்பார்,

உண்மை இறையுள் புகலுகிறார். 


ஆமென். 


கெர்சோம் செல்லையா. 

கண்ணுடன் வாயும் திறந்தது!

நற்செய்தி: யோவான் 9:30-33.

நல்வழி:


கண்ணுடன் வாயும் திறந்ததுவே;

கடவுட் பற்றும் புறம் வருதே. 

எண்ணினில் இவைகள் இறையருளே. 

இயேசு வழங்கும் நற்பொருளே.

மண்ணினில் வந்தது நம் திறமா?

மறுபடி உயர்வதும் நம் அறமா?

திண்ணையில் விழுமுன் நினைப்போமா?


தெய்வ அன்பில் இணைப்போமா?


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

யோவான் 9:26-29.

நல்வழி:


அடியாரென்கிற நற்றமிழ் வாக்கு,

அடி ஆளாகி  மருவிற்றே. 

துடியாதவரின் திருப்பணிப்போக்கு,

தூய வழியில் அருகிற்றே. 

மடியாதவராம் இறையின் நோக்கு,

மன்னிப்பாய்  உருகிற்றே.  

விடியாதிருக்கும் நிலையை நீக்கு;


விண்ணின்பம் பெருகிற்றே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.

பழிச்சொல்!

இறை வாக்கு: யோவான் 9:24-25.

இறை வழி:


வெறுப்பு கொண்டோர் பேச்சு கேட்டால்,

வீண்பழிச் சொற்கள் நிறைந்திருக்கும்.

பொறுப்பு அற்றோர் செயற்பாட்டால்,

பொறுமை கூட குறைந்திருக்கும். 

நெருப்பு என்கிற பழிச்சொல் எரித்தால்,

நீங்களும் நானும் என்னாவோம்?

விருப்பு இறையுள் நாம் சிரித்தால்,  


விடுதலையாகிப் பொன்னாவோம்!  


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

என் மொழி!

என் மொழிக் கொள்கை!

பன் மொழி பேசும் என் பழ நாட்டில்,

தன் மொழி உயர்ந்தது என்றுரைப்பார்

இன் மொழி அறியாதிருப்பதானால்,

நன் மொழி கேட்டு, பிழைக்கப் பார்.


எம்மொழி கேட்கையில், அம்மொழி வெறுப்பில்,

தம் மொழி வளர்க்க மறப்பதானால்,

செம்மொழி தமிழில் இம்மொழி சொல்வேன்;

உம் மொழி தழைக்க, உழைக்கப் பார்!


-கெர்சோம் செல்லையா.

அச்சம்!

இறைவாக்கு: யோவான் 9:22-23.

இறை வாழ்வு:


பற்று இல்லா நெஞ்சம் எங்கும், 

பரவிக் கிடக்கும் அச்சம்.

சற்று நேரம் ஆய்ந்திட நீங்கும்.

சரி செய்யாவிடில் எச்சம்.

உற்று நோக்கி, தெய்வம் பாரும்;

உள்ளில் வருமே துணிவும்.

பெற்று வாழ்வார் கூட்டில் சேரும்;

பேரச்சமும் பணியும்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

நோபல் பரிசு!

ஆயும் பண்பை அடகும் வைத்தோம். அறிவுள்ளோரை அடக்கியும் வைத்தோம். பேயும் எண்ணாப் பிரிவினை செய்தோம்; பிறந்த நாட்டின் சிறப்புமிழந்தோம். நீச்சலில் சிறந்த மீனவர் உண்டு. நீர் நிலைப் பணியில் இடமோ இல்லை. கடல் வாழ் இனங்களைக் கற்றலும் உண்டு. கடலாடிகளுக்கோ இடமே இல்லை. நீந்தத் தெரியாதவர்கள், நீந்தத் தெரியாதவர்களை, நீச்சல் வீரர்களாய், நியமிக்கிற நிர்வாகத்தில், நோபல் பரிசு என்று, நினைத்துப் பார்க்கலாமா?