ஏழைக்குதவி, பின் பாடு!
நற்செய்தி மாலை: மாற்கு 14:27-28.
“இயேசு அவர்களிடம், ‘ நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
இன்னோர் ஆட்டை வெட்டும்போது,
எதுவும் பேசா வெள்ளாடு,
தன்னாயரின் கொலையைக் கண்டு,
தகவலுக்கிடுமோ கூப்பாடு?
முன்னே நிற்பவர் எவரென்றாலும்,
முதற்கண் உதவுதல் கடப்பாடு.
என்னினமெனினும் இதுதான் செய்தி;
ஏழைக்குதவி, பின் பாடு!
ஆமென்.
Month: February 2017
நன்றிப் பாடல் பாடியவாறே…
நன்றிப் பாடல் பாடியவாறே…
நற்செய்தி மாலை: மாற்கு 14:26.
“அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
அன்றைய சூழல் நன்கு அறிந்தும்,
ஆண்டவர் பாடல் பாடுகிறார்.
நன்றிப் பாடல் பாடியவாறே,
நமக்காய்ச் சிலுவையை நாடுகிறார்.
இன்றைய நாளின் இன்னல் கண்டு,
எப்படி கிறித்தவர் ஓடுகிறார்?
என்று பார்த்தால், நானும் விழுந்தேன்;
இயேசு என்னால் வாடுகிறார்!
ஆமென்.
ஊனைத் தந்தார், உதிரம் தந்தார்!
ஊனைத் தந்தார், உதிரம் தந்தார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:22-25.
” அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ‘ இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் ‘ என்றார்.23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.24 அப்பொழுது அவர் அவர்களிடம், ‘இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். 25இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.”
நற்செய்தி மலர்:
வானைத் தந்தார், வையம் தந்தார்;
வாழ்பவர்க்கெல்லாம் வழியும் தந்தார்.
ஊனைத் தந்தார், உதிரம் தந்தார்;
உலகோர் மீள உயிரும் தந்தார்.
தானைத் தலைவர் பலபேர் வந்தார்;
தம் நலம் காக்க, ஊர்வலம் வந்தார்.
சேனைத் தலைவர் கிறித்து வந்தார்;
சிலுவை அன்பின் உடன்படி தந்தார்!
ஆமென்.
நிம்மதி என்னும் விருந்துண்போம்!
நிம்மதி என்னும் விருந்துண்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:20-21.
“அதற்கு அவர், ‘ அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
வஞ்சம் செய்து வளர்வோர் ஒருநாள்
வந்தது ஏனென வருந்திடுவார்.
கொஞ்சங்கூட குறை வைக்காமல்,
கொடுமைக் குவளை அருந்திடுவார்.
அஞ்சும் தீமை அழிப்பதையறிந்தால்,
ஆண்டவர் பிடிக்கத் திருந்திடுவார்.
நெஞ்சம் நிமிர்ந்து, நேராய் நடப்போர்,
நிம்மதி என்னும் விருந்தடைவார்!
ஆமென்.
நானோ? நானோ?
நானோ? நானோ?
நற்செய்தி மாலை: மாற்கு 14:17-19.
“மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, ‘ என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, ‘ நானோ? நானோ? ‘ என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.”
நற்செய்தி மலர்:
நானோ கயவன் என்று கேட்கும்
நல்லோர் நடுவில் ஒருவன் பார்.
ஏனோ அவனை இயேசு கண்டும்,
எதற்கு வைத்தார், அறிவோன் யார்?
வானோர்க்கடுத்த புதிராய் வாழ்வில்,
வஞ்சகர் நம்மைச் சூழ்கின்றார்.
தேனோ, நஞ்சோ, தெரியாவிடினும்,
தெய்வம் நம்மை ஆள்கின்றார்!
ஆமென்.
கிறித்து வந்தார்!
கிறித்து வந்தார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:12-16.
“புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ‘ நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ‘ என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ‘ நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ‘ நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ‘ என்று போதகர் கேட்கச் சொன்னார் ‘ எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ‘ சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.”
நற்செய்தி மலர்:
அறைகள் பற்பல கட்டி வைத்து,
அவற்றுள் செல்வம் கொட்டி வைத்து,
இறை வா இறை வா என்றழைத்தேன்;
இறை வர மறுத்தார், நிறைவில்லை!
மறைநூல் முன்பு எனைவைத்து,
மண்ணே வாழ்க்கை எனநினைத்து,
குறைகள் உணர்ந்து கூப்பிட்டேன்;
கிறித்து வந்தார், குறைவில்லை!
ஆமென்.
இறைமுன் வா நீ!
இறைமுன் வா நீ!
வெறியம் குடித்து விழுந்தார் கோடி;
வெறித்தனத்தாலும் இழந்தார் கோடி.
குறி தவறாகிக் குலைந்தார் கோடி;
கொள்முதல் என்றும் அலைந்தார் கோடி.
நெறிமுறை நேர்மை பேணார் கோடி;
நெஞ்சில் தூய்மை காணார் கோடி.
அறிவெது தவறெது அறியார் கோடி;
அறிய விரும்பின் இறைமுன் வா நீ!
-கெர்சோம் செல்லையா.
நாமின்று பார்ப்பது நலமாகும்!
நாமின்று பார்ப்பது நலமாகும்!
நற்செய்தி மாலை:மாற்கு 14:10-11.
“பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்.அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.”
நற்செய்தி மலர்:
கொடுமையில் கொடுமை எதுவென்றால்,
கூட இருப்பவர் குழி பறிப்பாம்.
குடும்பம், நட்பென நம்பிவிட்டால்,
கொள்ளை, கொலையும் செய்வாராம்.
விடுதலைப் பணியில் இயேசுவிடம்,
வேண்டாதொருவன் இருந்தானாம்.
நடுவில் இருப்பவர் யூதாசா?
நாமும் பார்ப்பது நல்லதுவாம்.
ஆமென்.
ஏழையின் பரிசு!
ஏழையின் பரிசு!
நற்செய்தி மாலை:மாற்கு 14:6-9.
” இயேசு அவர்களிடம், ‘ அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
ஏழையொருத்தி ஈந்த பரிசை,
எங்கும் புகழும் இறைமகனே,
கோழையாகி ஒளியும் நானோ,
கொடுக்கும் பண்பில் குறைமகனே.
நாளை என்று அலைக்கழிக்காமல்,
நன்மை வழங்கும் இறைமகனே,
வேளையறிந்து நானும் கொடுக்க
வேண்டும் அன்பு நிறைமகனே!
ஆமென்.
இறைவனுக்குரியதை இறைவனுக்கு…
இறைவனுக்குரியதை இறைவனுக்கு…
நற்செய்தி மாலை: மாற்கு14:3-5.
“இயேசு, பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ‘ இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே, ‘ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.”
நற்செய்தி மலர்:
குறைவறக் கொடுக்கும் இறைவன் கேட்டால்,
கொடுப்பது எங்ஙனம் என்போரே,
உறைவிடம் இன்றி, ஊண் உடையின்றி,
ஒதுங்குவோர்க்களித்தல் என்பீரே.
நிறைவுறக் கொடுத்தும், நிரம்பக் கேட்கும்
நெஞ்சம் கொண்ட அன்போரே,
இறைவனுக்குரியதை இறைவனுக்களித்தல்,
இன்று நம் கடன் என்பீரே!
ஆமென்.