நடக்கிற மரமாய்

நடக்கிற மரமாய்க் கிடக்கிற மனிதா!

நற்செய்தி மாலை: மாற்கு 8:22-26.

“அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, ‘ ஏதாவது தெரிகிறதா? ‘ என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, ‘ மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள் ‘ என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், ‘ ஊரில் நுழைய வேண்டாம் ‘ என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.”

 

நற்செய்தி மலர்:

நடக்கிற மரமாய்க் கிடக்கிற மனிதா!

நன்மை உன்னில் கிடைக்குமோ எளிதா?

கடக்கிற ஆறும் கரையினுக்குதவும்;

கடலினில் விழுமுன் கனிமரம் வளர்க்கும்.

உடைக்கிற நீயோ, யாருக்கு வேண்டும்?

உண்மை இதுதான், உனக்கே புரியும்.

படைக்கிற இறையின் வாக்கினைக் கேட்பாய்;

பணிவுடன் ஏற்று, பயன்தனில் மகிழ்வாய்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அற்புதம் கண்டும்…..


​நற்செய்தி மாலை: மாற்கு 8:19-21.

“ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த போது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்? ‘ என்று அவர் கேட்க, அவர்கள் ‘ பன்னிரண்டு ‘ என்றார்கள்.  ‘ ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்? ‘ என்று கேட்க, அவர்கள், ‘ ஏழு ‘ என்றார்கள்.  மேலும் அவர் அவர்களை நோக்கி, ‘ இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா? ‘ என்று கேட்டார்.”
நற்செய்தி மலர்:
அற்புதம் காண்கின்றோம்;
ஆயிரம் பெருக்கின்றோம்.
பொற்பரன் இயேசுவையோ, 
புரியா திருக்கின்றோம்
கற்பனை அல்ல இது;
கடவுளைப் பற்றிடுவோம்.
நற்செயல் செய்வதற்கே,
நற்செய்தி கற்றிடுவோம்!
ஆமென்.

விண்ணின்று வந்தால்தான்….


​விண்ணின்று வந்தால்தான்….
நற்செய்தி மாலை: மாற்கு 8:16-18.
“அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, ‘ நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?  கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா?”
நற்செய்தி மலர்:
கண்ணுண்டு, காட்சியில்லை.
காதுண்டு, கேட்கவில்லை.
பண்புண்டோ, அதுவுமில்லை.
பாருங்கள் மனிதர் நிலை!
எண்ணென்று உரைத்தாலும்,
ஏட்டறிவைக் கொடுத்தாலும்,
விண்ணின்று வந்தால்தான்,
விளங்கிடுவார் விடுதலை!
ஆமென்.