புளித்த மாவைப்போன்று…


​புளித்த மாவைப்போன்று…

நற்செய்தி மாலை: மாற்கு 8:14-15.
“சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, ‘ பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள் ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.”
நற்செய்தி மலர்:
கொஞ்சம் புளித்த மாவு போதும்;
கூடை முழுதும் புளிப்பாய் மாறும்.
நஞ்சினளவும் அதுபோல் போதும்;
நல்லுயிர் போகும், உடலும் நாறும்.
அஞ்சும் கொடிய தீவினை பாரும்;
அதின் தொடக்கம் சிறிதேயாகும்.
கெஞ்சி நிற்கும் இறைமுன் வாரும்;
கேடுகள் யாவும் வேருடன் போகும்!
ஆமென்.

வேறு அடையாளம் வேண்டாம்!

வேறு அடையாளம் வேண்டுமா?
நற்செய்தி மாலை: மாற்கு 8:10-13.
“உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார். பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, ‘ இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
விண்ணில் வேறோர் அடையாளம்,
வேண்டிக் கேட்கும் நண்பர்களே,
கண்ணில் காணும் காட்சிகளும்
கடவுள் உண்டெனும் சான்றுகளே!
மண்ணும் விண்ணும் சான்றுரைத்தும்,
மதிநூல் வாக்கது போன்றுரைத்தும்,
எண்ணிப் பார்க்க நீர் விரும்பலையே!
இனிமேல் எதற்கு அடையாளமே?
ஆமென்.

Gershom Chelliah's photo.
LikeShow More Reactions

Comment

இனியாவது மாறுவோம்!


​இனியாவது மாறுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:7-10.
“சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார். அவர்கள் வயிறார உண்டார்கள். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்;10 உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.”

நற்செய்தி மலர்:
இல்லை உணவு என்போர் கண்டு,
இரங்கிக் கொடுத்தல் தொண்டு.
சொல்லில் மட்டும் அன்பு கொண்டு,
சுற்றித் திரிவரும் உண்டு!
எல்லாம் ஈயும் இயேசு போன்று,
இனிமேல் மாறுதல் நன்று.
அல்லாவிடில் கிறித்தவர் என்று,
அழைப்பதும் தவறு இன்று!
ஆமென்.

நன்றியாய் வாழ்தல்


​இல்லாமையிலும் நன்றி!

நற்செய்தி மாலை: மாற்கு 8:4-6.

“அதற்கு அவருடைய சீடர்கள், ‘ இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி? ‘ என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, ‘ உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன? ‘ என்று கேட்டார். அவர்கள் ‘ ஏழு ‘ என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.”
நற்செய்தி மலர்:
இல்லாமையிலும் நன்றி;
எடுத்துக் காட்டு இயேசு.
எல்லாமிருந்தும் குன்றி,
இழந்த நெஞ்சே பேசு!
நல்லோர் உயர்வின் ஏது
நன்றி நிறைந்த நெஞ்சு.
கல்லாதிருப்பது தீது;
கயமை அகலக் கெஞ்சு!
ஆமென்.

நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்


​நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்!

நற்செய்தி மாலை: மாற்கு 8:1-3.
“அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், ‘ நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர் ‘ என்று கூறினார்.”

நற்செய்தி மலர்:
ஏட்டை விரித்துக் கதை விளம்பி,
இறைவன் வாக்கைத் தொடுக்கின்றோம்.
கேட்பவர் நிலையும் புரியாமல்,
கிடையாக்  காசை எடுக்கின்றோம்.
வேட்டை என்றே வந்துவிட்டோம்;
வேண்டாம், இனி இதைத் தடுத்திடுவோம்.
நாட்படப் பட்டினியாயிருக்கும்,
நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்!
ஆமென்.

நன்மையே வரட்டும்!

நன்மை வரட்டும்!

இம்மா பெரிய மாநிலம் ஆள,
எம்மா வலிய முதல்வர் வேண்டும்?
சும்மா அவர் இவர் என்றில்லாமல்,
அம்மாவேதான் ஆளவேண்டும்,
என்றார் நமது நாட்டின் மக்கள்;
நன்றாய் எடுத்த முடிவாகட்டும்.
வென்றார் வீழ்ந்தார் என்றில்லாமல்,
ஒன்றாய் உழைப்பீர், நன்மை வரட்டும்!
-கெர்சோம் செல்லையா.
Gershom Chelliah's photo.

அமுதாம் தேர்தல்!

நஞ்சு கலந்த அமுதே தேர்தல்;

நாமும் விரும்பி கையளித்தோம்.
கொஞ்சு மொழிக் கூற்றே அரசியல்;
கொள்ளை அடிக்க பை அளித்தோம்!
பிஞ்சு குழந்தையும் புரியும் அறிவை,
போட்டி நாளில் நாம் மறந்தோம்.
மிஞ்சுகின்ற தெதுவுமில்லை;
மானம் ஒன்றே, அதைத் துறந்தோம்!
-கெர்சோம் செல்லையா.

அன்பே ஆளும்!

​கக்கனுமில்லை, காமராசில்லை,
கள்வரே தேர்தலில் நிற்கின்றார்.
மக்களை நினையா மக்குகள் ஆள,
மாநில வாக்கைச் சேர்க்கின்றார்.
எக்குறையில்லா ஆட்சியைக் கேட்டு,
இறை வா என்று நான் விழுந்தேன்.
அக்கறையோடு அவரும் சொன்னார்;
அன்பே ஆளும்; நான் எழுந்தேன்!
-கெர்சோம் செல்லையா.

விளம்பரம் செய்யா இறைவன்!


​விளம்பரம் வேண்டாம்!

நற்செய்தி மாலை: மாற்கு :7:36-37.
“இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ‘ இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ‘ என்று பேசிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
நன்றாய்ச் செய்யும் நமது தெய்வம் 
நடுவில் விளம்பரம் செய்வதில்லை!
என்றறியாதோர் எதையோ செய்தும்,
எவரும் இன்று உய்ததில்லை!
அன்றைய அடியார் செய்தது பார்ப்போம்;
அவரில் தன்னலம் தெரியவில்லை.
இன்றைய விளம்பர ஊழியர் பார்ப்போம்;
ஏன் வந்தார் எனப் புரியவில்லை!
ஆமென்.

வேண்டாம் கூச்சல்!


​வேண்டாம் கூச்சல்!

நற்செய்தி மாலை: மாற்கு 7:31-35.
“மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ‘ எப்பத்தா ‘ அதாவது ‘ திறக்கப்படு ‘ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.”
நற்செய்தி மலர்:
ஏக்கப் பெருமூச்சுகூட 
இறையின் அடியை எட்டிடுதே.
ஏன் போடுகின்றீர் கூச்சல்?
இதனால் அடியும் கிட்டிடுதே!
ஊக்கத்துடன் ஊழியம் என்றால்,
உள்ளம் திருந்தி வந்திடுமே.
உதவாத ஓசை வேண்டாம்;
ஊரில் அமைதி தந்திடுமே!
ஆமென்