மாட்சிமை யாருக்கு?

மாட்சிமை யாருக்கு?

இறை வாக்கு: யோவான் 14:12-14.

  1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
  2. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
  3. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

இறை வாழ்வு:

மாட்சிமை யாவும் இறைவனுக்கே;
மைந்தன் செயலும் உரைக்கிறதே.
ஆட்சி தனக்கென நினைக்கையிலே,
அமையாது இறை அருஞ்செயலே.
வீட்சியில் கிடக்கும் மானிடமே,
விரும்பிச் செல்வது யாரிடமே?
நீட்சியில் இறை புகழ் பாடுவதே
நேரென நெஞ்சும் கூறிடுதே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

சாதி மறுப்பு!

சாதி மறுப்புப் போராளிகள்

அறிவதற்கு!

அன்று சாதி பாராது பலர் இருந்தனர்.

ஆனால் விளம்பரம் செய்ததில்லை.

இன்று பலபேர் இருக்கின்றனர். இவர்களும் விளம்பரம் செய்வதில்லை.

என்றும் சாதிபாராதவர் இருப்பர்; இவர் எங்கும் இருப்பர்.

விளம்பரமும் இராது. விமரிசனமும் வராது!

புளித்த மாவு பரவுதல் போல் வெளியிலும் தெரியாது!

எளிமையாய்க் கடந்து செல்வதால், என்ன நடக்கிறதென்று, பலருக்கும் புரியாது!

இப்படி வாழ்ந்தால் சிக்கல்கள் குறையும். சிறுமையும் மறையும்.

இதை விட்டு விட்டு,

ஏன், எதற்கு, எங்கும், எப்போதும் சாதி சாதி என்று பேச வேண்டும்?

எதற்கு வீணாக, சாதியையும், பாகுபாட்டையும் எண்ண வேண்டும்?

எதற்கு உயர்வென்று ஓங்கி அறைய வேண்டும்?

ஏன் தாழ்ந்தவன் என்று தரம் தாழ்த்த வேண்டும்?

சாதிபார்ப்பது மட்டும் தவறென எண்ணாமல், சாதி குறித்துப் பேசித் திரிவதும் தவறென நினைப்போம்!

இதை ஏன் நான் சொல்கிறேன் தெரியுமா?

எனது வாழ்வில்-வளர்ச்சியில் எல்லா இனத்தவரும் உதவினர், எல்லா நாட்டவரும் இருந்தனர்! எப்படி நான் இவர்களை வேறு பிரித்துப் பார்ப்பேன்? எப்படி நான் நன்றி மறந்து நடப்பேன்?

இன்று சாதி என்கிற கறை இருக்கிறது; இது உண்மை. அதை அக்கரையோடும் கழுவுவோம்; அமைதியோடும் கழுவுவோம்.

கறை, கறை என்று குறை கூறியே திரிவதென்பது…. எனக்கென்னவோ சரியாகத் தெரியவில்லை!

ஒருவேளை, ஆவியாரின் நிரப்புதலில் நான் குறைவுபட்டிருக்கலாம்! அல்லது, அகவை 72 ஆகியும், என்னறிவு வளராதிருக்கலாம்!

பொறுத்தருளுங்கள்; யாரும் பொங்க வேண்டாம்!

நமக்குக் கொடுக்கப்பட்ட இறைத் தொண்டு எதுவென அறிவோம். அதை, இனி மெய்யாயும் செய்வோம்; இனிமையாயும் செய்வோம்!

வாழ்த்துகள்.

இறையருள் பெருகும்.

– கெர்சோம் செல்லையா.

நம்மில் இருப்பவர் யார்?

நம்மில் இருப்பவர் யார்?

இறைவாக்கு; யோவான் 14:10-11.

  1. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
  2. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

இறை வாழ்வு:

என்னில் இருப்பவர் இறைவனெனில்,
எந்தன் செயலில் எவையிருக்கும்?
அன்பும் அறமும் தழைத்திருக்கும்;
அனைவர் மகிழ அவையிருக்கும்.
மண்ணின் அரசன் அலகையெனில்,
மாண்பு, மெய்மை எங்கிருக்கும்?
துன்பத் துயரே தொடர்ந்திருக்கும்;
துரித அழிவும் அங்கிருக்கும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இயேசு போதும்!

இயேசு போதும்!

இறை வாக்கு: யோவான் 14:8-9.

  1. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
  2. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

இறை வாழ்வு:

எப்படி இறையிடம் செல்வது என்று,
எண்ணிப் பார்க்கிற நண்பர்களே,
சொற்படி பிறந்து, சொற்படி இறந்து,
சொற்படி எழுந்தவர் பாருங்களே.
அப்படி இதுபோல் ஒருவர் இருந்தால்,
அதையும் எனக்குக் கூறுங்களே.
இப்படி மீட்டு இறையிடம் சேர்க்கும்,
இயேசு போதும், வாருங்களே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

மகனும் தந்தையும்!

தந்தையை மகனில் காண்போம்!

இறை வாக்கு: யோவான் 14:7.

  1. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

இறை வாழ்வு:

எங்கே இருக்கிறார் இறைவன் என்று,
எங்கும் தேடும் மானிடரே,
இங்கே இறைமகன் இயேசு கண்டு,
இறையின் பண்பு கற்பீரே.
அங்கே அவரிடம் செல்லும் முன்பு,
அவரது மக்கள் என்பவரே,
உங்கள் செயலால் இறையின் அன்பு,
ஓங்கி ஒலிக்க, நிற்பீரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

வழி ஒன்றே!

இயேசுவே வழி!

இறை வாக்கு: யோவான் 14:6.

  1. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

இறை வாழ்வு:

வழி எது? வாய்மை எது?
வாழ்பவரின் உயிர் எது?
தெளிவிலாது நானிருந்தேன்.
தெரியார் வாழ்வில் தீது.
மொழி எது, மேன்மை எது?
மெய்யின்பம் இங்கு எது?
அழியா அன்பென்றார் ஏசு;
அது ஒன்றே இறை தூது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

மெய் நாடு!

ஐயம் அகற்றுதல்!

இறைவாக்கு: யோவான் 14: 4-5.

  1. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
  2. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.

இறை வாழ்வு:

ஐயம் அகற்றுதல் அடியருக்கழகு.
அதையே தோமா செய்கிறார்.
பொய்யறியாத இயேசுவினிடத்து,
புரிந்து கொள்ளவே கேட்கிறார்.
செய்வது அறிந்தவரிடத்துப் பழகு.
செய்யும் நன்மையில் உய்கிறார்.
மெய்யெது பொய்யெது பிரித்தறிந்து,
மெய் நாடின், இறை மீட்கிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

விண் வீடு!

எனக்கும் ஓரிடம் தாரும்!

இறைவாக்கு: யோவான் 14:3.

3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

இறைவாழ்வு:

எனக்கும் ஓரிடம் உம்மிடம் தாரும்.

இப்படிக் கேட்கத் தகுதி இல்லை.

நினைக்கும் உள்ளில் இன்றே வாரும்;

நெஞ்சே கோயில் வேறில்லை.

மணக்கும் உம் திரு வாக்கும் கூறும்;

மனதின் அழுக்கும் குறைவில்லை.

பிணத்தைச் சுமந்து நடக்கிறேன் பாரும்;

பிழை போகாவிடில் பேறில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

விண் வீடு!

விண் வீடு!

இறை வாக்கு: யோவான் 14: 2.

  1. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

இறை வாழ்வு:

என் வீடு இங்கு நிலைத்தது இல்லை;
எனினும் இறையுடனே இருப்பேன்.
விண் வீடு மனிதர் செய்ததும் இல்லை;
விரும்பி ஈகிறார், பார்த்திருப்பேன்.
நன் வீடு புகு நாள் முன்னறிவில்லை;
நம்பிக்கையிலே நான் இருப்பேன்.
கண் மூடு காட்சி, கவலையும் இல்லை;
கடவுளின் பேறு, காத்திருப்பேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.