இறைவாக்கினர் போன்றே…

இறைவாக்கினர் போன்றே


இறைவாக்கினர் போன்று….

நற்செய்தி மாலை:மாற்கு 6:4-6.

“இயேசு அவர்களிடம், ‘ சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ‘ என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.”
நற்செய்தி மலர்:
உரைப்பதும்  கேளார், உணர்வையும் ஆளார்.
உள்ளூர் என்றே ஒதுக்கியும் தள்வார்.
குரைத்திடும் நாயின் நன்றியும் இழப்பார்;
குறைகள் கூறி தாமும் விழுவார்.
சிரைத்திட்ட தலையில் நோவை ஏற்று,
செய்தி கொடுத்த தூதுவர் போன்று,
நரைத்திட்ட நாமும் பழியினைச் சுமப்போம்;
நம்பிக்கையை வழியென அமைப்போம்!
ஆமென்.

பார் முழுதும் புகழ்ந்தாலும்…..


​பார் முழுதும் புகழ்ந்தாலும்….

நற்செய்தி மாலை: மாற்கு 6:1-3.

“அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ‘ இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.”
நற்செய்தி மலர்:
பார் முழுதும் புகழ்ந்தாலும்,
பாராட்டி மகிழ்ந்தாலும்,
ஊர் மனிதர் ஏற்பதில்லை;
உண்மையினைப் பார்ப்பதில்லை.
கூர் மழுங்கா பட்டயமாம்
கிறித்தரசன் வாக்காலே, 
ஏர் உழுத நெஞ்சமதில் 
ஏற்பவரோ தோற்பதில்லை!
ஆமென்.

தற்புகழ் வெறுக்குந் தன்மை!

தற்புகழ் வெறுக்குந் தன்மை!
நற்செய்தி மாலை: மாற்கு 5:40-43.
“அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ‘ தலித்தா கூம் ‘ என்றார். அதற்கு, ‘ சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ‘ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள். ‘ இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ‘ என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
நற்பணி செய்யும் ஆண்டவரின்,
நயந்த பண்பினைப் பார்ப்போமா?
தற்புகழ் எதுவும் கொள்ளாது,
தடுக்குந் தன்மையைச் சேர்ப்போமா?
பற்பல படங்கள் காட்டும் நாம்,
பணிந்து இறையிடம் கற்போமா?
அற்பராய் நம்மை மாற்றாது,
ஆண்டவர் போல நிற்போமா?
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..

முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..

பொய்யான வாழ்வினிலே

புகைப்படக் கண்காட்சி.
பொருத்தம் இல்லாத
பிசாசின் அரசாட்சி.
மெய்யான தாழ்மையிலே,
முகநூல் பாவிப்போம்.
மேன்மேலும் உயர்ந்திடுமே
மேலோன் அருளாட்சி!
-கெர்சோம் செல்லையா.

உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!

உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!
——————————————————-

இறையாய் இருப்போன் ஒளிர்கின்றான்;
இருளை எங்கும் ஒழிக்கின்றான்.
நிறைவாய் வெளிச்சம் பகிர்வதற்கு,
நமையும் விளக்காய் அழைக்கின்றான்.
பறையாய் வெடிக்கும் கரிமருந்தால்,
பறவையும் அஞ்சுதல் காண்கின்றான்.
சிறையாய்ப் பிடிக்கும் தீச்செயலைச்
சீக்கிரம் கைவிடக் கேட்கின்றான்!
-கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.

இறந்தவரை எழுப்பிவிடும்….

நற்செய்தி மாலை:மாற்கு 5:35-39.
“அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ‘ உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ‘ என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ‘ அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ‘ என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, ‘ ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
இறந்தவரை எழுப்பிவிடும் வலுமிக்க,
இறைமகனார் நெஞ்சுள்ளே இருப்பதனால்,
மறந்தவர்கள் கொண்டுவரும் துன்புகளும்,
மண்ணாகி மறைந்துவிடும்; நம்பி வாரிர்.
சிறந்தவர்கள் எனும் பதவி உயர்வுபெற,
சீரான பற்றுறுதி வேண்டுவதால்,
திறனின்றி அழுவதனை நிறுத்திவிட்டு,
தெய்வத்தின் காலடியில் அமர வாரீர்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.