எனது சாதி!

எந்த சாதி என்பவரே,
எனது சாதி சொல்லவா?
அந்த சாதி யாவருக்கும்
சொந்த சாதி அல்லவா?

நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிலைகளில் சாதி மாறுகிறவன். எப்படித் தெரியுமா?

காலையில் எழுந்தவுடன் இறைவேண்டல் ஏறெடுத்து, திருமறை வாசிக்கிறேன். அப்போது மட்டும் அந்தணன்.

அதன் பின்னர், என் வீட்டாரோடும், மற்றவர்களோடும் சண்டைபோடுகிறேன்; அப்போது நான் சத்திரியன்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடையவர்களை விற்கப் பார்க்கிறேன்; அவர்களை வைத்துப் பொருள் சேர்க்கப் பார்க்கிறேன். அப்போதெல்லாம் நான் வைசியன்.

உடல் உழைக்கும் போதெல்லாம், நான் சூத்திரன்.

உடல் அழுக்கைக் களையும்போதோ, நான் பஞ்சமன்.

இப்படி நான் மட்டுமல்ல, சாதி வேறுபாடு பார்க்கிற எல்லா மனிதர்களும் எல்லா இடங்களிலும் சாதி மாறுகிறார்கள்!

எனவேதான் சொல்கிறோம்:

ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்!
நன்றே கேட்போம்; யாவரையும் இணைப்போம்!

நற்செய்தியும் நல்வாழ்வும்

பேசும் வாக்குகள் வாக்கல்ல;
பிழைகள் உண்டு அறிவீரே.
இயேசுவின் வாக்கே திருவாக்கு;
இதனை உணர்ந்து வருவீரே!
நல்வாழ்த்து:
நம்பிக்கையாலே நேர்மை தரும்
நல்லிறையே உமைப் போற்றுகிறேன்.
எம்மக்கள் யாவரும் நேர்மைபெற
இன்றும் உம்மை வேண்டுகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:10-13.
”அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ‘ என்றார்கள். ‘ அவர் மறுமொழியாக, ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது ‘ என்றார். எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”
நல்வாழ்வு:
அருட்கதவு திறந்துளது;
ஆண்டவருள் வாருங்கள்.
அடைத்தபின்னர் திறவாது;
அனைவருக்கும் கூறுங்கள்.
இருட்காலம் வருகிறது;
இயேசுவையே பாருங்கள்.
இன்றே விடுதலை நாள்;
இறையரசில் சேருங்கள்!
ஆமென்.
பி.கு.
பயணம் அழைப்பதால் செல்கின்றேன்.
பாதுகாக்கிறார் மகிழ்கின்றேன்.
இயன்ற வரையில் மன்றாட
இனிய நண்பா, கேட்கின்றேன்!

நற்செய்தி

வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு,
வேண்டும் நம்முள் அருள் வாக்கு.
பற்றிக் கொண்ட பாவம் நீக்கு;
பாரில் இதுவே சரி நோக்கு!
நல்வாழ்த்து:
தீமைகள் என்னைச் சூழ்ந்தாலும்,
தெய்வமே உம்மைப் புகழ்ந்திடுவேன்.
ஊமையாய் இருக்க வைத்தாலும்,
உள்ளத்தால் நான் போற்றிடுவேன்.
நல்வாக்கு:மத்தேயு 25:8-9.
”அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘ எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் ‘ என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ‘ உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ‘ என்றார்கள்.”
 

நல்வாழ்வு:

கொடுத்து மகிழும் இறையிடம் கேட்போம்;
கொடுக்கும் காலம் வாங்கிடுவோம்.
அடுத்து  நிற்கும் மனிதரைக் கேளோம்;
ஆவியரிடமே ஏங்கிடுவோம்.
தடுத்து நிறுத்தும், தவற்றை உணர்த்தும்,
தந்தையின் வாக்கைப் பரப்பிடுவோம்.
எடுத்து வைக்கும் விளக்கில் எண்ணெய்
இருக்க வேண்டும், நிரப்பிடுவோம்!
ஆமென்.

 

The Truth

கிறித்துவின் அருளைப் பெறுவதற்குக்
கேட்போமா நாம் நற்செய்தி?
வெறித்தனச் செயலை விடுவதற்கு,
வேண்டும் நமக்கு அருட்செய்தி!
நல்வாழ்த்து:
வாக்கருளும் மைந்தனே போற்றி;
வாழ்விக்கும் தந்தையே போற்றி.
காக்க வரும் ஆவியர் போற்றி;
காலமெலாம் இறையே போற்றி!
நல்வாக்கு:மத்தேயு 25:5-7.
“மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், ‘ இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் ‘ என்ற உரத்த குரல் ஒலித்தது.  மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.”
நல்வாழ்வு:

இல்லாத எண்ணெய்
இருப்பதாய் எண்ணி,
விளக்கைக் கொளுத்துகின்றார்;
வெட்கம் கொள்கின்றார்!
கல்லாத மூடர்
வரிசையில் நின்று,
கருத்தை இழக்கின்றார்;
கைவிடப் படுகின்றார்;
எல்லோரும் மீள
ஏங்கும் இறைவன்
எண்ணெய் தருகின்றார்;
ஏற்பவர் மகிழ்கின்றார்.
நல்லாயன் சொல்லே,
விளக்கின் எண்ணெய்.
நம்பினோர் நிறைக்கின்றார்;
நல்லொளி கொடுக்கின்றார்!
ஆமென்.

 

நற்செய்தி

தள்ளுபடியாகுதே
உண்மை;
கொள்ளைபோகுதே
நன்மை.
கள்ளத்தனமே
வாழ்க்கை;
வெள்ளையாக்குமே
என்னை!
நல்வாழ்த்து:
காலையிலும் புகழ்வேன்;
மாலையிலும் புகழ்வேன்.
வேலையிலும் புகழ்வேன், எவ்
வேளையிலும் புகழ்வேன்!
பாலையிலும் புகழ்வேன்;
பசியினிலும் புகழ்வேன்.
ஓலையிலே புகழ்ந்தேன், இனி
ஓய்வின்றி புகழ்வேன்!
நல்வாக்கு:மத்தேயு 25:1-4.
பத்து தோழியர் உவமை

”அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.”

நல்வாழ்வு:
எங்கும் இருளை அகற்றுதல்தான்,
இறைப்பணி என்று தெரிந்திடுவோம்.
இங்கே இதனைச் செய்யாமல்,
இருப்பதற்காகவும் வருந்திடுவோம்.
பொங்கும் அருளாய் புது எண்ணெய்,
புனிதர் நமக்குத் தருகின்றார்.
மங்கா ஒளியை நாம் கொடுக்க,
மண் விளக்கை நிரப்பிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி

தூண்டிலும் வலையும் துரத்துகையில்,
தூயவர் வாக்கே மீட்பு தரும்.
வேண்டுதலோடு நீர் வாரும்.
விருப்பம் கூடும், வாழ்வு பெறும்!
நல்வாழ்த்து:
மீட்பரைப் புகழ வாருங்களே.
மீட்பில் மகிழ வாருங்களே.
கேட்பவர் எவரும் மீட்புறுவார்;
கிறித்துவைப் புகழ்ந்து பாருங்களே!
நல்வாக்கு:
மத்தேயு 24:45-47.
நம்பிக்கைக்குரிய பணியாளர்

” தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

நல்வாழ்வு:
உண்மை எங்கு இருக்கிறதோ,
உயர்வு ஒருநாள் நிச்சயமே.
பண்பு எங்கு தழைக்கிறதோ,
படைத்தவர் இருப்பது அவ்விடமே.
கண்ணிமைக்கும் நேரத்திலே,
கடவுள் வந்தால் என்சொல்வோம்?
எண்ணிப் பார்த்து இனியேனும்
இறைவாக்கின்படி வாழ்ந்திடுவோம்!
ஆமென்.

நல்வழி காட்டும் நல்லவர் இயேசு

நம்முள் உண்டு, பணிந்திடுவோம்.

சொல்வழி அறிந்து செல்வதே வாழ்வு;

சிறந்த பயனை அணிந்திடுவோம்!

நல்வாழ்த்து:

தீமைகளையும் நன்மையாக்கும்

தெய்வ அருளால் நிறைந்திடுவோம்.

ஊமையாக இருந்தது போதும்;

உண்மைத் தெய்வம் புகழ்ந்திடுவோம்!

நல்வாக்கு;

மத்தேயு 24:43-44.

“இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

நல்வாழ்வு:

திருடனாய் வாழ்ந்த என்னை உணர்த்த,

திருடனின் உவமை உரைத்தீரா?

அருமையான காலமும் தந்து,

அருட்பணி செய்ய வைத்தீரா?

வருகை எப்போதென்று அறியேன்;

வரும்போதென்னை அழைப்பீரா?

ஒருமுறைகூட உம்மைக் கேட்பேன்;

உமது அரசில் நினைப்பீரா?

ஆமென்.

The Truth

இறைவனின் அருளைக் கேட்போமா?
இன்றும் இயேசுவைப் பார்ப்போமா?
மறைவழி நடக்க முயல்வோமா?
மன்னிப்பருள்வார், மகிழ்வோமா?
நல்வாழ்த்து:
இயேசுவைப் புகழ்ந்து எழுதுவதே
எனக்குப் பணியும், இன்பமுமாம்.
நேயனைப் பார்த்துப் பணிவதுவே
நமது வாழ்வின் பேரின்பமாம்!
நல்வாக்கு:
மத்தேயு 24:40-42.
“இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.”
நல்வாழ்வு::
நாழிகை அறியோம், நாளும் அறியோம்.
நம்மை மீட்க வருவார், அறிவோம்.
வாழிய அவர் பணி வாழிய என்று
வாழ்ந்து நாமும் விழித்திருப்போம்!
ஆமென்.

நற்செய்தி

நம்பிக்கை தருவது இறைவாக்கு;
நாமும் பெறுவோம் நல்வாழ்வு!
நல்வாழ்த்து:
மீட்பர் இயேசுவைப் போற்றுகிறேன்;
மீண்டும் மீண்டும் போற்றுகிறேன்.
கேட்பவர் நீங்களும் சேர்ந்திடலாம்.
கிறித்து புகழைப் பாடிடலாம்!
நல்வாக்கு:
மத்தேயு 24:37-39.
“நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.”
நல்வாழ்வு:
உண்டு குடித்து, உறங்கி எழுந்து
ஊழலில் உழல்கின்றார்.
பெண்டிரைத் தேடி பேதைமை போற்றி
பெயரை இழக்கின்றார்.
கண்டு துடிக்கும் கடவுளின் விருப்பைக்
கருத்தாய்ச் சொல்பவர் யார்?
தொண்டு புரிதலே வாழ்க்கையென்று,
தூய்மையில் வாழ்பவர் யார்?
ஆமென்.