புளிப்பிலா வாழ்வு!

புளிப்பிலா வாழ்வு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:14-18.  

14  வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.

15  அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.

16  தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

17  அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;

18  தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

புளிப்பிலா வாழ்வைப் புவியோரடைய,   

புளியா அப்பம் இயேசுண்டார்.  

களிப்பிலா அடிமைகள் விடுதலையடைய, 

கடவுப் பண்டிகைச் சாறுண்டார். 

ஒளித்திடயியலா உண்மையை விளம்ப, 

உண்ணும் உணவைப் பகிர்ந்துண்டார்.  

விளித்திடும் அவரது குரலைக் கேட்பார்,  

விண்ணின் விருந்தில் பங்குண்பார்!  

ஆமென்.  

வீடற்ற இயேசுவின் விருப்பு!

வீடற்ற இயேசுவின் விருப்பம்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:9-13.  

9   அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

10  அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய்,

11  அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.

12  அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

13  அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

வீடற்ற இயேசுவின் விருப்பம் அறிந்து,  

வீட்டைக் கொடுத்தவரே வாழ்க.  

பாடற்ற வாழ்வை, பரிசாய்த் தெரிந்து,  

பயன்படா நெஞ்சே, நீ மாள்க.  

ஈடற்ற  மீட்பை ஈவாய்க் கொடுத்து,

இயேசு வாழ்ந்தார் பலியாக.  

கேடற்ற அவரது வாக்கை எடுத்து,    

கீழ்ப்படிவேன் என் வழியாக! 

ஆமென். 

-செல்லையா.  

பலியாடு பாரீர்!

பலியாடு பாரீர்!

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:7-9.  

7   பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.

8   அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.

9   அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:  

அழிக்காது ஆண்டவர் கடக்க,  

ஆட்டை அடித்தார் அன்று.   

பலிக்கான ஆடாய்க் கொடுக்க,  

பரமன் வந்தார் இன்று.  

வலிக்காது நாமும் நடக்க,  

நம்மைக் கொடுப்பது என்று?  

விழிக்காது வீழ்தல் தடுக்க,  

வேண்டுவதுதான் நன்று!

ஆமென்.  

-செல்லையா.

காட்டிக் கொடுத்தல்!

காட்டிக் கொடுத்தல்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா  22:3-6.  

3   அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.

4   அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.

5   அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.

6   அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.  

கிறித்துவில் வாழ்வு:  

காட்டிக் கொடுத்தல் பலவகையாகும்;  

காசிற்கென்பது ஒருவகையாகும்.  

கூட்டின் உறவில் குழி பறிப்பாகும்;

கொல்லும் கொடிய மெது நஞ்சாகும்.

கேட்டின் மகனை அறிந்திருந்தாலும்,  

கிறித்து விடாதது அன்பேயாகும்.  

நாட்டில் இவன்போல் பலரிருந்தாலும், 

நம்மைக் காப்பது இறையருளாகும்!  

ஆமென்.  

-செல்லையா.

அறநூல் கற்றும்!

அறநூல் கற்றும் அறிவில்லை!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:1-2.  
1   பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.

2   அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

அறவழி நூற்கள் ஆய்ந்து கற்றும்,  

அன்பில்லாரில் நிறைவில்லை. 

திறமை துணிவு மிகுந்து பெற்றும்,  

தீச்செயலுக்கும் குறைவில்லை.  

துறவியரென்று தோற்றமுற்றும்,   

துன்புறுத்தின் முறையில்லை. 

புறவடிவத்தில் மயங்கி போற்றும்,  

புவியோரிடமும் இறையில்லை!  

ஆமென்.  

-செல்லையா. 

வீடில்லை!

வீடில்லை!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21:37-38.  

37  அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

38  ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

இனிய வீட்டை எனக்குத் தந்த   

இறைமகனுக்கு வீடுமில்லை.  

தனிமை நாடிச் செல்லும் அவரைத்

தாங்குகின்ற நாடுமில்லை.  

பனிமலையில் படுத்து உறங்க,  

பறவைக்கிருக்கும் கூடுமில்லை.  

புனித பயணம் போகும் நமக்கு, 

புரிதல் வந்தால் கேடுமில்லை.  

ஆமென்.  

உண்டு குடித்து வாழாது!

உண்டு குடித்து வாழாது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21: 34-36.  

34  உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

35  பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.

36  ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

உண்டு குடித்து உறங்கி எழுந்து,  

உழைப்பின் பெயரில் ஏய்ப்பதுதான் 

கண்டு பிடித்த பெருவாழ்வென்று, 

கருதும் மனிதர் மாள்வாரே.  

கொண்டு போகக் கூடாச் சொத்து,  

கொடுக்கும் கவலை விட்டவராய்,  

அண்டுகின்ற இறை வருகைக்கு,  

ஆயத்தமாவார் வாழ்வாரே!    

ஆமென்.

அழியாதது!

அழிவதும், அழியாததும்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:32-33.  

32  இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

33  வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.




கிறித்துவில் வாழ்வு:   

ஊன் அழியும், உடல் அழியும்;  

உலகப் பொருட்களும் அழியும். 

வான் அழியும், வாய்ப்பழியும்;  

வந்து நிற்பதெல்லாம் அழியும். 

தேன் ஒழுகும், திருச்சொல்லருளும்,  

தெய்வமொன்றே நிலைத்திருக்க,    

நான் இனிமேல்  நாடிடுவேன்;  

நல்லிறையும் அவர் வழியும்!  

ஆமென்.  

-செல்லையா. 
 

அறியாமை அகலட்டும்!

அறியாமையில் வாழ்பவரே இங்கு மிகுதி.  
அறிய விரும்பாரே அதில் பெரும் பகுதி.  
நெறிமுறை காட்ட எனக்குமில்லை தகுதி. 
நெஞ்சு கூறும் இயேசுவே நமது விகுதி!  

-செல்லையா.

அத்திமரம் துளிர்க்கிறதே!

அத்திமரம் துளிர்க்கிறதே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:29-31.  

29  அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.

30  அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.

31  அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

அத்திமரம் துளிர்க்கிறதே;  

அருள்வாக்கு பலிக்கிறதே.  

எத்திசையும் கலங்கிடுதே;    

இயலாமல் புலம்பிடுதே. 

புத்தியுள்ள மங்கையரே, 

புனிதமுடன் தங்குவரே.  

இத்திருச் சொல் ஏற்போரே,   

இறையரசு பார்ப்பாரே!  

ஆமென்.