உன்னை அறிவாய்!

தன்னை அறியும் அறிவு! 

நற்செய்தி: யோவான் 1:19-20. 

முன்னம் நிற்போர் தன்மை அறிந்தோம்;  
முழு வரலாறும் இயல்பும் அறிந்தோம்.  
என்னென்ன குறையோ யாவும் அறிந்தோம்;  
எல்லாம் விற்று வாங்கவும் அறிந்தோம்.  
இன்னில வாழ்வின் பொருளை அறிவோம். 
என் செயவேண்டும் என்றும் அறிவோம்.  
தன்னை அறியும் அறிவை அறிவோம். 
தன் குறையறிந்தால், இறையும் அறிவோம்!  
ஆமென்.
-செல்லையா.

எங்கே இறைவன்?

எங்கே இறைவன்? 

நற்செய்தி: யோவான் 1:18.

நல்வழி: 
எங்கே இறைவன்? எங்கே இறைவன்?  
என்றே வெளியில் தேடுகிறார்.  
இங்கே வந்து உள்ளில் தேடும்;
என்றே சொன்னால் ஓடுகிறார். 
உங்கள் தேடல் நிறைவில் முடியும்;  
உங்களை அவரும் நாடுகிறார்.  
மங்கா அவ்வொளி இயேசுவாகும்

மனிதர் இறையுள் கூடுகிறார்!   
ஆமென்.  
-செல்லையா.    

வாய்மையும் அருளும்!

வாய்மையின் அருட்திட்டம்!  

நற்செய்தி: யோவான் 1:16-17.  

நல்வழி:  


தூய்மைப் படுத்தும் திருச்சட்டம் ஈந்தீர்.  

தூது கொடுக்கும், மோசேயும் தந்தீர். 


வாய்மை குறையவே அருட்திட்டம் வகுத்தீர்; 

 வாழ்ந்து காட்டவே உம்மையும் பகுத்தீர்.  


தேய்மை ஆளும் எங்களைக் கண்டீர்;  


தெளிவில் வாழும்படிக்குக் கொண்டீர்.   


தாய்மை நெஞ்சில் அன்புடன் ஏற்பீர்;  


தமிழருயர உம்முடன் சேர்ப்பீர்!   


ஆமென்.  


-செல்லையா. 

சேதி வருமோ?

சேதி வருமோ? 

இரக்கம், பொறுத்தல் இறைவனின் பண்பு. 
இறை மறுப்பாளரும் தேடிடும் அன்பு.   
திருக்கும், பொய்யும், அலகையின் கொம்பு.  
திருந்தாதவர்கள் செய்திடும் வம்பு. 
நெருக்கம் நமக்கு எவ்விடம் உண்டு? 

நெஞ்சம் சொல்லும், நேர்மை கொண்டு.    
செருக்கும், வெறுப்பும் அழிவது கண்டு,  
சேதி வருமோ,  அன்பை மொண்டு? 

-செல்லையா. 

யோவானின் சான்று!

யோவானின் சான்று!  

நற்செய்தி: யோவான் 1:15.  

நல்வழி:  
தன்னலம் எதுவும் இல்லாது, 
தற்புகழ் வாக்கும் சொல்லாது, 
பின்னால் வந்த முதல்வருக்கு,
பெருமை சேர்த்தான் யோவான்.
இன்னாள் இதுபோல் நடவாது,
இறையன்பூற்றில் கிடவாது,
சொன்னால் கூசும் திமிருற்று,
சொத்து சேர்ப்பான் போவான்! 
ஆமென்.  
-செல்லையா.

எதைச் செய்தாலும்!

எதைச் செய்தாலும்!   

எதைச் செய்தாலும் இறைவனுக்கென்றே, 
எண்ணிச் செய்வீர் நண்பரே.  
இதைச் சொல்லுகிற அடியனும் நன்றே, 
எண்ண வேண்டும் அன்பரே. 
விதைக்கிற விதையைச் செடி மரமாக்கி,  
விளையச் செய்பவர் தெய்வமே. 
புதைக்கிறத் தொழிலாய், பொய் விதைக்காது,  
புனிதம்  நட்டால் உய்வமே!  
-செல்லையா. 

வாக்கு வடிவெடுத்தது!

வாக்கு வடிவம் எடுத்தது!
நற்செய்தி: யோவான் 1:14.
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
நல்வழி:

வாக்காய் ஒலித்து வழிநடத்தியயென்
வானின் அருளே, வாய்மையே,
நோக்காதிருந்த மாந்தர் கண்முன்
நுழைந்தாய் இயேசு வடிவிலே.
நீக்காதிருப்போர் ஐயம் இனியேன்?
நீங்கச் செய்வாய் மாண்பிலே.
தேக்காதிருந்த மாட்சியை அடியேன்,
தேடினேன் உனது மடியிலே!
ஆமென்.
-செல்லையா.

என்னிறைவன்!

என்னிறைவன்!
அன்பு,அறிவு, ஆற்றல், அமைதி, 
அனைத்தும் நிறைந்தவர் என்னிறைவன். 
உண்மை, ஒழுக்கம், நேர்மை, தாழ்மை,
ஒன்றிலும் குறையார் என்னிறைவன். 
பண்பின் வடிவம் ஒருவரில் கண்டேன்; 
படைத்தருள்கிறார்  என்னிறைவன்.  
நன்மை செய்தல் வாழ்வெனச் சொல்லி, 
நானிலம் ஆள்கிறார்  என்னிறைவன்! 
-செல்லையா.

பிள்ளைப் பேறு!

நல்வழி:  
பற்றும் உறுதி இல்லாதவனாய்,   
பன்னிரு ஆண்டுகள் நானலைந்தேன்.
சற்றும் நேர்மை புரியாதவனாய்,     
சகதியில் விழுந்து சீர்குலைந்தேன்.  
சுற்றம் உணர, சூழ்நிலை வெல்ல, 
சொல்லொளி காட்டி எனையிழுத்தார். 
முற்றும் மீட்டு முழுவாழ்வளிக்க, 
முதலில் பிள்ளை என்றழைத்தார்!  
ஆமென்.
-செல்லையா. 

இறையொளி!

இறையொளி!  

நற்செய்தி: யோவான் 1:10-11

நல்வழி: 

எந்த மாந்தரும் ஒளியைப் பெறுவார்;
இறையும் மகனாய் வெளிப்பட்டார்.  
இந்த ஒளியைப் பெற்றவர் தருவார்; 
எங்கும் ஒளியை பரப்பிட்டார். 
சொந்த உறவோ ஏற்க மறுத்தார்;  
சொல்லால் செயலால் தடுத்திட்டார். 
அந்த ஒளியை அடக்குதல் எளிதோ?  
ஆதவன் முன்பு அடங்கிட்டார்! 
ஆமென்.
-செல்லையா.