கறுப்புப் பணம்!

கறுப்புப் பணமும் கடவுள் அருளும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:9.
9   நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:
கணக்கில் வராத கறுப்புப் பணத்தை,
கடவுள் அருவருப்பென்றாலும்,
உணவுக்கென்று தவிக்கும் ஏழை 
உண்ணப் பெற்றால், ஏற்கின்றார்.
பணத்தால் வாங்க இயலா அருளை,
பரமன் விற்காவிட்டாலும்,
மனத்தால் கொண்ட மாற்றம் கண்டு,
மகிழும் நட்பில் சேர்க்கின்றார்!
ஆமென்.

கொரோனா கூறும் செய்தி!

கொரோனா கூறும் செய்தி!


என்னால் கூடும், யாவும் கூடும்;

என்பது அல்ல, இறைவேண்டல்.

தன்னால் அல்ல, இறையால் கூடும்;

தாழ்ந்து சொல்வதே, இறைவேண்டல்.

முன்னால் நிற்கும் நோயும் கூறும்,

முதற்கண் தேவை, இறைவேண்டல்.

சொன்னால் கேட்கும், நாடே மகிழும்;

சொல்வோம் நாமும், இறைவேண்டல்!


-கெர்சோம் செல்லையா.

கள்ளனை ஏற்கும் வள்ளன்!

கள்ளனை ஏற்கும் வள்ளன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:7-8.

7   பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.

8   அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

தப்புக் கணக்கு, எழுதி வைத்து,

தப்பமுயன்றான், ஒரு கள்ளன்.

ஒப்புக்கொண்டு, உச்சி முகர்ந்து,

உயர்த்துகின்றான், ஒரு வள்ளன்.

துப்புத் துலக்கி, ஆயும் முன்பு,

தெரியுமிவனே, அக்கள்ளன்.

செப்பும் எளியன் இழிவு கண்டு,

சேர்க்குமிறையே, அவ்வள்ளன்.

ஆமென்.

கொன்று போடும் கொடுங்கணக்கு!

கொரோனா போன்ற கொடுங்கணக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா16:3-6.
3   அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.

4   உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;

5   தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.

6   அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

இன்று நீங்கள் எழுதும் கணக்கு,

எப்படிப்பட்டது எனக்கேட்டால்,

நின்று நாமும், நேர்மையென்று,

நிமிர்ந்து சொல்ல இயலாதே!

தொன்றுதொட்டு, தூய்மையற்று,

தொடர்ந்து எழுதும் பொய்க்கணக்கு,

கொன்றுபோடும் கொரோனாவாகும்;

கொடுமையில் செல்ல முயலாதே!

ஆமென்.

போதும், உனது கையை நிறுத்து!

போதும் உந்தன் கையை நிறுத்து!

“தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார். (2 சாமுவேல் 24:16)

சூதும் வாதும் பெருகியபோது,

சொற்படி வாதை வந்தது அன்று.

ஏதும் அறியார் இறப்பது கண்டு,

ஏங்கினார்கள் இறைவனின் முன்பு.

‘போதும் உனது கையை நிறுத்து’,

பொழிந்த அருளால், தோற்றது தொற்று.

தீதும் துன்பும் அதுபோல் இன்று,

தொலைவதற்கு இறையை வேண்டு!

-கெர்சோம் செல்லையா.

எனக்கீந்தத் திருக்கொடைகள்!

Image result for luke 16:1-2
Image result for luke 16:1-2

எனக்கீந்தத் திருக்கொடைகள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:1-2.

1   பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

2   அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒப்புவித்த உடமைகளில்,

ஒருங்கிணைந்த கடமைகளில்,

தப்பிதமாய் நானிருப்பின்,

தடுக்கிறதே, உம் ஆவி.

இப்புவியின் வாழ்க்கையினில்,

எனக்கீந்தத் திருக்கொடைகள்,

எப்பொழுதும் உம் புகழே;

இலாவிடில், நான் பாவி!

ஆமென்.

ஊரடங்கு!

ஊரடங்கு!
அடங்க மறுத்துப் போவோர் செல்லும்,
அழகிய சென்னைச் சாலைகளை,
முடங்க வைத்து, அறிவுரையூட்டும்
முதல் ஆசான் குரோனாவாம்.
கிடங்கு போலப் பிறரது இடத்தில்,
கொட்டும் நமது குப்பைகளை,
சடங்கு செய்தல் போலகற்றின்,
சாவு எப்படி வருவானாம்?

-கெர்சோம் செல்லையா.

கொடுக்கும் இறையைத் தடுக்காதே!

தடுக்கும் மனிதனும், கொடுக்கும் இறையும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:29-32.

29  அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.

30  வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

31  அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

32  உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

தம்பிகள் மீள்வதைத் தடுக்கும் மனிதர்,

தரணியில் பலபேர் உண்டய்யா.

வெம்பிடும் ஏழையர் வாழ்வடைவர்,

விண்ணின் அணைப்பு கொண்டய்யா.

நம்பிடும் அடியர் மகிழ்ந்துரைப்பர்,

நற்செய்தியாலே மீளய்யா.

எம்பிரான் இயேசு இறையரசர்;

எம்மை என்றும் ஆளய்யா!

ஆமென்.

விரும்பா நோய்கள் ஒழியட்டும்!

விரும்பா நோய்கள் ஒழியட்டும்!

ஒருநாள் வீட்டில் ஒளித்திருந்தால்,
உள்ளே வராது தொற்றென்று,
கொரோனா ஒழிப்புத் திட்டம் தந்தது,
கோலோச்சும் மைய அரசின்று.
திருநாள் ஞாயிறு கூடும் நமக்கும்,
தேவை இறையின் அருளென்று,
விரும்பா நோய்கள் ஒழிந்துபோக,
வீட்டில் வேண்டுவதே நன்று!

-கெர்சோம் செல்லையா.

அன்பற்ற அண்ணன்!

அன்பற்ற அண்ணன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:25-28.

25 அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;26 ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.27 அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.28 அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒழுக்கம் நேர்மை ஊருக்குரைக்கும்,

உள்ளில் அன்பு இல்லையெனில்,

புழுக்கம் கொண்டு, புண்ணாகிடுமே;

புரிந்து, நன்மை செய்வோமா?

அழுக்கை முதற்கண் தன்னிலகற்றும்,

அரிய பண்பு இல்லையெனில்,

மழுக்கம் கண்டு, மண்ணாகிடுமே;

மனம் திரும்பி உய்வோமா?

ஆமென்.