தூய்மை?

தூய்மை?

நற்செய்தி: 3:24-26.


24. அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக் குறித்துவாக்குவாதமுண்டாயிற்று.
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.


நல்வழி:


நீரால், நெருப்பால், நிலையாப் பொருளால்,

நினைப்போர் பெறலாம் புறத் தூய்மை.

ஊரால், உறவால், ஓங்கும் அரசால்,

உலகும் பெறலாம் புறத் தூய்மை.

யாரால் கிடைக்கும், எங்கே கிடைக்கும்,

எப்படி கிடைக்கும் அகத் தூய்மை?

சீராய் மாற்றும் சிறுமை அகற்றும்,

சிலுவை ஈவதே அகத் தூய்மை!


ஆமென்.


-செல்லையா.

அன்பில் அமிழ்வோம்!

அன்பில் அமிழ்வோம்!
நற்செய்தி: யோவான் 3:22-23.

நல்வழி: 
இப்படி இப்படி இருக்கவேண்டும்,
என்று சடங்கை விளக்கும் நாம்,
அப்படி அப்படி குறைவற்றிருக்க,
அன்புள் மூழ்கி எழுந்தோமா?
தப்படி தப்படி இது என்றுரைத்து, 

தண்ணீர் ஆழம் அளக்கும் நாம், 

எப்படி எப்படி வாழ வேண்டும்,
என்கிற ஆவியில் எழுவோமா?
ஆமென்.
-செல்லையா.

ஒளி உண்டாகுக!

ஒளி உண்டாகுக!நற்செய்தி: யோவான் 3:19-21.
19. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
20. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.


நல்வழி:


ஒளியுண்டாகுக எனும் வாக்குரைத்து,

உலகு படைத்தார் இறைவன்.

வெளியாரடைவது கண்டு வெறுத்து,

வெளிச்சம் தடுக்கிறான் மனிதன்.

தெளிவில்லா இவர் நெஞ்சினகத்து,

தேவை ஒளியாம் இறைவன்.

எளிதாய் நாமும் ஏற்கும்படிக்கு,

இயம்பும் இயேசு புனிதன்!


ஆமென்.


-செல்லையா.

தவற்றின் முடிவு என்ன?

தவற்றின் முடிவு தண்டனை!
நற்செய்தி: யோவான் 3:18.  

நல்வழி: 
தவற்றின் முடிவு தண்டனை என்று, 
தவறிக்கூட நினைக்காது, 
இவற்றில் அன்பு எங்கே என்று, 
இன்றைய மாந்தர் கேட்கின்றார். 
அவற்றை அறிந்த ஆண்டவர் அன்று, 
அருமை மகனையே பலியீந்து,
சிவப்புக் குருதி வழியாய் இன்று,  
சீர்பெற நம்மை மீட்கின்றார்! 
ஆமென். 
-செல்லையா. 

உன் வழி தவறு!

உன் வழி தவறு!


முன் வழி காட்டும் நன் மகனேசு,

பன் வழியாளரைப் பழித்தாரா?

“உன் வழி தவறு, என்வழி உயர்வு”

என்றவர் கூறி அழித்தாரா?

தன்னினமாயினும் அன்னியராயினும்,

அன்பினை மறந்து மொழிந்தாரா?

இன்னில மக்கள் வன்முறை ஒழிக்க,

நன்மைகள் மட்டும் பொழிவீரா?

-செல்லையா.

தண்டியா இறைவன்!

தண்டியா இறைவன்!
நற்செய்தி: யோவான் 3:17.

நல்வழி: 
தண்டித்துக் கொல்லல் தவறிலை இன்று,
தம்மை மறந்தவர் கூறுகிறார்.
கண்டித்துத் திருத்தல் பயனிலை என்று,
கடுமைச் சட்டம் கோருகிறார்.
மண்டிட்டுத் தாழ்வார் மனநிலை கண்டு,
மாண்பின் இறையோ மாறுகிறார்.
துண்டிட்டுடைக்கா மீட்பு கொண்டு,

தூயோன் அன்பில் ஊறுகிறார்!

ஆமென்.
-செல்லையா.

இந்நாட்டார், அந்நாட்டார்!

இந்நாட்டார், அந்நாட்டார்!

என்னை ஆளும் இறைவழி சொன்னால்,
ஏற்க மறுப்பார், இந்நாட்டார்.
சொன்னால் கேட்பார்; சொற்படி நடப்பார்;
சொந்த நாட்டார், அந்நாட்டார்.
அன்பின் உறவு, அனைவரும் ஓன்று,
அடிக்கடிச் சொல்வார் இந்நாட்டார்;
பின்னால் சாதி, சமயமே பாரார்;
பிரித்து வையார் அந்நாட்டார்.

ஊரும் உறவும் பார்த்துச் செய்வார்,
உதவ மறுக்கும் இந்நாட்டார்.
யாரும் வந்தால், இறையாய்ப் பார்ப்பார்;
இனவெறி அற்ற அந்நாட்டார்.
சீரும் சிறப்பும் தேடிச் செல்வார்;
தேவை மிகுந்த இந்நாட்டார்.
பேரும் புகழும் தொண்டிலடைவார்;
பெருமை பேசார் அந்நாட்டார்.

ஏற்றம் நாடும் ஏழைக்கிரங்கார்,
ஏழ்மை வெறுக்கும் இந்நாட்டார்.
ஆற்றும் தொண்டு ஆண்டவர்க்கென்பார்;
அரசியல் செய்யார் அந்நாட்டார்.
மாற்றம் தருகிற வழியும் கேட்பார்,
மதிப்பிற்குரிய இந்நாட்டார்.
போற்றும் தூய்மை புரிந்து வாழ்வார்;
புனிதர் மட்டுமே அந்நாட்டார்!

-கெர்சோம் செல்லையா.

இறையன்பு!

இறையன்பு!

நற்செய்தி: யோவான் 3:16.  

நல்வழி: 

இலை மேல் நீர்த்துளி இருப்பது போன்று, 

இயங்கும் நமது புவி வாழ்வில், 


நிலை வாழ்வென்னும் மீட்பு கண்டு,  

நெஞ்சை அதனிடம் கொடுப்போமா?  


அலை கீழ் ஆழம், மலை மேல் உயரம்,  

அளந்தும் வளர்கிற இறையன்பு,  


சிலை போல் நின்று வியக்கும் நமக்கு,  


சிலுவையில் உண்டு, எடுப்போமா? 

ஆமென்.  


-செல்லையா. 

பல்லும் சொல்லும்!

பல்லும் சொல்லும்!


சொல்லாடும் அந்நாளில்,

சுவையறியா என் பற்கள்,

தள்ளாடும் இந்நாளில்,

தனியாக்கி ஓடுவதேன்?

பல்லாடும் நிலை கண்டும்,

பண்பறியா என் சொற்கள்,

மெல்லாத கீழ் வாயை,

மேலிருந்து மூடுவதேன்?


-செல்லையா.

சிலுவைப் பலி!

சிலுவைப் பலி!
நற்செய்தி: யோவான் 3:13-15.  

நல்வழி:  
எந்த பலியால் என்வினை சாகும்?  
இப்படி எவரும் நினைத்தோமா?  
அந்த வழியால் நல்மீட்பாகும்,  
ஆண்டவரோடு இணத்தோமா?  
இந்த வாழ்க்கை வீணாய்ப் போகும்; 

இதனால் இறையை நினைப்போமா?  
சொந்த மகனைப் பலியாய் ஈகும்,  
சிலுவையோடு இணைப்போமா?  
ஆமென்.  
-செல்லையா.