யாவரும் வாழவே!

யாவரும் வாழவே இறை படைத்தார்!


நலமாய் யாவரும் வாழத்தான்,

நமக்குப் புவியை இறை படைத்தார்.

தலையில் மூளையை வைத்துத்தான்,

தகுந்த வடிவில் உடல் கொடுத்தார்.

பலரையும் வாழ வைக்கத்தான்,

பற்பல அரசையும் தேர்ந்தெடுத்தார்.

சிலரை மட்டும் இவர் வளர்த்துச்

சீர்மிகு நாட்டை ஏன் கெடுத்தார்?


-கெர்சோம் செல்லையா.

வெறுந்தலையே!

கண்ணில் கயமை கண்டபின்னும்,
கட்டுப் படுத்த விரும்பலையே!
உண்மை நம்மைக் கேட்கும் என்னும்,
உணர்வும் நெஞ்சில் அரும்பலையே!
பன்மை மிகுந்த பாரத நாட்டின்
பண்பைப் பார்த்தும் திருந்தலையே.
என்னால் எழுத மட்டுமே முடியும்;
ஏற்க மறுப்பின் வெறுந்தலையே!

-கெர்சோம் செல்லையா.

அன்பைக் கடைப்பிடி!

அன்பைக் கடைப்பிடி!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:25-28.

25அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
26அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
இறைவன் திருவடி, இணைதல் எப்படி?
என்று கேட்பார் மனிதர் அடிக்கடி.
மறைநூல் சொல்லும் அன்பைக் கடைப்பிடி;
மகிழும் வாழ்வு; நீயும் கீழ்ப்படி.
உரைக்கும் மகனை வெறுக்கும் காலடி,
உலகின் உயரே நிற்பது எப்படி?
அரைக்கல்தானே அவரது நடையடி.
அதன்பின் பாரடி, அழிந்த கீழடி!
ஆமென்.

காணும் கண்!

காணும் கண்ணைத் தருபவரே!கிறித்துவின் வாகு:10:23-24.

23பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.

அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
காணும் கண்ணை எனக்குந் தந்து,
காட்சிப் பொருளை உரைப்பவரே,
வேணும் என நான் கேளாதிருந்து
வெறுத்தும், அன்பால் நிறைப்பவரே,
நாணும் என்னை ஏற்றுக்கொண்டு,
நடத்தும் நேர்மையின் உறைவிடமே.
கோணல் நிமிர்த்தும்,குறைகள் திருத்தும்,
கோனாய் ஆளும் இறைமகனே!
ஆமென்.

குழந்தை ஊழியர்!

குழந்தை ஊழியர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:21-22.

20ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
21அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

கிறித்துவில் வாழ்வு:
எத்தனை ஆண்டுகள் முடித்திருந்தாலும்,
இறைவனின் முன் நாம் குழந்தைகளே.
முத்தினை ஒத்த இறையருள் வாக்கை,
மொழிவதிலும் நாம் பிள்ளைகளே!
இத்தரை மாந்தர் யாவரும் மீள,
இயேசுவைப் போன்று வாழுங்களே.
மொத்தமும் அவரது காலடி படைத்து,
முடிவிலா அரசில் ஆளுங்களே!
ஆமென்.

உம்மை வெறுத்த ஊர்கள்!

உம்மை வெறுத்த ஊர்கள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:13-16.13 கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.14 நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.15 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,16 சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

தம்மை உயர்வாய் எண்ணிக் கொண்டு,

தவற்றில் உழல்வோர் சிலருண்டு.

செம்மை வழியைத் தூற்றிக் கொண்டு,

சிதறி அழிந்தோர் பலருண்டு.

உம்மை வெறுத்த ஊர்கள் அன்று,

ஒழிந்துபோன நிகழ்வுண்டு.

மும்மை இறையே, தந்தேன் இன்று;

மெய்யில் என்றும் மகிழ்வுண்டு!

ஆமென்.

ஊரார் ஏற்கவில்லை!

ஊரார் என்னை ஏற்கவில்லை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:10-12.

10யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
12அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
உந்தன் வாக்கை ஊரில் உரைத்தேன்;
ஊரார் என்னை ஏற்கவில்லை.
சொந்தம் பேசும் உறவிற்குரைத்தேன்;
சொற்படி வாழ்வதும் பார்க்கவில்லை.
எந்தன் குறையால் வந்த தவறா?
ஏன் என்றெனக்குத் தெரியவில்லை.
தந்தை இறையே, தாழ்ந்து பணிந்தேன்;
தண்டனக்கு இது நேரமில்லை!
ஆமென்.

குறை தரார்!

கிறித்து எதிலும் குறை தரார்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:7-9.

7அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
8ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,
9அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கஞ்சியோ கூழோ, கறியோ, குழம்போ,
கடவுளின் ஊழியர் போதுமென்பார்.
மிஞ்சிப் போவார் மேலும் கேட்பார்;
மெய்யறிவின்றித் தீது செய்வார்.
நெஞ்சின் ஆவல் நேர்மையாயின்,
நிம்மதியோடு இறை தருவார்.
கொஞ்சமும் ஐயம் நமக்கு வேண்டாம்;
கிறித்து எதிலும் குறைதரார்!
ஆமென். 

முதற்கண் வணங்கிடுவோம்!கிறித்துவின் வாக்கு: 10:5-6.

5ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
6சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.

கிறித்துவில்  வாழ்வு:

மாற்றார் நம்முன் மமதையில் இருந்தும்,
மதித்து முதற்கண் வணங்கிடுவோம்.
தோற்றார் என்றே நமை நினைத்தாலும்,
தூய அமைதிக்கு இணங்கிடுவோம்.
வேற்றாராக வெறுக்கு மிந்நாட்டில்,
விண் வாக்கின்படி தாழ்ந்திடுவோம்.
போற்றல் புகழ்ச்சி இறையால் கிடைக்கும்;
புனிதர் வழியில் வாழ்ந்திடுவோம்!
ஆமென்.

விண்ணூழியரே அள்ளாதீர்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:4.

4பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
கிறித்துவின் வாழ்வு:
காசுக்கென்றும் பொருளுக்கென்றும் 
கடவுள் நாடி வருவோர்கள்,
பேசும் தெய்வ வாக்கு கேளார்;
பையை நிரப்பிக் கொள்ளாதீர்.
மாசுக்குற்றம் மலிந்த நெஞ்சம்
மாற வேண்டிக் கேட்போர்கள்,
வீசுவார்கள் காசைத் தூசாய்;
விண்ணூழியரே, அள்ளாதீர்!
ஆமென்.