காட்டிக் கொடுத்தல்!

காட்டிக் கொடுத்தல்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா  22:3-6.  

3   அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.

4   அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.

5   அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.

6   அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.  

கிறித்துவில் வாழ்வு:  

காட்டிக் கொடுத்தல் பலவகையாகும்;  

காசிற்கென்பது ஒருவகையாகும்.  

கூட்டின் உறவில் குழி பறிப்பாகும்;

கொல்லும் கொடிய மெது நஞ்சாகும்.

கேட்டின் மகனை அறிந்திருந்தாலும்,  

கிறித்து விடாதது அன்பேயாகும்.  

நாட்டில் இவன்போல் பலரிருந்தாலும், 

நம்மைக் காப்பது இறையருளாகும்!  

ஆமென்.  

-செல்லையா.

அறநூல் கற்றும்!

அறநூல் கற்றும் அறிவில்லை!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:1-2.  
1   பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.

2   அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

அறவழி நூற்கள் ஆய்ந்து கற்றும்,  

அன்பில்லாரில் நிறைவில்லை. 

திறமை துணிவு மிகுந்து பெற்றும்,  

தீச்செயலுக்கும் குறைவில்லை.  

துறவியரென்று தோற்றமுற்றும்,   

துன்புறுத்தின் முறையில்லை. 

புறவடிவத்தில் மயங்கி போற்றும்,  

புவியோரிடமும் இறையில்லை!  

ஆமென்.  

-செல்லையா. 

வீடில்லை!

வீடில்லை!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21:37-38.  

37  அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

38  ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

இனிய வீட்டை எனக்குத் தந்த   

இறைமகனுக்கு வீடுமில்லை.  

தனிமை நாடிச் செல்லும் அவரைத்

தாங்குகின்ற நாடுமில்லை.  

பனிமலையில் படுத்து உறங்க,  

பறவைக்கிருக்கும் கூடுமில்லை.  

புனித பயணம் போகும் நமக்கு, 

புரிதல் வந்தால் கேடுமில்லை.  

ஆமென்.  

உண்டு குடித்து வாழாது!

உண்டு குடித்து வாழாது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21: 34-36.  

34  உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

35  பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.

36  ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

உண்டு குடித்து உறங்கி எழுந்து,  

உழைப்பின் பெயரில் ஏய்ப்பதுதான் 

கண்டு பிடித்த பெருவாழ்வென்று, 

கருதும் மனிதர் மாள்வாரே.  

கொண்டு போகக் கூடாச் சொத்து,  

கொடுக்கும் கவலை விட்டவராய்,  

அண்டுகின்ற இறை வருகைக்கு,  

ஆயத்தமாவார் வாழ்வாரே!    

ஆமென்.

அழியாதது!

அழிவதும், அழியாததும்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:32-33.  

32  இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

33  வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
கிறித்துவில் வாழ்வு:   

ஊன் அழியும், உடல் அழியும்;  

உலகப் பொருட்களும் அழியும். 

வான் அழியும், வாய்ப்பழியும்;  

வந்து நிற்பதெல்லாம் அழியும். 

தேன் ஒழுகும், திருச்சொல்லருளும்,  

தெய்வமொன்றே நிலைத்திருக்க,    

நான் இனிமேல்  நாடிடுவேன்;  

நல்லிறையும் அவர் வழியும்!  

ஆமென்.  

-செல்லையா. 
 

அறியாமை அகலட்டும்!

அறியாமையில் வாழ்பவரே இங்கு மிகுதி.  
அறிய விரும்பாரே அதில் பெரும் பகுதி.  
நெறிமுறை காட்ட எனக்குமில்லை தகுதி. 
நெஞ்சு கூறும் இயேசுவே நமது விகுதி!  

-செல்லையா.

அத்திமரம் துளிர்க்கிறதே!

அத்திமரம் துளிர்க்கிறதே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:29-31.  

29  அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.

30  அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.

31  அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

அத்திமரம் துளிர்க்கிறதே;  

அருள்வாக்கு பலிக்கிறதே.  

எத்திசையும் கலங்கிடுதே;    

இயலாமல் புலம்பிடுதே. 

புத்தியுள்ள மங்கையரே, 

புனிதமுடன் தங்குவரே.  

இத்திருச் சொல் ஏற்போரே,   

இறையரசு பார்ப்பாரே!  

ஆமென்.

நிமிர்வோம்!

விண்ணில் இயேசு வெளிப்படும்போது!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:27-28.  

27  அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

28  இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:

விண்ணில் இயேசு வெளிப்படும்போது,  

விரும்பும் அடியார் நிமிர்வாரே.  

மண்ணில் பட்ட பாடுகள் விட்டு,   

மன்னன் மடிமேல் அமர்வாரே.  

கண்ணில் அந்நாள் காண்போமென்று,  

கடவுளை இன்றே பணிவீரே.  

உண்ணும், உறங்கும், உழைக்கும்போது,  

உயர்த்தும் மீட்பை அணிவீரே!  

ஆமென்.

விண் அதிரும் காட்சி!

விண் அதிரும் காட்சி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:25-26.  

25  சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.

26  வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.  

கிறித்துவில் வாழ்வு: 

மண்ணின் அதிர்வைத் தாங்க இயலா   

மன வலுவற்ற மக்கள் நாம்,  

விண்ணின் அதிர்வில் எப்படி நிற்போம்? 

விளக்கும் அறிவில் எவருமுண்டோ? 

எண்ணிப் பார்த்து எழுத இயலா,  

ஈவுகள் கேட்டுப் பெற்றவர் நாம்,  

கண்ணில் அந்தக் காட்சி வருமுன்,  

கடக்கக் கேட்பதில் தவறுமுண்டோ?  

ஆமென்.

சென்றவர் அழிவு!

அன்றைய யூதர் கேட்கவில்லை!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:23-24.  

23  அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.

24  பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.  

கிறித்துவில் வாழ்வு:  

அன்றைய யூதர் கேட்கவில்லை;  

ஆண்டவர் வாக்கை ஏற்கவில்லை;  

வென்றிடும் உரோமர் அழிக்கையிலே,  

விழுந்தார், வேறு வழியுமில்லை.  

இன்றைய நாளின் கிறித்தவரே,  

இயேசுவின் அருட்பூ பறித்தவரே,   

சென்றவர் அழிவைக் கேட்டிட்டும்,  

சிறை மீளாவிடில் விழியுமில்லை!  

ஆமென்.