சாதி மறுப்பு!

சாதி மறுப்புப் போராளிகள்

அறிவதற்கு!

அன்று சாதி பாராது பலர் இருந்தனர்.

ஆனால் விளம்பரம் செய்ததில்லை.

இன்று பலபேர் இருக்கின்றனர். இவர்களும் விளம்பரம் செய்வதில்லை.

என்றும் சாதிபாராதவர் இருப்பர்; இவர் எங்கும் இருப்பர்.

விளம்பரமும் இராது. விமரிசனமும் வராது!

புளித்த மாவு பரவுதல் போல் வெளியிலும் தெரியாது!

எளிமையாய்க் கடந்து செல்வதால், என்ன நடக்கிறதென்று, பலருக்கும் புரியாது!

இப்படி வாழ்ந்தால் சிக்கல்கள் குறையும். சிறுமையும் மறையும்.

இதை விட்டு விட்டு,

ஏன், எதற்கு, எங்கும், எப்போதும் சாதி சாதி என்று பேச வேண்டும்?

எதற்கு வீணாக, சாதியையும், பாகுபாட்டையும் எண்ண வேண்டும்?

எதற்கு உயர்வென்று ஓங்கி அறைய வேண்டும்?

ஏன் தாழ்ந்தவன் என்று தரம் தாழ்த்த வேண்டும்?

சாதிபார்ப்பது மட்டும் தவறென எண்ணாமல், சாதி குறித்துப் பேசித் திரிவதும் தவறென நினைப்போம்!

இதை ஏன் நான் சொல்கிறேன் தெரியுமா?

எனது வாழ்வில்-வளர்ச்சியில் எல்லா இனத்தவரும் உதவினர், எல்லா நாட்டவரும் இருந்தனர்! எப்படி நான் இவர்களை வேறு பிரித்துப் பார்ப்பேன்? எப்படி நான் நன்றி மறந்து நடப்பேன்?

இன்று சாதி என்கிற கறை இருக்கிறது; இது உண்மை. அதை அக்கரையோடும் கழுவுவோம்; அமைதியோடும் கழுவுவோம்.

கறை, கறை என்று குறை கூறியே திரிவதென்பது…. எனக்கென்னவோ சரியாகத் தெரியவில்லை!

ஒருவேளை, ஆவியாரின் நிரப்புதலில் நான் குறைவுபட்டிருக்கலாம்! அல்லது, அகவை 72 ஆகியும், என்னறிவு வளராதிருக்கலாம்!

பொறுத்தருளுங்கள்; யாரும் பொங்க வேண்டாம்!

நமக்குக் கொடுக்கப்பட்ட இறைத் தொண்டு எதுவென அறிவோம். அதை, இனி மெய்யாயும் செய்வோம்; இனிமையாயும் செய்வோம்!

வாழ்த்துகள்.

இறையருள் பெருகும்.

– கெர்சோம் செல்லையா.

நம்மில் இருப்பவர் யார்?

நம்மில் இருப்பவர் யார்?

இறைவாக்கு; யோவான் 14:10-11.

  1. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
  2. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

இறை வாழ்வு:

என்னில் இருப்பவர் இறைவனெனில்,
எந்தன் செயலில் எவையிருக்கும்?
அன்பும் அறமும் தழைத்திருக்கும்;
அனைவர் மகிழ அவையிருக்கும்.
மண்ணின் அரசன் அலகையெனில்,
மாண்பு, மெய்மை எங்கிருக்கும்?
துன்பத் துயரே தொடர்ந்திருக்கும்;
துரித அழிவும் அங்கிருக்கும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.