உம்மை வெறுத்த ஊர்கள்!

உம்மை வெறுத்த ஊர்கள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:13-16.13 கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.14 நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.15 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,16 சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

தம்மை உயர்வாய் எண்ணிக் கொண்டு,

தவற்றில் உழல்வோர் சிலருண்டு.

செம்மை வழியைத் தூற்றிக் கொண்டு,

சிதறி அழிந்தோர் பலருண்டு.

உம்மை வெறுத்த ஊர்கள் அன்று,

ஒழிந்துபோன நிகழ்வுண்டு.

மும்மை இறையே, தந்தேன் இன்று;

மெய்யில் என்றும் மகிழ்வுண்டு!

ஆமென்.

ஊரார் ஏற்கவில்லை!

ஊரார் என்னை ஏற்கவில்லை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:10-12.

10யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
12அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
உந்தன் வாக்கை ஊரில் உரைத்தேன்;
ஊரார் என்னை ஏற்கவில்லை.
சொந்தம் பேசும் உறவிற்குரைத்தேன்;
சொற்படி வாழ்வதும் பார்க்கவில்லை.
எந்தன் குறையால் வந்த தவறா?
ஏன் என்றெனக்குத் தெரியவில்லை.
தந்தை இறையே, தாழ்ந்து பணிந்தேன்;
தண்டனக்கு இது நேரமில்லை!
ஆமென்.

குறை தரார்!

கிறித்து எதிலும் குறை தரார்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:7-9.

7அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
8ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,
9அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கஞ்சியோ கூழோ, கறியோ, குழம்போ,
கடவுளின் ஊழியர் போதுமென்பார்.
மிஞ்சிப் போவார் மேலும் கேட்பார்;
மெய்யறிவின்றித் தீது செய்வார்.
நெஞ்சின் ஆவல் நேர்மையாயின்,
நிம்மதியோடு இறை தருவார்.
கொஞ்சமும் ஐயம் நமக்கு வேண்டாம்;
கிறித்து எதிலும் குறைதரார்!
ஆமென். 

முதற்கண் வணங்கிடுவோம்!கிறித்துவின் வாக்கு: 10:5-6.

5ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
6சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.

கிறித்துவில்  வாழ்வு:

மாற்றார் நம்முன் மமதையில் இருந்தும்,
மதித்து முதற்கண் வணங்கிடுவோம்.
தோற்றார் என்றே நமை நினைத்தாலும்,
தூய அமைதிக்கு இணங்கிடுவோம்.
வேற்றாராக வெறுக்கு மிந்நாட்டில்,
விண் வாக்கின்படி தாழ்ந்திடுவோம்.
போற்றல் புகழ்ச்சி இறையால் கிடைக்கும்;
புனிதர் வழியில் வாழ்ந்திடுவோம்!
ஆமென்.

விண்ணூழியரே அள்ளாதீர்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:4.

4பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
கிறித்துவின் வாழ்வு:
காசுக்கென்றும் பொருளுக்கென்றும் 
கடவுள் நாடி வருவோர்கள்,
பேசும் தெய்வ வாக்கு கேளார்;
பையை நிரப்பிக் கொள்ளாதீர்.
மாசுக்குற்றம் மலிந்த நெஞ்சம்
மாற வேண்டிக் கேட்போர்கள்,
வீசுவார்கள் காசைத் தூசாய்;
விண்ணூழியரே, அள்ளாதீர்!
ஆமென்.

ஓநாய்களுக்குள்ளே ஓர் ஆடு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:3.

3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
பேநாய்க் கடித்தவர் முன்சென்று,
பேரிடர் வராது வந்திடலாம்.
ஒநாய்க் கூட்டம் உள்நுழைந்து,
ஓராடுயிருடன் வந்திடுமோ?
ஆனாலும் உம் சொல் கேட்டு,
அடியர் நாங்கள் செல்கின்றோம்.
நானாவிதத்தின் தீங்குகளும்,
நன்மை தராமல் முந்திடுமோ?
ஆமென்.

அறுப்போ மிகுதி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:1-2.

1இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
அறுப்போ மிகுதி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:1-2.
1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அறுக்கும் நிலத்தின் அளவோ பெரிது;
அறுவடையாளரின் தொகையோ சிறிது.
பொறுக்கும் இறையின் அருளோ பெரிது;
புனிதர் செய்யும் தொண்டோ சிறிது, 
வெறுக்கும் மனிதரின் கூட்டமோ பெரிது.
வேண்டுதலாலே மாறுது சிறிது.
நொறுக்கும் ஐயா, எம்மைச் சிறிது;
நிகழும் நன்மை நாட்டில் பெரிது!
ஆமென்.

கலப்பையைப் பிடிப்போரே!

கலப்பைப் பிடித்து உழுவோரே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:61-62.61

பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.


கிறித்துவில் வாழ்வு:

வீட்டார் அனுமதி கிடைத்த பின்னர்,

விரும்பும் ஊழியம் செய் என்பார்.

நாட்டார் எதிர்க்கிறார் என்றறிந்தால்,

நம்மவர் எப்படி அனுப்பிடுவார்?

போட்டார் இறைமகன் ஓராணை;

போக்குச் சொன்னவர் திணறுகிறார்.

காட்டாதே முகம் பின்பக்கம்;

கலப்பையைப் பிடித்து உழு என்றார்!

ஆமென்.

மறுமுறையா?

காலந்தராது மறுமுறையாம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:59-60.
59வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
6
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அழைக்கும்போது அடிபணிவதுதான், 
ஆண்டவர் காட்டும் இறைப்பணியாம்.
உழைக்கும் வலுவும் உதவும் பொருளும்,
உவந்து அருளக் குறைவிலையாம்.
பிழைப்பிற்கென்று போக்குச் சொல்லி,
போகாதிருத்தல் பொறுப்பிலையாம்.
கழைக்கூத்தாடி கடவுளை மறப்பின்,
காலந்தராது மறுமுறையாம்!
ஆமென்.

ஆடுகளைப் பாருங்கள்!

ஆடுகளைப் பாருங்கள்!


அறுப்பவரைத்தான் ஆடும் நம்பும்;

அதனைத் தடுப்பின், நம்மேல் எம்பும்.

வெறுப்பரசியல்தான் இன்று வெல்லும்;

வீணர் என்று நமையும் சொல்லும்.

பொறுக்கும் பண்பை இறையில் பாரும்;

பொங்கி எழுந்தால் துயரே சேரும்.

கறுப்பு ஆடுகள் நல்விலை போகும்;

கண்ணைத் திறவும், அவை கறியாகும்!


-கெர்சோம் செல்லையா.