சான்று!

சான்று!

இறை மொழி: யோவான் 15:26-27.

26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

27. நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.  

இறை வழி:

இறைவனின் சான்றாய் இந்நிலம் வந்த
இயேசுவின் சான்று, ஆவியரே.
முறை அறியாமல்  கூட்டிக்கழிக்கிற,
முதிரா நாமோ, பாவியரே.
திரை மறைவிருக்கும் தெய்வம் தந்த
தெளிந்த சான்று ஆவியரே.

சிறை விட்டகன்று, கறையுமழிக்கிற, 

செஞ்சான்றாவோம், பாவியரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏது இல்லை, எனினும்….

ஏது எதுவுமில்லை!
இறை மொழி: யோவான் 15:25.

25. முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

இறைவழி:
சூது என்பதை அறிவாய் நினைத்து,
சூழ்ச்சி செய்தல் அறமில்லை.
ஏது இல்லை, எனினும் இணைத்து,
எதிரி ஆக்குதல் அறமில்லை.
வாது செய்வதாய் தீதைப் பிணைத்து,
வாழ்வழித்தல் அறமில்லை.
தூது தருகிற இறையை அணைத்து,
துயர் போக்குல், அறமாகும்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

என்ன கற்கிறோம்?

வெறும் இளங்கலைப் பட்டமேயன்றி,
வேறு பட்டம் எடுக்கவில்லை.
அரும் செல்வமாய்த் தோண்டியெடுத்தும்,
அது பறக்கையில், தடுக்கவில்லை.
பெரும் பொருள் தேடி அலைந்தேனேயன்றி,
பிறப்பின் நோக்கம் கற்கவில்லை.
நறும் மணமாய் இறை நற்செய்தி தரவே,
நான் வேறிடம் நிற்கவில்லை!

-கெர்சோம் செல்லையா.

பகை ஏன்?

பகை!

இறை மொழி: யோவான் 15:24.

  1. வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

இறை வழி:

எத்தனையோ அருஞ்செயல்கள் செய்தும்,
இயேசுவைப் பலபேர் ஏற்கவில்லை.
அத்தனையும் நம் வாழ்விற்கிருந்தும்,
அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை.
இத்தனைப் பகையும் வெறுப்பும் எதற்கு?
ஏன் என எனக்கும் புரியவில்லை.
மொத்தமும் அலகையின் குடியிருப்பு;
மீளார் அறிவைத் தெரியவில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பகை!

பகை!

இறை மொழி: யோவான் 15:22-23.

  1. நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
  2. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

இறை வழி:
சொல்லிக் கொடுத்தும் அவர் ஏற்கவில்லை.
சொன்னவரை நம்பிப் பார்க்கவில்லை.
உள்ளில் இருக்கிற பகை வெறியால்,
உதவி, பசி துயர் தீர்க்கவில்லை.
கள்ளின் மயக்கம் இனி தெளியாதோ?
கனியும் இயேசுவுள் களியாதோ?
அள்ளிச் செல்லுதே தீப்பிழம்பு.
அறிந்த கண்ணும் விழியாதோ?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இறை அறியார்!

இறையறியார்!

இறை மொழி: யோவான் 15: 20-21.

  1. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.
  2. அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.

இறை வழி:

இறை மகன் வெறுத்து இறையிடம் செல்ல, 
இங்கே பலபேர் துடிக்கிறார். 
மறை மொழி மறுத்து, மனிதமும் கொல்ல,
மறைவில் இருந்தும் வெடிக்கிறார்.
சிறை இருப்பறிந்து வெளிவர நல்ல
செவ்வழி நாடுவோர் படிக்கிறார். 
முறை வழி இயேசு, அறிந்தோர் சொல்ல,
முழுதும் நம்பினார் பிடிக்கிறார்!

ஆமென். 
-கெர்சோம் செல்லையா.

இயேசுவே மாதிரி!

இயேசுவே மாதிரி!

இறை மொழி: யோவான் 15:17-19.

  1. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
  2. உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
  3. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

இறை வழி:

கல்லடி படுகிற மா மரம் காண்போம்;
கவலை போகக் கற்றிடுவோம்.
சொல்லடி கேட்டு, துவண்டது போதும்.
சொல்பவர் உறவே, பற்றிடுவோம்.
வில்லடி வீரர் வீழ்வதும் காண்போம்;
வெறியும் வெறுப்பும் அற்றிடுவோம்.
நல்லடியாருக்கு மாதிரியாகும்
நம்மிறை அன்பே, பெற்றிடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அப்பாலே போ!

அப்பாலே போ, அலகையே!

ஒருவர் ஒரு சமயத்தைக் குறித்துப் பேசுகிறார் எனில், அச்சமயத்தைக் குறித்து ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அடிப்படைக் கருத்துகள் அறியாமல், அதைப் பின்பற்றுவோரின் பற்றினைப் புரியாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, பலர் பேசி இன்று, தங்கள் அறியாமையைப் பறைசாற்றுகிறார்கள். இவர்கள் நாக்கு, வாக்கிற்கும் பேசலாம், பதவிபெறும் நோக்கிற்கும், பேசலாம்.

ஆனால் அறிவுடையார் ஏற்கார்,

அவர் வரிசையில் சேர்க்கார்!

அன்று சீமோன், இன்று சீமான்! அவ்வளவுதான்.

அன்று ஆண்டவர் சொன்னதை இன்று நாமும் கூறுவோம்.

“அப்பாலே போ சாத்தானே!”

-கெர்சோம் செல்லையா.

தெரிந்தார்!

என்னையும் தெரிந்தார்!
இறை மொழி; யோவான் 15:16.

  1. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.  

இறை வழி:

முன்னிலை வாழ்க்கையை நோக்கிப் பார்த்தேன்.
முரடன் மூடன் எனத்தான் இருந்தேன்.
என்னிலை காண்கிற  இயேசுவைப் பார்த்தேன்;
இடைவெளி பெரிது, யானோ பொருந்தேன்.
அந்நிலை  அகற்றிட அழைத்ததும் பார்த்தேன்;
அவர் தெரியாவிடில் அடியனும் திருந்தேன்.
நன்னிலை என்ன? நான் இன்று பார்த்தேன்;
நற்கனி அன்பு, வருவதால் வருந்தேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

நண்பர்!

நண்பன்!

இறை மொழி: யோவான் 15:14-15.

14. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

இறை வழி:

அன்புடன் ஒருவர்  பணி செய்வாரெனில்,
அவரை மதிப்பார் அவர் தலைவர்.
இன்புறு நெஞ்சில் இடமும் கொடுத்து,
இவர்  என்  நண்பர் என அணைப்பர்.
பண்புடன் வாழ, தமை அளிப்பாரெனில் 
பலர் முன்னிலையில் உயர்வடைவர்.
பின்னால் வருவதை முன்னால் அறியும், 

பேரறிவிலும் இறை இணைப்பர் !

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.