இயேசுவே மாதிரி!

இயேசுவே மாதிரி!

இறை மொழி: யோவான் 15:17-19.

  1. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
  2. உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
  3. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

இறை வழி:

கல்லடி படுகிற மா மரம் காண்போம்;
கவலை போகக் கற்றிடுவோம்.
சொல்லடி கேட்டு, துவண்டது போதும்.
சொல்பவர் உறவே, பற்றிடுவோம்.
வில்லடி வீரர் வீழ்வதும் காண்போம்;
வெறியும் வெறுப்பும் அற்றிடுவோம்.
நல்லடியாருக்கு மாதிரியாகும்
நம்மிறை அன்பே, பெற்றிடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அப்பாலே போ!

அப்பாலே போ, அலகையே!

ஒருவர் ஒரு சமயத்தைக் குறித்துப் பேசுகிறார் எனில், அச்சமயத்தைக் குறித்து ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அடிப்படைக் கருத்துகள் அறியாமல், அதைப் பின்பற்றுவோரின் பற்றினைப் புரியாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, பலர் பேசி இன்று, தங்கள் அறியாமையைப் பறைசாற்றுகிறார்கள். இவர்கள் நாக்கு, வாக்கிற்கும் பேசலாம், பதவிபெறும் நோக்கிற்கும், பேசலாம்.

ஆனால் அறிவுடையார் ஏற்கார்,

அவர் வரிசையில் சேர்க்கார்!

அன்று சீமோன், இன்று சீமான்! அவ்வளவுதான்.

அன்று ஆண்டவர் சொன்னதை இன்று நாமும் கூறுவோம்.

“அப்பாலே போ சாத்தானே!”

-கெர்சோம் செல்லையா.

தெரிந்தார்!

என்னையும் தெரிந்தார்!
இறை மொழி; யோவான் 15:16.

  1. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.  

இறை வழி:

முன்னிலை வாழ்க்கையை நோக்கிப் பார்த்தேன்.
முரடன் மூடன் எனத்தான் இருந்தேன்.
என்னிலை காண்கிற  இயேசுவைப் பார்த்தேன்;
இடைவெளி பெரிது, யானோ பொருந்தேன்.
அந்நிலை  அகற்றிட அழைத்ததும் பார்த்தேன்;
அவர் தெரியாவிடில் அடியனும் திருந்தேன்.
நன்னிலை என்ன? நான் இன்று பார்த்தேன்;
நற்கனி அன்பு, வருவதால் வருந்தேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

நண்பர்!

நண்பன்!

இறை மொழி: யோவான் 15:14-15.

14. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

இறை வழி:

அன்புடன் ஒருவர்  பணி செய்வாரெனில்,
அவரை மதிப்பார் அவர் தலைவர்.
இன்புறு நெஞ்சில் இடமும் கொடுத்து,
இவர்  என்  நண்பர் என அணைப்பர்.
பண்புடன் வாழ, தமை அளிப்பாரெனில் 
பலர் முன்னிலையில் உயர்வடைவர்.
பின்னால் வருவதை முன்னால் அறியும், 

பேரறிவிலும் இறை இணைப்பர் !

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

பேரன்பு!

பேரன்பு!

இறை மொழி: யோவான் 15:13.

13. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.  

இறை வழி:

தன்னுயிர் கொடுக்கத் தயங்காதிருத்தல்,
தகைசால் அன்பெனக் கற்கிறேன்.
இன்னுயிர் ஈந்து, என்னையும் மீட்கிற,
இறைமகன் பண்பினால் நிற்கிறேன்.
என்னுயிர் மூச்சு இயங்காதிருத்தல்,
என்கிற நொடி வரை கேட்கிறேன்.
அன்பையே தாரும், அன்பையே தருவேன்.
அடியனும் ஆன்மா மீட்கிறேன்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அன்பு!

அன்பு!

இறை மொழி: யோவான் 15:12.

  1. நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

இறை வழி:

இன்னொரு மாதிரி தேவை இல்லை.
இயேசுவே போதும், ஏற்கிறேன்.
நன்னரும் வாழ்க்கை வேறேயில்லை.
நானவரையே பார்க்கிறேன்.
இன்னில வாழ்வின் நோக்கம் என்ன?
இறையன்பென்று அறிகிறேன்.
சொன்னவர் இயேசு, செய்வது என்ன?
சொல்பவரையே தெரிகிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.